பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

எதிரொலிக்கும் நீதியின் குரல்!

எதிரொலிக்கும் நீதியின் குரல்!
பிரீமியம் ஸ்டோரி
News
எதிரொலிக்கும் நீதியின் குரல்!

டெல்லி மயூர் மார்க்கெட் வீதியில் சந்தோஷப் பறவையாய்ச் சிறகு விரித்த மால்தி எனும் பதின்வயதுப் பெண்மீது அந்தக் கொடூரச் செயல் நிகழ்த்தப்படுகிறது.

ரு நொடி. சந்தோஷப் புன்னகை மறைந்து முகமெங்கும் ரணம். வலி. வேதனை. அங்கே செய்வதறியாது கீழே வீழ்ந்து கிடப்பது காலம் காலமாக ஆண் ஆதிக்கத்திற்கு, அவனின் அடிமைப்படுத்த நினைக்கும் கீழான எண்ணத்திற்கு, பலியாகும் மொத்தப் பெண் இனத்தின் சாட்சியம். இந்தியில் நேர்மறையான ஓர் அர்த்தத்தைக் கொடுக்கும் வார்த்தையை இப்படி ஒரு வலி மிகு கதைக்குத் தலைப்பாகப் பொருத்திப் போராட உத்வேகம் கொடுக்கிறது இந்த ‘சபாக்.’

எதிரொலிக்கும் நீதியின் குரல்!

நிஜ வாழ்வில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டெழுந்து, இப்படியான பாதிப்படைந்தவர்களுக்காகப் போராடிவரும் லக்ஷ்மி அகர்வாலின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் பெயர் மாற்றத்தோடு தீபிகா படுகோன் நாயகியாக ஈர்க்கிறார். பாதிக்கப்பட்ட ஒருவர், தன் வலியைக் கடந்து களம் புகுந்து போராட எத்தனிக்கும் மனமாற்றத்தைப் பெறுவது அத்தனை சுலபமானது அல்ல. ஆனால், அதைப் பெரிதாகக் காட்சிப்படுத்தாமல், படம் நெடுக நம் அனுதாபத்தையும் எதிர்பார்க்காமல் தைரியமாக, மிகவும் இயல்பாகப் போராடுகிறாள் மால்தி. “நீ வேணா மாற்றுத் திறனாளிகள் கோட்டாவுல வேலைக்கு முயற்சி பண்ணலாமே!” என ஒரு மேல்தட்டுப் பெண் கொடுக்கும் அறிவுரைக்கு மால்தியிடம் இருந்து வெளிப்படும் பதில் ஓர் உதாசீன மௌனம் மட்டுமே!

சொல்லப்போனால், மால்தி இந்தத் தெளிவை எப்படித் தனக்குள் தகவமைத்துக்கொண்டாள் என்பதை ஒற்றை வசனத்தில் புதைக்கிறார் இயக்குநர் மேக்னா குல்சார். “நீ முடங்கிக் கிடந்தா அது அவனோட வெற்றி. நீ இப்படி இருக்கணும்னுதான் அவன் ஆசிட் வீசியிருக்கான். இப்படி நீ இருந்தா உனக்கான நீதி கிடைக்கறதுக்கு முன்னாடியே நீ தோத்துட்டதா அர்த்தம்” என மால்திக்காக வாதாடும் வழக்கறிஞர் அர்ச்சனா பேசும் அந்த இடம், நிதர்சனத்தைப் பொட்டில் அறைந்து பதிவு செய்கிறது. அதே கதாபாத்திரம் “நம்ம சட்டம் காலத்துக்கு ஏத்த மாதிரி மாறணும். டீயோ, வெந்நீரோ பாதிப்பு ஏற்படுத்தற நோக்கத்தோடு ஒருத்தர் இன்னொருத்தர் மேல எதை வீசினாலும் தண்டனை வெறும் ஏழாண்டுகள் மட்டும்தான். ஆசிட்டுக்கும் இதே தண்டனைதான். இது மிகப்பெரிய முரண் இல்லையா?” எனக் கேட்கும் கேள்வி எல்லோருக்கும் பிரச்னையின் தீவிரத்தை உணர்த்துகிறது. ஆசிட் வீச்சைத் தடை செய்யவோ, தகுந்த வழிமுறையின் கீழ் அதன் விற்பனையைக் கண்காணிக்கவோ இங்கே சட்டங்கள் ஏன் இல்லை என்று கேள்வி கேட்கிறாள் மால்தி. இன்றும் இலவசமாகக்கூடக் கிடைக்கப்பெறும் ஆசிட்டின் ஆபத்தை ஏன் உணராமல் இருக்கிறோம் என்ற கேள்வி திரும்பத் திரும்ப படத்தில் எதிரொலிக்கிறது.

சமூகப் போராளியாக தீபிகாவின் ‘மௌன’க் காதலனாக, அவர் மேல் பரிதாபம் காட்டாத அதே சமயம் அவரை நிஜ ‘சிங்கப்பெண்’ணாகப் போராட உத்வேகம் அளிக்கும் அமோல் பாத்திரம் சிறப்பான வார்ப்பு. மால்தியின் மொத்த அறுவைசிகிச்சையின் செலவை ஏற்றுக்கொள்ளும் ஷிராஸ் ஆன்டி மற்றும் மால்திக்காக வாதாடும் வழக்கறிஞர் அர்ச்சனா ஆகிய இருவரும் படம் நெடுக வந்து பலம் சேர்க்கிறார்கள்.

 தீபிகா படுகோன்
தீபிகா படுகோன்

கடந்த 7-ம் தேதி தீபிகா படுகோன் ஜே.என்.யூ மாணவர்கள் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போராட்டத்தில் கலந்துகொண்டது அதிர்வலைகளை ஏற்படுத்தியது. வலதுசாரிகள் வழக்கம்போல தீபிகா ‘தேசவிரோதி’ என்றும் ‘சபாக்’ படத்தைப் புறக்கணிக்க வேண்டும் என்றும் கூறினர். ஒரு சாரார், படத்தின் விளம்பரத்துக்காக தீபிகா இதைச் செய்கிறார் என விமர்சித்தனர். மறுபுறம்#ISupportDeepika எனக் கணிசமான ஆதரவையும் சமூக வலைதளங்களில் தீபிகா பெற்றார். கூகுளில், ‘சபாக்’ படத்துக்கான ரேட்டிங்கில் ‘5’ ஸ்டார்ஸ் மற்றும் ‘1’ ஸ்டார் மட்டுமே பிரதானமாகத் தெரிகின்றன. இதைவிட நேரடியாக நம் சமூக மனநிலையைப் பிரதிபலிக்கும் ஒன்று இருக்க முடியாது.

ஆண் வர்க்கத்தின் அடிமைப்படுத்தும் போக்கினை அடித்து நொறுக்கி, பாதிக்கப்பட்டவர்களை ஒரு சமூகமாக இணைத்து, போராட்டக் களத்துக்கு அழைக்கும் ‘சபாக்’கிற்கும், இப்படியொரு பாத்திரத்தைத் தேர்ந்தெடுத்து நடித்து, தயாரிக்கவும் செய்த தீபிகாவிற்கும் மனமார்ந்த வாழ்த்துகளைச் சொல்லலாம்.