Published:Updated:

சோகம் வேறு; மன அழுத்தம் வேறு' - ஸ்ட்ரெஸ் அனுபவம் பகிரும் தீபிகா படுகோன்! #NoMoreStress

பாலிவுட் கலைஞர்கள் எதிர்கொள்ளும் மனஅழுத்தம் உள்ளிட்ட மனநலப் பிரச்னைகளை மனம்திறந்து பேச வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தியவர் நடிகை தீபிகா படுகோன்.

Deepika Padukone
Deepika Padukone

தான் சந்தித்த மன அழுத்தப் பிரச்னை குறித்து பேசிய தீபிகா, ``2014-ம் ஆண்டு எனது படங்களுக்காகப் பல்வேறு தரப்பினரிடமிருந்தும் பாராட்டுகள் குவிந்தன. அப்படிப்பட்ட சூழலில் ஒருநாள் காலை எழுந்திருக்கும்போது வித்தியாசமாக உணர்ந்தேன். அதற்கு முந்தைய நாளில் சோர்வு காரணமாக நான் மயக்கமடைந்தேன். அதேபோல் வெறுமையாகவும் உணர்ந்தேன். அது மனஅழுத்தம் என்று நான் உணர்ந்தேன். அதனால், அதிலிருந்து எனது எண்ணத்தை மாற்றிக்கொண்டு வேலையில் கவனம் செலுத்தினேன். அதேபோல், என்னைச் சுற்றி எப்போதும் கூட்டம் இருக்குமாறு பார்த்துக்கொண்டேன். அது எனக்கு சிறிது காலம் மட்டுமே உதவியது. ஆனால், அந்த மோசமான உணர்வு மட்டும் என்னைவிட்டு அகலவில்லை. என்னால் ஒழுங்காக சுவாசிக்க முடியவில்லை; வேலையில் முழு ஈடுபாடு காட்ட முடியவில்லை. நாள்கள் செல்லச் செல்ல நிலைமை மோசமடைந்தது.

`பிடித்த வேலையில் சேர முடியாததால் ஏற்படும் மன அழுத்தம்’ - எப்படிச் சரிசெய்வது?' #NoMoreStress
Deepika Padukone
Deepika Padukone

பெற்றோர் என்னைப் பார்க்க வந்தபோது அவர்களிடம் தைரியமாக இருப்பதாக நடித்தேன். என்னைப் பற்றி அவர்கள் கவலைப்படக் கூடாது என்பதால் அப்படிச் செய்தேன். ஆனால், ஒருமுறை என் அம்மாவிடம் பேசும்போது உடைந்து அழுதேன். இதனால் பதறிப்போன அவர் உடனடியாக பெங்களூருவில் இருக்கும் மனநல மருத்துவர் ஒருவரிடம் ஆலோசனை பெறச் சொன்னார். ஆனால், நான் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.

``என்னை எல்லோரும் ஏமாற்றிவிட்டார்கள்!" - பொங்கும் ஜெ.தீபா

`ஹேப்பி நியூ இயர்' (2014) பட ஷூட்டிங் நேரத்தில் தினமும் காலை இதே பிரச்னையுடனே நான் கண் விழித்தேன். ஒருகட்டத்தில் முடியாமல் பெங்களூரு மருத்துவரிடம் பேசினேன். அவர் எனக்காக பெங்களுரூவில் இருந்து மும்பை வந்தார். அவரிடம் என்னுடைய மனதில் இருக்கும் விஷயங்களைச் சொன்னேன். அதன் பிறகு, நான் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் முடிவுக்கு வந்தார். அதற்காக சில மருந்துகளையும் அவர் பரிந்துரைத்தார். ஆனால், அந்த மருந்துகளை எடுக்க வேண்டாம் என எனக்கு நானே தடைபோட்டுக் கொண்டேன். மனம்திறந்து பேசுவது மட்டுமே போதுமானது என்று நான் நினைத்திருந்தேன். தினசரி பல்வேறு வகையான உணர்வுகளில் சிக்கித் தவித்தேன். அதன் பிறகு, வேறொரு மனநல மருத்துவரிடம் ஆலோசனை பெற்றேன். அதன் பிறகே என் பிரச்னையை உணர்ந்து மருந்து எடுத்துக்கொண்டதால், அதிலிருந்து மீண்டுவிட்டேன்.

மனநலப் பிரச்னைகளால் பாதிக்கப்படுவோர் தனக்கு உதவி அல்லது சிகிச்சை தேவையென கேட்க மாட்டார்கள்.
தீபிகா படுகோன்

`ஹேப்பி நியூ இயர்' படத்துக்குப் பிறகு, ஷூஜித் சிகாருடன் எனது அடுத்த படத்தை ஒப்புக்கொள்ளும் முன்னர், சினிமாவில் இருந்து 2 மாதங்கள் இடைவெளி எடுத்துக்கொண்டேன். அப்போது பெங்களூருவில் என் குடும்பத்துடன் நேரம் செலவழித்தேன். அது, மன அழுத்தத்தில் இருந்து மீண்டுவர எனக்கு உதவியது. ஆனால், நான் மும்பை திரும்பியதும் மன அழுத்தத்தால் என் நண்பர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டதாக அதிர்ச்சித் தகவல் கிடைத்தது. அது என்னை மிகவும் பாதித்தது. என்னுடைய அனுபவம் மற்றும் நண்பரின் தற்கொலை ஆகியவை மனநலன் சார்ந்த பிரச்னைகள் குறித்து பேச வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது. பொதுவாக மனநலன் சார்ந்த பிரச்னைகள் குறித்து பொதுவெளியில் பேச யாரும் முன்வருவதில்லை. மனநலப் பிரச்னைகள் குறித்து பேசுவது களங்கம், அவமானம் என்று நினைக்கின்றனர். அதிலிருந்து நாம் வெளிவர வேண்டும். நான்கில் ஒருவர் மனநலப் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலிருந்து நாம் வெளிவர வேண்டும்.

மனநலப் பிரச்னைகளால் பாதிக்கப்படுவோர் தனக்கு உதவி அல்லது சிகிச்சை தேவையென கேட்க மாட்டார்கள். அதேபோல், அவர்களின் நண்பர்கள், நீ நன்றாக இருக்கிறாய். கவலைப்பட வேண்டாம்' என ஆறுதல் கூறுவது மட்டுமே அவர்களுக்கு முழுமையான தீர்வைத் தராது. சோகமாக இருப்பது, மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பது என இரண்டும் வெவ்வேறான மனநிலை. என்னுடைய நிலை பற்றி நான் பேசும்போது, `நீ... பாலிவுட்டின் சக்ஸஸ்ஃபுல் ஹீரோயின், நல்ல வருமானம், கார், வீடு, பணம், புகழ் எல்லாம் இருக்கும்போது வேறு என்ன வேண்டும்? உனக்கு எப்படி மன அழுத்தம் ஏற்படும்?' என்ற கேள்வியையே முன்வைத்தனர். உடல்நலன் மற்றும் ஃபிட்னஸ் குறித்தே மக்கள் பேசுகின்றனர். உடல்நலம் எந்தளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு மனநலமும் முக்கியம்.

Deepika Padukone
Deepika Padukone

மனநலம் சார்ந்த பிரச்னைகளால் பாதிக்கப்பட்ட மனிதர்களை நான் பார்த்திருக்கிறேன். அதனால், அவர்களின் குடும்பத்தினரும் பாதிக்கப்படுகின்றனர். ஆனால், அதைப்பற்றி பேசுவதை அந்தக் குடும்பத்தினர் அவமானமாகக் கருதுகின்றனர். அதுபோன்ற பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவருக்கு நமது புரிதலும் உதவியுமே அவசியமான ஒன்று'' என்றார் தீபிகா. ஆங்கில ஊடகமான ஹிந்துஸ்தான் டைம்ஸுக்கு அளித்த பேட்டியில் இதை அவர் பகிர்ந்திருக்கிறார்.

தீபிகா போல் உங்களுக்கும் ஏதேனும் மனநலம் சார்ந்த சந்தேகங்கள், சிக்கல்கள் இருந்தால் தீர்வு தேடித் தரக் காத்திருக்கிறது விகடன்!

உங்களுடைய பிரச்னைகளைப் பற்றி விவரமாக எழுதி,

mentalhealth@vikatan.com

என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். அதற்கான தீர்வுகள் நிபுணர்களிடம் கேட்கப்பட்டு விகடன் இணையதளத்தில் விரைவில் பகிரப்படும்.

#NoMoreStress