
என்னதான் நடிப்பு என்றாலும் அம்மாவுக்கு மகன் ஸ்பெஷல் தானே. ‘பிங்க்’ படம் பார்த்துவிட்டுக்கூட எதுவும் சொல்லவில்லை. ‘இரவில் பெண்கள் நடமாடும் சுதந்திரம் இல்லாத சூழலை விளக்க உன் கேரக்டர் பயன்பட்டிருக்கிறது’ என்றார்கள்.
இன்றைய தேதியில் பாலிவுட்டின் மோஸ்ட் வான்டட் வில்லன் நடிகர், விஜய் வர்மாதான். இந்தி வெப்சீரிஸ்களிலும் சினிமாக்களிலும் நெகட்டிவ் ரோல் என்றாலே ‘கூப்பிடு விஜய் வர்மாவை’ என்கிறார்கள். பார்ப்பதற்கு நம்ம ஊர் ரகுவரனின் தம்பி போல இருக்கும் விஜய் வர்மாவுடன் ஓர் உரையாடல்...
“யார் சார் நீங்க... தெற்கே தெலுங்கு பேசி நடிக்கிறீங்க, வடக்கே இந்தி பேசி நடிக்கிறீங்க?”
“நான் ஹைதராபாத்தில் பிறந்த லோயர் மிடில் க்ளாஸ் பையன். பூர்வீகம் ராஜஸ்தான். ஆனால், டெக்ஸ்டைல் பிசினஸுக்காக ஒரு தலைமுறைக்கு முன் ஹைதராபாத் குடிபெயர்ந்த குடும்பம் எனது. சின்ன வயசிலிருந்தே நடிப்பின்மீதும் மாடலிங் மீதும் அதீத ஆர்வம். குடும்பத்தில் கடைக்குட்டி என்பதால் என் இஷ்டப்படி விட்டுவிட்டார்கள். தியேட்டர் ஆர்ட்டிஸ்ட் ஆக வேண்டும் என்பது கனவு. புனே திரைப்படக் கல்லூரியில் படித்த பிறகு தியேட்டர் ஆர்ட்டிஸ்டாக மும்பையில் பிஸியாக இருந்தேன். நடிப்பைத் தாண்டி எனக்கு மாடலிங் ரொம்பப் பிடிக்கும். அதனால் மும்பைவாலாவாக மாறிவிட்டேன். குறும்படங்கள், மாற்று சினிமா என மெல்ல பாலிவுட்டுக்குள் நுழைந்துவிட்டேன்..!”

“நெகட்டிவ் ரோல்கள்மீது ஏன் அவ்வளவு ஆர்வம்? நடிக்கும் வெப்சீரிஸ், படங்கள் எல்லாவற்றிலும் ஏன் கொடூரமான சைக்கோத்தனமான ரோல்களைத் தேர்ந்தெடுக்கிறீர்கள்?”
“யாராவது எனக்கு இந்த ரோல்தான் வேண்டுமென்று அப்படிப்பட்ட கேரக்டர்களில் தொடர்ந்து நடிப்பார்களா? என் நடிப்புக்கும் தோற்றத்துக்கும் அப்படிப்பட்ட கேரக்டர்கள் நன்கு செட் ஆகின்றன.
நீங்கள் பார்த்த ‘She’, ‘Dahaad’ என்ற இரண்டு வெப் சீரிஸ்களில் அப்படிப்பட்ட கொடூர சைக்கோ வில்லன் ரோல்களில் நடித்திருப்பேன். ‘பிங்க்’ படத்தில் எனக்கான நெகட்டிவ் ரோல் போலவே அது இருந்தது. ‘டார்லிங்ஸ்’ படத்தில் மனைவி ஆலியா பட்டை டார்ச்சர் செய்யும் சைக்கோ கணவன் ரோல் பண்ணினேன். தெலுங்கில் நானிக்கு வில்லனாக ‘மிடில் க்ளாஸ் அப்பாயி’ படத்தில் நடித்திருந்தேன். அதுவும் அப்படிப்பட்ட கொஞ்சம் சைக்கோத்தனமான வில்லன்தான். நெகட்டிவ் ரோல்களில் அதேபோல நடிப்பதால் ஒரேமாதிரி தோன்றியிருக்கலாம். மற்றபடி தமிழில் வந்த நாடோடிகள் படத்தின் ரீமேக்தான் ‘ரங்க்ரேஸ்.’ அதில் பாசிட்டிவ் ரோல்தான். ‘கல்லி பாய்’ படத்திலும் அப்படித்தான். ‘கேங்ஸ் ஆஃப் கோஸ்ட்’ படத்தைப் பார்த்தால் என் ரோல் கண்ணிமைக்கும் நேரத்தில் வந்துபோகும். அதுவே நகைச்சுவையாக இருக்கும். என்ன கேரக்டர்கள் ஏற்கிறோமோ அதுவாகவே சில காலம் பார்வையாளர்களுக்குத் தெரிவதுதான் தேர்ந்த கலைஞனுக்கு அழகு. அமிதாப் பச்சன், ஷாருக் கான் எல்லோரும் இப்படி நெகட்டிவ் கேரக்டர்களை தங்கள் கரியரின் தொடக்கத்தில் செய்துதான் ஹீரோவாக உருவானார்கள். எனக்கும் மரத்தைச் சுற்றி டூயட் பாடி ரொமாண்டிக் ஹீரோவாக நடிக்க ஆசை. விரைவில் அது நிறைவேறும் என நம்புகிறேன்!”

“உங்கள் நெகட்டிவ் ரோல்களுக்கு வீட்டில் என்ன மாதிரியான ரியாக்ஷன்ஸ் கிடைக்கும்?”
“என்னதான் நடிப்பு என்றாலும் அம்மாவுக்கு மகன் ஸ்பெஷல் தானே. ‘பிங்க்’ படம் பார்த்துவிட்டுக்கூட எதுவும் சொல்லவில்லை. ‘இரவில் பெண்கள் நடமாடும் சுதந்திரம் இல்லாத சூழலை விளக்க உன் கேரக்டர் பயன்பட்டிருக்கிறது’ என்றார்கள். ஆனால், ‘She’ வெப் சீரிஸில் என் ரோலைப் பார்த்து, ‘ஏன் இவ்ளோ கெட்டவனா நடிக்கிறே?’ என்றார் அம்மா. உண்மையில் எனக்குக் கெட்டவனாக நடிப்பதுதான் சவாலாக இருக்கிறது. நிஜத்தில் அக்கா, அண்ணன்களின் பாசத்தில் வளர்த்தெடுக்கப்பட்டவன் நான். எனக்குக் கோபமே வராது. சிரித்துக்கொண்டே இருப்பேன். ஆனால், படங்களில் முறைத்துக்கொண்டே இருக்க வேண்டும். அந்த சவால் எனக்குப் பிடித்திருக்கிறது. குடும்பமே, ‘ஓ... நீ இப்படியெல்லாம் நடிப்பியா?’ என ஆச்சர்யப்படுகிறது. அம்மா வழக்கம்போல, ‘டேய்... அம்மா பாவம் இல்லையா? இப்படி நடிச்சா யார் பொண்ணு கொடுப்பா?’ எனச் சிணுங்குகிறார். ஆனாலும் இப்போதெல்லாம் இதெல்லாம் நடிப்புதான் எனப் புரிந்துகொண்டு எனக்காக புரொமோஷன் வேலை எல்லாம் அம்மா செய்கிறார்கள். அம்மாவை விடுங்கள். என்னாலேயே ஷூட்டிங்கில் சில கேரக்டர்களின் கொடூரத்தன்மையைத் தாங்க முடியவில்லை. ‘டேக் ஓகே’ என்றதும் உதவி இயக்குநர்களில் ஆரம்பித்து சக நடிகர்கள் வரை கட்டிப்பிடித்து என்னை ஆசுவாசப்படுத்திக்கொள்கிறேன்.”


“நடிப்பில் உங்களுடைய ரோல் மாடல் யார்?”
“இந்த விஷயத்தில் நான் கொஞ்சம் வித்தியாசமானவன். எனக்கென ரோல் மாடல் யாரையும் வைத்துக் கொள்ளவில்லை. நிஜத்தில் நடிப்பில் என்னை நான் தாண்டிப் போக வேண்டும் என உற்சாகமாக ஓடிக் கொண்டிருக்கிறேன். என் வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கும்போது, ‘அட, இத்தனை கேரக்டர்கள் பண்ணியிருக்கிறோமா?!’ என ஆச்சரியப்பட வேண்டும் என நினைக்கிறேன். அதற்காக நிறைய பரிசோதனை முயற்சிகள் செய்யப்போகிறேன்.”
“தமிழ் சினிமா பார்ப்பீர்களா..?”
“அவ்வப்போது பார்த்திருக்கிறேன். பொதுவாக தென்னிந்திய சினிமாக்கள் எனக்குப் பிடிக்கும். நிறைய சினிமா ஜாம்பவான்கள் மெட்ராஸிலிருந்து பாம்பேக்கு வந்து கொடிநாட்டியிருக்கிறார்கள். ஷூட்டிங் இல்லாத நாள்களில் ஓ.டி.டி-யில் நண்பர்கள் பரிந்துரை செய்யும் படங்களைப் பார்ப்பேன். தனுஷ் படங்கள் வெரைட்டியானவை. நானி என் நண்பர். ‘தசரா’வில் அசத்தியிருக்கிறார். பகத் பாசில் எல்லாப் பாத்திரங்களிலும் கலக்குகிறார்!”


“நடிகைகளுடன் நிறைய கிசுகிசு வருகிறதே..?”
“நான் பெண்கள் நிறைந்த குடும்பத்தில் வளர்ந்தவன். அம்மா செல்லம். எனக்கு நட்பில் ஆண்-பெண் பாகுபாடு பார்க்கத் தெரியாது. நிறைய பெண்கள் ஆத்மார்த்தமான தோழிகளாக இருக்கிறார்கள். அதில் ஒருவர் செலிபிரிட்டியாக இருப்பதாலேயே இப்படி கிசுகிசு எழுதுகிறார்கள். என் பி.ஆர் டீமில் ஆரம்பித்து, நான் நடிக்கும் படங்களின் பெண் இயக்குநர்கள் வரை எனக்கு நல்ல தோழிகள் நிறைய பேர் இருக்கிறார்கள். உண்மையில் பெண்கள்தான் என் லக்கி சார்ம். அன்புவயப்பட்ட மனிதனாக நம்மை உணரச் செய்வது தூய்மையான ஆண்-பெண் நட்புதான். தமன்னா மட்டுமல்ல, லேட்டஸ்ட்டாக என்னுடன் நடித்த சோனாக்ஷி சின்ஹாவும் எனக்குக் கிடைத்த அற்புதமான தோழிதான்!”