சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில், யாஷ் ராஜ் தயாரிப்பில், விஷால் - சேகர் இசையமைப்பில், ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரகாம் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள பதான் திரைப்படம் வரும் ஜனவரி 25ம் தேதி திரையரங்களில் வெளியாக உள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'Besharam Rang' என்ற பாடலை படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். அப்பாடலால் அப்படம் பாய்காட் எதிர்ப்பைச் சந்தித்துள்ளது. காரணம் தீபிகா படுகோன் படத்தில் இடம்பெற்றுள்ள 'Besharam Rang' பாடலில் கவர்ச்சியாக காவி நிற பிகினியை அணிந்து கொண்டு நடனம் ஆடியிருப்பது இந்து சமயத்திற்கு, இந்திய கலாசாரத்திற்கு எதிராக உள்ளது என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் 'Besharam Rang' என்ற இந்த பாடலுக்கு மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ராவும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "அந்த பாடலில் தீபிகா அணிந்திருக்கும் பிகினி உடை மிகவும் ஆட்சேபனைக்குரியது. மேலும் இந்த பாடல் மோசமான மனநிலையில் எடுக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள காட்சிகள் மற்றும் தீபிகா படுகோனின் உடைகளை சரிசெய்ய வேண்டும். இல்லையென்றால் இந்த படத்தை மத்திய பிரதேசத்தில் அனுமதிக்க வேண்டுமா, வேண்டாமா என்பது குறித்து பரிசீலிக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார். இப்பாடலுக்கு பல பாஜக தொண்டர்கள், ஆர்எஸ்எஸ் ஆதரவாளர்கள் என பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.