பிரபல பாலிவுட் நடிகையான தீபிகா படுகோனின் தந்தை பிரகாஷ் படுகோன் 1980-களில் பேட்மிண்டன் உலகில் நம்பர் 1 வீரராக வலம் வந்தவர். இந்தியாவில், ‘இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பை’ வென்ற முதல் இந்தியரும் இவரே. இவரின் சாதனைகளைப் பாராட்டி இவருக்கு 1972-ல் அர்ஜுனா விருதையும், 1982-ல் பத்மஸ்ரீ விருதையும் வழங்கி கவுரவித்தது இந்திய அரசு. மேலும் உலக பேட்மிண்டன் கூட்டமைப்பு இவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதையும் வழங்கி சிறப்பித்தது. தற்போது இவரின் வாழ்க்கைக் கதையைப் படமாகத் திரையில் கொண்டு வரப்போவதாகத் தீபிகா படுகோன் தெரிவித்திருக்கிறார்.

ஏற்கனவே தீபிகா படுகோன், 1983-ல் இந்திய அணி உலகக் கோப்பையை வென்றது குறித்து எடுக்கப்பட்ட ‘83’ எனும் படத்தின் தயரிப்பாளாகவும் நடிகராகவும் பணியாற்றினார் . தற்போது மீண்டும் தன் தந்தையின் வாழ்க்கைக் கதையை படமாக்குவதில் பணியாற்ற உள்ளார். இது குறித்து பேசிய தீபிகா படுகோன் ‘உண்மையில் 83 நடக்கும் முன்பே, இந்திய விளையாட்டைப் பொறுத்த வரையில் இந்தியாவை உலக வரைபடத்தில் கவனிக்க வைத்த விளையாட்டு வீரர்களில் இவரும் ஒருவர் ( பிரகாஷ் படுகோன்). அவர் 1981 இல் உலக சாம்பியன்ஷிப்பை வென்றார், இது 1983 க்கு முன்பே நடந்தது என்பது வெளிப்படையான ஒன்று’ என்று கூறியிருந்தார்.