Published:Updated:

நிர்பயா, பொள்ளாச்சி வழக்கு, மீ டூ... பதறவைக்கும் அந்த க்ளைமாக்ஸ்! #DeviShortFilm எழுப்பும் கேள்விகள்

 'தேவி' குறும்படம்
'தேவி' குறும்படம்

தினங்களை தள்ளிவைத்து விட்டுப் பெண்களை எப்போது கொண்டாடப் போகிறீர்கள் என்ற கேள்வியை மீண்டும் ஒருமுறை அழுத்தமாக எழுப்பியிருக்கிறது 'தேவி' குறும்படம்.

வருடந்தோறும் தவறாமல் பெண்கள் தினம் கொண்டாடப்படுகிறது. தினங்களைத் தள்ளிவைத்து விட்டு பெண்களை எப்போது கொண்டாடப் போகிறீர்கள் என்ற கேள்வியை மீண்டும் ஒருமுறை அழுத்தமாக எழுப்பியிருக்கிறது `தேவி' குறும்படம்.

Kajol
Kajol

நடிகை கஜோல், ஸ்ருதி ஹாசன் முதல்முறையாகக் குறும்படத்தில் நடித்திருக்க, இவர்களுடன் இணைந்து நீனா குல்கர்னி, ஷிவானி ரகுவன்ஷி உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். படத்தை பிரியங்கா பானர்ஜி இயக்கியுள்ளார்.

"பாலினப் பாகுபாடு, அதிகார துஷ்பிரயோகம், வன்முறை இதெல்லாம் அதிகமா இருக்கிற இந்தக் காலகட்டத்துல `தேவி' மாதிரியான கதையம்சம் இருக்கக்கூடிய படங்கள் வெளிவருவது ரொம்பவே முக்கியமான விஷயம். இதுல நானும் ஒரு பங்கா இருக்கேன்கிறதுல ரொம்ப சந்தோஷம்" என்று `தேவி'யில் நடித்தது குறித்து தனது அனுபவம் பகிர்ந்துள்ளார் கஜோல். மகளிர் தினத்தை முன்னிட்டு படம் யூ டியூபில் வெளியிடப்பட்டது.

பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை வழக்குகள் இந்திய நீதிமன்றங்களில் ஒரு லட்சத்திற்கும் அதிகம் நிலுவையில் உள்ளன. இந்தியா முழுவதும் ஒரு நாளில் மட்டும் சராசரியாக 90 பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். கற்பழிப்பு வழக்குகளில் தண்டனை பெறுபவர்கள் விகிதம் வெறும் 32% மட்டுமே என்ற உண்மைகளை அழுத்தமாகப் பேசியிருக்கிறது 'தேவி'.

குடும்பத்தலைவி, மாடர்ன் கேர்ள், மருத்துவ மாணவி, வாய் பேச முடியாத பெண், வெவ்வேறு குடும்பப் பின்னணிகொண்ட மத்திம வயதுப் பெண்கள் என ஒன்பது பேர் ஒரு சிறிய அறையில் இருக்கிறார்கள். குடும்பத்தலைவியான கஜோல் கடவுளுக்கு பூஜை செய்து கொண்டிருக்க, வாய் பேச முடியாத பெண் அந்த அறையிலிருக்கும் ஒரு பழைய டிவியை ஆன் செய்யும் காட்சியிலிருந்து 'தேவி' தொடங்குகிறது.

'devi'
'devi'
அவர்களில் அந்த காதுகேளாத வாய்ப்பேச முடியாதவள் டிவியைப் பார்த்துக்கொண்டிருக்கிறாள். ஒருத்தி அழுகையும் ஆத்திரமும் சேர சாய்வு நாற்காலியில் அமர்ந்திருக்கிறாள். சிகரெட் பிடித்தபடி இருப்பவள் முகத்தில் உலகத்தின் அனைத்தின் மீதும் நம்பிக்கை இழந்துவிட்ட தோற்றம். ஒருத்தி மருத்துவப் புத்தகங்களைப் புரட்டிக்கொண்டிருக்கிறாள். புர்கா அணிந்து அமர்ந்தபடி ஒருத்தி தன் கால்களுக்கு வேக்ஸிங் செய்துகொண்டிருக்கிறாள். வயதான சில பாட்டிகளும் அவர்களில் இருக்கிறார்கள். இவர்களுக்கு நடுவே ஒருத்தி கடவுளுக்குக் கற்பூரம் காட்டிக்கொண்டிருக்கிறாள்.

தொலைக்காட்சியில் ஒரு பாலியல் வழக்கு குறித்தான செய்தி போய்க்கொண்டிருக்கிறது. வெளியே காலிங் பெல் ஒலித்துக் கொண்டிருக்கிறது. ஒன்பது பேருக்கே அந்த வீட்டில் இடம் இல்லாததால் வெளியே காலிங் பெல் அழுத்திக் கொண்டிருப்பவரை உள்ளே சேர்த்துக்கொள்ளலாமா வேண்டாமா என்பதுதான் அவர்களிடையே வாதம். ஒவ்வொருவரும் எதனால் அங்கு வந்தார்கள் என்று பேசிக் கொள்கிறார்கள்.

ஹாலிவுட்டை உலுக்கிய மீ டூ பாலியல் வழக்கு: நிரூபணமான ஹார்வி மீதான குற்றச்சாட்டு

ஒருத்தி, கத்தியால் குத்தப்பட்டுதான் அங்குவந்ததாகச் சொல்கிறாள். ஒருத்தி உடைக்கப்பட்ட பீர் பாட்டிலால் பிறப்புறுப்பில் குத்தப்பட்டு தூக்கியெறியப்பட்டதாகச் சொல்கிறாள். ஒருத்தி தன் தலையில் கல்தூக்கிப் போடப்பட்டதாகச் சைகையிலேயே சொல்கிறாள். தான் கூட்டுப்பாலியல் வன்புணர்வால் இறந்ததாகச் சொல்கிறாள் ஒருத்தி. அவர்கள் பாலியல் வன்புணர்வு செய்துகொல்லப்பட்டவர்கள் என்பது அப்போதுதான் நமக்குப் புரியவருகிறது. அதுவரை இறுக்கமாய் இருந்த ஒவ்வொருவரும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமைகள் குறித்து பேச ஆரம்பிக்க, அது விவாதமாகவும் மாறுகிறது. கோபத்தோடும் ஆற்றாமையோடும் ஒவ்வொருவருக்குள்ளும் வெடித்து அந்தச் சிறிய அறை முழுக்க எதிரொலிக்கிறது.

வெள்ளைக் கோட் மாட்டிக்கொண்டு அந்த அறையின் ஓரத்தில் படித்துக்கொண்டிருக்கும் பெண் நமக்கு நிர்பயாவை நினைவூட்டுகிறாள். வயதானவர்களில் ஒருத்தி அந்தப் பெண்ணிடம், "இனி ஆகவே முடியாத டாக்டர் கனவுக்காக நீ ஏன் இன்னும் படிக்கறே?” என்று கேட்கும்போது வன்புணர்வுக் கொலைகள் வெறும் உடலை மட்டும் கொன்றுவிடுவதில்லை; கனவு, கொண்டாட்டம் என அத்தனையையும் சேர்த்துக் களவாடிவிடுகிறது என்பதை உரைக்கச் செய்கிறது. சாய்வு நாற்காலியில் அமர்ந்து வெறிக்கப்பார்த்துக் கொண்டிருப்பவள் தான் வன்புணர்வினால் இறக்கவில்லை என்றும் வன்புணர்வால் உண்டான மன உளைச்சலால் இறந்ததாகக் கூறுகிறாள். அப்படியென்றால் அவளை வெளியேற்றிவிட்டு காலிங்பெல் அடிப்பவரைச் சேர்த்துக் கொள்ளலாம் என்று யோசனை சொல்கிறார்கள் அங்கிருக்கும் வயதான பெண்கள். வெளியில் காலிங் பெல் அடிப்பவர்கள் ஒருவேளை கணவனாலேயே வன்புணரப்பட்டிருந்தால் அவர்களைத் திருப்பி அனுப்பிவிடலாம் என்றும் அவர்கள் பேசிக் கொள்கிறார்கள். எவையெல்லாம் இந்தச் சமூகத்தில் பாலியல் வன்குற்றங்களாகப் பார்க்கப்படுகின்றன என்பதற்கு அத்தாட்சி இந்தக் குறிப்பிட்டக் காட்சி.
தேவி குறும்படம்
தேவி குறும்படம்

இந்த வாதத்தால் அந்த அறையில் சண்டை உருவாகியிருந்த சூழலில் காலிங்பெல் அழுத்தியவர்களுக்காகக் கதவைத் திறக்கிறார்கள். அங்கே இரட்டைச் சிண்டும் பிரவுன் நிற ஃப்ராக்கும் அணிந்த முகம் காட்டப்படாத குழந்தை ஒன்று தனது இடது கையால் ஃப்ராக்கினை இழுத்துவிளையாடியபடி நின்றுகொண்டிருக்கிறது. இந்த எதிர்பாராத காட்சி, இறுதியில் நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கி கலங்க வைக்கும் க்ளைமேக்ஸாக மாறுகிறது.

இறந்த பின்னும் பாலியல் கொடுமைகளால் நேர்ந்த மன அழுத்தத்திலிருந்தும், அந்தச் சூழல் தந்த அதிர்ச்சியிலிருந்தும் வெளிவர இயலாமல் சமூகம் எப்படி கட்டிப் போட்டிருக்கிறது என்பதை பாதிக்கப்பட்ட ஒட்டுமொத்தப் பெண்களின் குரலாக ஒலித்திருக்கிறது 'தேவி'.

மேரிட்டல் ரேப், தற்கால மாடர்ன் பெண்களைப் பார்க்கும் விதம், வாய் பேச முடியாத பெண்ணின் இயலாமையைப் பயன்படுத்துவது, மதங்களின் பேரால் நடக்கும் பாலியல் கொடுமைகள், மத்திம வயதுப் பெண்கள் என அங்கே கட்டமைக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு பெண்ணும் நம் சமூகத்தின் பாதிக்கப்பட்ட பெண்களின் மனசாட்சி.

'devi'
'devi'
``நான் ஒல்லியா, குண்டா... எனக்கு பிம்பிள்ஸா... நீங்க கவலைப்படாதீங்க!'' - `StopBodyShaming' ஸ்ருதி

பாலிவுட் நடிகை கஜோல் நடித்திருக்கும் இந்தப் படத்தில் ஸ்ருதி ஹாசன், நேகா துபியா உள்ளிட்ட பிரபல முகங்களும் தென்படுகின்றன. பிரியங்கா பானர்ஜி இயக்கியிருக்கிறார். பாலியல் வன்புணர்வுக்கு வயது வரம்பு இல்லை, மொழி இல்லை, மதமில்லை, ஆடைகள் பொருட்டில்லை பெண் என்கிற அடையாளம் மட்டும் போதுமானதாக இருக்கிறது என்பதை நெற்றிப்பொட்டில் அறைவது போலச் சொல்கிறாள் இந்த ’தேவி’.

பெண்களுக்கெதிரான பாலியல் கொடுமைகளும் வழக்குகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் வழக்குகளை விரைந்து முடிக்காமல் நீதிமன்றத்தில் எப்படி நிலுவையில் வைக்கப்படுகின்றன, வழக்குகளின் உள்ளே வலுவானவர்களின் கை ஓங்கி எப்படி அந்த வழக்கு இருட்டடிப்பு செய்யப்படுகிறது, அதனால் பாதிக்கப்படும் பெண்களின் எதிர்காலம் எப்படித் தடம் புரள்கிறது என்பதை 13 நிமிடங்களில் பேசியிருக்கிறது படம். நிர்பயா பாலியல் வழக்கு, பொள்ளாச்சி பாலியல் வழக்கு, மீ டூ இயக்கம், பெண்கள் மீதான ஆசிட் வீச்சு எனப் பல விஷயங்களை கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறது 'தேவி'.

நாட்டில் 80 சதவிகித மக்கள் பெண் தெய்வத்தைத்தான் வழிபட்டு வருகிறார்கள். அப்படி இருக்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகமிருப்பது முரண் என்ற உண்மையை உடைத்து, `தேவி' என்ற டைட்டிலோடு நமக்குள் பல கேள்விகளையும் எழுப்பி முடிகிறது இக்குறும்படம்.

அடுத்த கட்டுரைக்கு