
என் சமூகம் குறித்துப் பேசத் தயங்கிய காலம் என் வாழ்வின் ஆரம்பத்தில் உண்டு. அம்பேத்கரை எப்போது கண்டடைந்தேனோ அன்றிலிருந்து எனக்குள் பெரிய மாற்றம் விளைந்துவிட்டது
நாகராஜ் மஞ்சுலே... மராத்தி மொழி இலக்கியத்தையும் மராத்தி சினிமாவையும் நாடறியச் செய்த கவிஞர் மற்றும் இயக்குநர். பாலிவுட்டுக்காக ‘ஜுண்ட்’ படத்தில் அமிதாப் பச்சனை இயக்கி வெற்றிக்கணக்கை ஆரம்பித்திருக்கும் சென்சேஷனல் இயக்குநர். நாகராஜின் நடிப்பில் உருவான ‘கர் பண்டூக் பிரியாணி’ என்ற மராத்தி மொழிப் படம் சமீபத்திய மகாராஷ்டிர மாநிலத்தின் ஹிட்.
“தமிழ் சினிமா எனக்கு ரொம்பப் பிடிக்கும். தமிழ்நாடு எப்படி இருக்கு... நீங்க எப்படி இருக்கீங்க? ‘ஃபான்றி’, ‘சாய்ரத்’ படங்கள் தமிழ் சினிமா போன்ற சாயலில் இருந்ததாகச் சொன்னார்கள். தென்னிந்திய சினிமாக்களை இப்போதுதான் பாலிவுட் கவனிக்க ஆரம்பித்திருக்கிறது. நான் எப்போதோ கவனிக்க ஆரம்பித்துவிட்டேன்!”
- அக்கறையோடு பேசும் உன்னத மனிதர் நாகராஜ் மஞ்சுலேவுடன் ஓர் உரையாடல்...
“இயக்குநர்கள் ஹீரோக்களாக மாறுவது தமிழ் சினிமாவில் பரிச்சயம். மராத்தி சினிமாவில் இதுவே முதல்முறை. ஹீரோவாக நடித்த அனுபவமும் வரவேற்பும் எப்படியிருந்தது?”
“நல்ல வரவேற்பு. கேமரா எனக்குப் புதிதல்ல. நான் இயக்கிய முதல் சினிமா ‘ஃபான்றி’யில் சின்ன பாத்திரத்தில் நடித்திருந்தேன். அதற்கு முக்கியக் காரணம், இளம் பிராயத்தில் சோலாப்பூரில் பள்ளிக்கல்வி பயிலும்போது நிறைய நாடகங்களில் நடித்திருக்கிறேன். ‘ஃபான்றி’ படத்தின் உருவாக்கத்தின்போது அதில் நடித்த சிறுவர்களுக்கு புரியவைக்க நான் நடித்துக் காட்டுவேன். அப்போதுதான் நமக்கு நடிப்பு நன்கு வருகிறது என்று எனக்குப் புரிந்தது. ‘சாய்ரத்’ படத்தில் கிராமத்தில் நடக்கும் கிரிக்கெட் போட்டியின் கமெண்டரி கொடுப்பவராக வந்தேன். அதே படத்தில் ‘ஜிங்காத்’ பாடலில் நானும் அட்மாஸ்பியரில் ஆடிவிட்டுப் போனேன்.

அதன்பிறகும் நான் தொடர்ந்து நடிப்பேன் என்று நினைக்கவில்லை. ‘தார்’ என்ற குறும்படம், ‘ஹைவே’ என்ற பெரிய சினிமா என அடுத்தடுத்த வாய்ப்புகள் வர, நட்புக்காக நடிக்க ஆரம்பித்தேன். தேசிய விருது பெற்ற இயக்குநர் கஜேந்திரா ‘தி சைலன்ஸ்’ என்ற மராத்திப் படத்தில் நடிக்க என்னை அழைத்திருந்தார். நெகட்டிவான ஒரு சைக்கோ கேரக்டர் அது. என் நண்பர்கள் வேண்டாம் என்று சொன்னார்கள். ஆனால், நான் நடித்தேன். மனைவியைக் கொடுமைப்படுத்தும் அந்த கேரக்டருக்கு நான் நடிப்பால் நியாயம் செய்ததாக மீடியாக்கள் எழுதியிருந்தன. இது எல்லாமே தோற்றத்தில் நான் எப்படியிருக்கிறேனோ அப்படியே வந்த படங்கள்.
ஆனால், அதன்பிறகு வந்த இயக்குநர் ஹேமந்த் அவ்டாடே, ‘கர் பண்டூக் பிரியாணி’ (வீடு துப்பாக்கி பிரியாணி) படத்தின் கதையைச் சொன்னபோது அதில் வரும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரோல் பவர்ஃபுல்லாக இருந்தது. ‘சிங்கம்’ அஜய்தேவ்கன் போன்று சண்டை போடும் ரோல் அது. படத்தில் மாவோயிஸ்ட் ரோல் ஒன்றும் இருந்தது. மாவோயிஸ்ட் ரோல்தான் நமக்கு என்று நினைத்தேன். ஏனென்றால் போலீஸ் ரோல் நமக்கு செட்டாகாது. அதை வேறு யாருக்கோ சொல்லப்போகிறார் என்று பார்த்தால், அது எனக்கான ரோல் என்று தெரிய வந்தது. மாவோயிஸ்ட் ரோலில் சாயாஜி ஷிண்டே சார் நடித்தார். நடிப்பு என் ரகசிய விருப்பம் என்பதை உணர்ந்ததால் மறுக்காமல் உடம்பை ஃபிட்டாக்கிக்கொண்டு கேமரா முன் நின்றேன். ஆரம்பத்தில் மாஸ் ஹீரோ போல் டயலாக் பேசி சண்டை போடத் தயக்கம் இருந்தது. ஆனால், இதைத்தானே இத்தனை வருடங்களாக இங்கு எல்லா ஹீரோக்களும் செய்கிறார்கள். நாமும் செய்துதான் பார்ப்போமே என்று நினைத்து ரசித்து நடித்தேன். கமர்ஷியலாகவும் கருத்தியலாகவும் விமர்சகர்களும், மக்களும் ரசித்து ஏற்றுக் கொண்டது இரட்டிப்பு மகிழ்ச்சி. சினிமா அதிகம் பார்க்காத விதர்பா பகுதி மக்கள் என்னைத் தேடிவந்து வாழ்த்தியது மனநிறைவைத் தருகிறது!”
“அடுத்து ஹீரோவாக பாலிவுட்டில் உங்களை எதிர்பார்க்கலாமா?”
“(சிரிக்கிறார்) அந்த அளவுக்கு நிலைமையை மோசமாக்க வேண்டுமா? ஆனால், நல்ல வாய்ப்புகள் வந்தால் எந்த மொழியானாலும் நடிப்பேன். இயக்கமும் கவிதையும் என் சுவாசம் போன்றது. அவற்றை என்றும் விட மாட்டேன். அதுதான் என் அடையாளம். ‘ஃபான்றி’, ‘சாய்ரத்’ போல இன்னும் நிறைய சினிமாக்கள் எடுக்க வேண்டியிருக்கிறது!”
“உங்கள் இளம்பிராயம் கடினமானது என்று கேள்விப்பட்டிருக்கிறோம்... ‘ஃபான்றி’ படத்தில் வந்த ஜப்யா கேரக்டர் நீங்கள்தானா?”
“அது நான் மட்டும் அல்ல...இந்தியா முழுவதும் பரவியிருக்கும் தலித் மக்களின் சிறுவயது அனுபவம் அதுவாகத்தான் இருக்க முடியும். ஜப்யாவுக்கும் பரியேறும் பெருமாளின் பரியனுக்கும் ஏற்பட்ட அனுபவங்கள் ஒன்றுதான். சாதி என்ற ஒன்று எப்போதும் இங்கு ஒரு நச்சுப் பாம்பைப் போல சுற்றிக்கொண்டே இருக்கிறது. வருங்கால சந்ததியினருக்கு அந்தப் பாம்பிலிருந்து விடுதலை கொடுத்தே ஆக வேண்டும். அந்தப் பொறுப்புணர்வோடுதான் சினிமாவில் இருக்கிறேன்.
என் சமூகம் குறித்துப் பேசத் தயங்கிய காலம் என் வாழ்வின் ஆரம்பத்தில் உண்டு. அம்பேத்கரை எப்போது கண்டடைந்தேனோ அன்றிலிருந்து எனக்குள் பெரிய மாற்றம் விளைந்துவிட்டது. அம்பேத்கரைவிட ஓர் ஆளுமையை, ஒடுக்குமுறையை உடைத்துப் போட்டு வெளிவந்த நாயகனை வரலாற்றில் எங்கேனும் காண முடியுமா என்ன? அவரைப் படிக்கப் படிக்க நான் விரிவடைந்தேன். அறிவும் ஆற்றலும் பெருகியது. நான் தனி மனிதனல்ல என்பதை உணர்ந்தேன். ஒரு கட்டத்தில் ‘ஃபான்றி’ நாயகன் ஜப்யாவைப்போல திருப்பி அடிக்க ஆரம்பித்தேன். எங்கெல்லாம் என் அடையாளம் விமர்சிக்கப்படுகிறதோ அங்கெல்லாம் என் அடையாளத்தை பகிரங்கமாகப் பேச ஆரம்பித்தேன். ‘என்ன, நீ அந்த சாதிக்காரனா?’ என்று யாரேனும் ஏளனமாகக் கேட்டால், கம்பீரமாக, ‘நான் அந்த சாதிதான்... அதில் உனக்கு என்ன பிரச்னை? நான் தாழ்ந்தவனில்லை... தாழ்த்தப்பட்டவன்..!’ என்று கணீர் எனப் பேச ஆரம்பித்தேன்.
எப்போது நான் சாதியைப் பற்றி மனம் திறந்து பேச ஆரம்பித்தேனோ, அப்போதே சாதி பற்றிய அவதூறுகள், ஏளனங்கள் குறைய ஆரம்பித்தன. நன்கு படித்தேன்...சினிமாத்துறைக்கு வந்தேன். என் வலியைத் திரைமொழியில் பேசினேன். நான் உணர்ந்த அந்த வலிதான் பன்றிபோல் பெரும் ஒலி எழுப்பி வெளிவந்தது! பன்றியை ஒரு குறியீடாக்கினேன். சாதியை ஒழிக்க அதையே ஆயுதமாக்குவதும் ஒரு வழிதான்!”
“அடுத்து இயக்கப்போகும் படங்கள் பற்றி...”
“உங்களுக்கு கசாபா தாதாசாஹேப் ஜாதவ்வைத் தெரியுமா? இந்தியா சார்பாக முதல் தனிநபர் ஒலிம்பிக் பதக்கத்தைப் பெற்றுத் தந்த மராத்திய மல்யுத்த வீரர். 1952-ல் ஹாக்கிக்காக ஒலிம்பிக் பதக்கம் வாங்கிய இந்திய ஹாக்கி அணியை நாம் கொண்டாடிய அளவு அதே ஆண்டு தனிநபராகப் பதக்கம் வென்ற கசாபாவை நாம் கொண்டாடவில்லை. அவரைப் பற்றி வெளியே தெரியாமல் போய்விட்டது. இந்தியாவே கொண்டாடியிருக்க வேண்டிய வீரர். பதக்கம் வென்ற பிறகு காவல்துறையில் பணி செய்தவர் ஒரு விபத்தில் காயம்பட்டு சிகிச்சைக்குப் பணம் இல்லாமல் நோய்வாய்ப்பட்டு, வறுமையில் உழன்று இறந்துபோனார். அவரின் வாழ்க்கை சரித்திரத்தை சினிமாவாக எடுக்கப்போகிறேன். ஜியோ சினிமாவோடு சேர்ந்து அந்தப் படத்தை பிரமாண்டமாகத் தயாரிக்கப்போகிறேன்! இதுதவிர சூதாட்ட உலகை மையமாக வைத்து ஒரு பாலிவுட் படத்துக்கான திரைக்கதை உருவாக்கத்தில் இருக்கிறேன். விரைவில் அந்தப் படத்துக்கான அறிவிப்பு வரும்.”

“ஒரு படைப்பாளிக்கு எது அவசியம் என நினைக்கிறீர்கள்?”
“படைப்புச் சுதந்திரம்... அது இருந்தாலே போதும், இங்கு நல்ல படைப்புகள் நம்மைத் தேடி வரும். நம்மைச் சுற்றி ஆயிரம் கதைகள் சொல்லப்படாமல் இருக்கின்றன. அவற்றை மக்களிடம் கொண்டு சேர்த்தாலே போதும். அதேபோல நம் மண் சார்ந்த இலக்கியம் படித்தால் சிந்திக்க இன்னும் நிறைய விஷயங்கள் தோன்றும். இதெல்லாவற்றையும்விட அரசியல் தெரிந்தால்தான், யார் பக்கம் தன் கலையின் மூலம் நிற்க வேண்டும் என்ற தெளிவு ஒரு படைப்பாளிக்குக் கிடைக்கும்!”
“உங்கள் கனவுகள், லட்சியங்கள் என்ன?”
“சாதியப் பாகுபாடில்லா இந்தியா உருவாக என்னால் ஒரு செங்கல் வைக்க முடிந்தாலே அது வெற்றிதான். அதற்கான நீண்ட பயணம்தான் என் வாழ்க்கை. கல்வியால் இந்தச் சமூகத்தை மேம்படுத்த வேண்டும். அதற்கான முயற்சியில் இருக்கிறேன். கவிதைத்தளத்திலும் இன்னும் தீவிரமாய் இயங்க வேண்டும் என நினைக்கிறேன்.
அம்பேத்கரையும், 19-ம் நூற்றாண்டில் வாழ்ந்த மகாத்மா ஜோதிராவ் - சாவித்ரிபாய் புலே தம்பதியரின் சீர்திருத்தக் கருத்துகளையும் நம் இளம் தலைமுறையினருக்குக் கொண்டு செல்ல வேண்டும். அதற்குத் திரைப்படம் எனும் கருவி எனக்கு உதவுகிறது!”