
இமயமலையில் இருக்கும் கேதார்நாத் புனிதத்தலத்தில் பக்தர்களைச் சுமந்து அழைத்துச் செல்லும் மன்சூர் என்ற இஸ்லாமிய இளைஞன் பாத்திரம் அவருக்காகவே எழுதியதைப் போல இருந்தது.
பாலிவுட் சினிமாவில் புதிதான, கொஞ்சம் அரிதான சாதனையை நிகழ்த்தியிருக்கிறார் கனிகா தில்லான் என்ற பெண். இயக்குநர்களும் ஹீரோக்களும் கொடிகட்டிப் பறக்கும் அந்தக் கனவுத்தொழிற்சாலையில் அண்மையில் ‘ஹசீன் தில்ரூபா’ என்ற படத்தின் தொடக்கத்திலேயே முதல் பெயராக ஒரு கதாசிரியரின் பெயரோடு படம் தொடங்குவது, இதுவரை பாலிவுட் வரலாற்றில் கண்டிராதது. அந்த அளவுக்கு மூன்று வருடங்களில் ஐந்து படங்களுக்குக் கதை, திரைக்கதை வசனம் எழுதி ஆண்கள் கோலோச்சும் பாலிவுட்டில் கவனம் ஈர்த்திருக்கிறார் கனிகா. நீண்ட தேடுதல் வேட்டைக்குப் பிறகு அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தேன். அவரின் எழுத்தைப் போலவே சரளமாக வந்து விழுந்தன வார்த்தைகள்.
“ஒரு படத்தின் முதல் ஆளாக உங்கள் பெயரோடு ஆரம்பிப்பதிலிருந்து தெரிகிறது உங்கள் சாதனை. இதை எப்படி சாதித்தீர்கள்?”
“என் சினிமா வாழ்க்கையில் முக்கியமான நாள் அதுதான். இதே சினிமா உலகத்தில் என் பெயரைக்கூட டைட்டில் கார்டில் போடாமல், பணமும் கொடுக்காமல் ஏமாற்றிய ஆட்களும் இருக்கிறார்கள். எழுத்தை மதிக்காத அவர்களின் போக்கை மாற்றியிருப்பது என் உழைப்புதான். நிறைய போராட்டங்களின் முடிவு இது. இன்றைய இயக்குநர்கள் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே அழைத்து கேரக்டர்கள் பற்றி என்னிடம் கேட்டு காட்சியினை மெருகேற்றுகிறார்கள். இதைத் தொடக்கி வைத்தது அனுராக் காஷ்யப்தான். அவர் இயக்கிய மன்மர்ஸியானில் ஆரம்பித்தது இந்த சாதனை. அந்தப் படத்தில் அனுராக்குக்கு அடுத்து என் பெயரைத்தான் விளம்பரங்களில் பயன்படுத்தினார்கள். ஒரு பெண் எழுத்தாளரின் வித்தியாசமான கதை என்று போஸ்டரில் சொல்லியிருந்தார்கள். தற்போது ‘ஹசீன் தில்ரூபா’ படத்தில் என்னை முதன்மைப்படுத்திய நெட்ஃப்ளிக்ஸுக்கு நன்றி!”

“அதிகம் வெளியே தெரியாத ஸ்கிரிப்ட் சூப்பர்வைசர் என்ற வேலையிலிருந்துதான் உங்கள் கரியரை ஆரம்பித்திருக்கிறீர்கள்...அதைப்பற்றிச் சொல்லுங்களேன்!”
“லண்டனில் பட்டப்படிப்பு படிக்கும்போது சினிமாக்கள் விரும்பிப் பார்ப்பேன். எனக்கு இயக்குநராக வேண்டும் என்ற கனவுடன் நல்ல விமர்சகப் பார்வையும் இருந்தது. நாவல் எழுத வேண்டும் என்ற ஆசையும் இருந்தது. மும்பையில் ஒரு நண்பரின் உதவியோடு ஷாரூக்கானின் ரெட் சில்லீஸ் நிறுவனத்துக்கு இண்டர்வியூ போயிருந்தேன். என் கதை சொல்லும் ஆர்வத்துக்காகவே அவர் தயாரிப்பில் வந்த படங்களில் உதவி இயக்குநராகப் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது. ‘ஓம் சாந்தி ஓம்’ படத்தின் உதவி இயக்குநராக இருந்தபோது இயக்குநர் ஃபராகான் என்னை ஸ்கிரிப்ட் சூப்பர்வைசராகப் பரிந்துரைத்தார். அப்படியே மெல்ல மெல்ல திரைக்கதை எழுத ஆரம்பித்தேன். அனுஷ்கா நடித்த ‘சைஸ் ஜீரோ’ படத்தில் ஆரம்பித்த பயணம், இப்போது எட்டுப் படங்களுக்குக் கதை திரைக்கதை வசனம் எழுதி முடித்துவிட்டேன். இயக்குநராகும் நாள் விரைவில்..!”
“நீங்கள் எழுதிய `கேதார்நாத்’ படத்தில் ஹீரோவாக நடித்திருந்தவர் மறைந்த சுஷாந்த் சிங் ராஜ்புத். அவருடன் பணியாற்றிய அனுபவம் எப்படியிருந்தது?”
“அவரின் புன்னகை ரொம்பவே ஸ்பெஷல். இமயமலையில் இருக்கும் கேதார்நாத் புனிதத்தலத்தில் பக்தர்களைச் சுமந்து அழைத்துச் செல்லும் மன்சூர் என்ற இஸ்லாமிய இளைஞன் பாத்திரம் அவருக்காகவே எழுதியதைப் போல இருந்தது. நிஜமாகவே மனிதர்களைச் சுமக்கும் பயிற்சியை ஒரு மாதம் கடுமையாகச் செய்தபிறகே ஷூட்டிங்குக்குத் தயாரானார். கேரக்டரை ரசித்துச் செய்தார். படமெங்கும் சிரித்த முகத்தோடு வருவார். மன்சூர் எப்படி திடீரென உயிர்த் தியாகம் செய்து எல்லோரின் மனதையும் கனக்கச் செய்வாரோ அதேபோல நிஜத்தில் செய்துவிட்டார். அவர் நடித்த சில படங்களில் யதார்த்தமாக இப்படி இறப்பது போல அமைந்துபோனது வேதனையாக இருக்கிறது. அவரை வைத்து சாகாவரம் பெற்ற சூப்பர் ஹீரோ பாத்திரமொன்றை சினிமாவாக்க நினைத்திருந்தேன். சுஷாந்த் என்னை ஏமாற்றி விட்டார்!”





“வழக்கமான ஹீரோயின்கள் போல் இல்லாமல் உங்கள் ஹீரோயின்கள் எல்லோரும் தைரியசாலிகளாக இருப்பது நீங்கள் திட்டமிட்டு எழுதியதா?”
“அப்படி நினைத்து எழுதப்படவில்லை. ஆனாலும் நம் சிந்தனைதானே நம் எழுத்தாக இருக்க முடியும்? நான் எழுதி டாப்சி நடித்த இரண்டு படங்கள் `மன்மர்ஸியான்’, `ஹசீன் தில்ரூபா’ அப்படி என்னை ஓரளவு பிரதிபலிப்பதாக என்னை அறிந்தவர்கள் சொல்கிறார்கள்.
பெண்ணுக்கு ஒரே காதல்தான் இருக்க வேண்டும் என்பது நம் பொதுப்புத்தி. ஆண்டாண்டு காலமாக இந்திய சினிமாவில் ஆண்களுக்குக் காதல் தோல்வி ஏற்படும். அதிலிருந்து மீள இன்னொரு காதலில் விழுவான், புகைப்பான், குடிப்பான், இருமி இருமி சாவான். ஆனால், பெண் காதல் தோல்விகளை அப்படிக் காட்சிப்படுத்தியதே இல்லை. இங்கு புனிதப்படுத்தியே பல குற்றங்களைச் செய்கிறோம். இது பெண்கள் குறித்து இன்னும் மோசமான தாக்கத்தை ஆண்கள் மனதில் விதைக்கும். தவறான ஒருவனைக் காதலித்த பெண் அவனை நிராகரித்தால், அவள் கழுத்தை அறுக்கும் அளவுக்குப் போய்விடுகிறான் ஒருவன். அப்படியென்றால் அவள் அவனைப் பிரிய எடுத்த முடிவு சரிதானே? கழுத்தை அறுக்கும் ஒருவனோடு எப்படி காலம் முழுக்க பயந்து வாழ முடியும்? மன்மர்ஸியானில் தன் துணையை இரண்டு ஆண்களின் காதலில் தேடும் ஒரு நாயகி பாத்திரம் பலரை ஈர்த்தது. அந்தச் சுதந்திரம் இந்தியாவில் எல்லாப் பெண்களுக்கும் கிடைக்காதுதான். ஆனால், அது என் வாழ்வில் நடந்த கதை. இந்தப் படத்தின் ஷூட்டிங்கின் முதல்நாளில் இயக்குநர் அனுராக் ஓப்பனாகக் கேட்டே விட்டார். ‘சொல்லு... நீ எழுதிய இரண்டு பேரில் யாரை நீ அதிகம் காதலித்தாய்?’ என்று! ‘இரண்டு பேரையும்!’ என்றேன். நான் எழுத்தில் மட்டுமல்ல, நிஜத்திலும் அப்படித்தான். இந்தியப் பெண்கள் காதல் விஷயத்தில் இன்னும் முற்போக்காக மாறவேண்டும்!”






“டாப்சியோடு மட்டும் பொதுவெளியில் அடிக்கடி தென்படுகிறீர்கள்? உங்கள் க்ளோஸ் ஃப்ரெண்டா?”
“என்னோட க்ரைம் பார்ட்னர். என்னைப் போல யோசிக்கும் பெண். டாப்சியோடு ‘ராஷ்மி ராக்கெட்’ படம் வரை மூன்று படங்கள் சேர்ந்து வேலை பார்த்திருக்கிறேன். நான் கனவு காணும் எல்லா பாத்திரத்தையும் நடிப்பில் கொண்டு வருகிறாள். இன்னும் பல சவாலான பாத்திரங்களை நடிக்கும் வலிமை கொண்ட பெண். என்னைப்போலவே இயக்குநராகும் ரகசியக் கனவை அவளும் வைத்திருக்கிறாள். கூடியவிரைவில் அவள் இயக்குநராகவும் பரிமளிப்பாள். டாப்சியைத் தவிர கங்கனா ரணாவத்தும் என் தோழிதான்!’’
“இப்போது இந்தியாவின் பிஸியான இளம் கதாசிரியர் ஆகிவிட்டீர்கள். எங்கிருந்து இத்தனை கதைகளை இவ்வளவு குறுகிய காலத்தில் பிடிக்கிறீர்கள்..?”
“அனுபவமே கதைகளைத் தரும். 39 வயதில் எனக்கு எத்தனை அனுபவங்கள் கிடைத்திருக்கப் போகிறது? ஆனால், நம் கற்பனைகளுக்கு எல்லைகள் இல்லை. என்னிடம் காதல் என்ற விஷயம் எப்போதும் இருக்கிறது. அதைவைத்து அடுத்த தலைமுறைக்கு என்னால் தொடர்ந்து எழுத முடியும் என்று உறுதியாக நம்புகிறேன். சின்னச் சின்ன ஐடியாக்கள் திடீரென மின்னலென வெட்டும். அப்படித் தோன்றும் போது குறித்து வைத்துக்கொள்வேன்.
‘ஹசீன் தில்ரூபா’ படத்தை எழுதியபோது சிறுவயதில் மலிவு விலையில் கிடைக்கும் பாக்கெட் த்ரில்லர் நாவல்கள் ஞாபகத்தில் வந்துபோயின. அவற்றை ரசித்துப் படிப்பேன். அந்தக் கதைகளை விரும்பிப் படிக்கும் ஒரு நபர் செய்யும் க்ரைம் எப்படியிருக்கும் என்பதாய் யோசித்தபோது கிடைத்ததுதான் அந்தப்படம். இதுபோல கிரேசி ஐடியாக்கள் எக்கச்சக்கமாய் நினைவடுக்கில் சேகரமாகி இருக்கின்றன. அவ்வப்போது நோட் போட்டு எழுதி வைத்து, நேரம் கிடைக்கும்போது மெருகேற்றுகிறேன். நீங்களேகூட தோன்றும் ஐடியாக்களைக் குறித்து வைத்துக்கொண்டு எழுதிப் பாருங்கள். அத்தனை கதைகள் உங்களால் எழுத முடியும்!”