Published:Updated:

ஷில்பா ஷெட்டி, ராஜ் குந்த்ரா மீது ரூ.41 லட்சம் மோசடி புகார் - டெல்லி தொழிலதிபர் கோர்ட்டில் முறையீடு!

ஷில்பா ஷெட்டி - ராஜ் குந்த்ரா
ஷில்பா ஷெட்டி - ராஜ் குந்த்ரா

நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் ராஜ் குந்த்ரா மீது டெல்லி தொழிலதிபர் ரூ.41 லட்சம் மோசடி புகார் செய்துள்ளார்.

நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா ஆபாச வீடியோ எடுத்து மொபைல் ஆப்களில் வெளியிட்டு கோடிக்கணக்கணக்கில் சம்பாதித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில் ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ராஜ் குந்த்ராவும், அவரது மனைவியும் சேர்ந்து வியான் இண்டஸ்ட்ரீஸ் என்ற பெயரில் கம்பெனி ஒன்றை நடத்திவந்தனர். இதன் மூலம் பலதரப்பட்ட தொழில்களை செய்து வந்தனர். இந்நிறுவனத்தில் முதலீடு செய்த தொழிலதிபர் ஒருவர், தற்போது தன்னை ஷில்பா ஷெட்டியும், ராஜ் குந்த்ராவும் சேர்ந்து 41 லட்ச ரூபாய் அளவுக்கு மோசடி செய்துவிட்டதாக குற்றம் சாட்டியிருக்கிறார்.

டெல்லியை சேர்ந்த தொழிலதிபர் ரோஹிதாஸ் என்பவர்தான் ஷில்பா ஷெட்டி மற்றும் ராஜ் குந்த்ரா மீது டெல்லி போலீஸில் புகார் செய்துள்ளார்.

ராஜ் குந்த்ரா
ராஜ் குந்த்ரா

அப்புகாரில், "உமேஷ் கோயங்கா என்பவர் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடந்தபோது ஜெய்ப்பூரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடிய போட்டியை காண என்னை அழைத்தார். போட்டியை காண சென்ற இடத்தில் வியான் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் முதலீடு செய்தால் நல்ல வருவாய் கிடைக்கும் என்று அந்த நிறுவனத்தை பற்றி உயர்வாக கோயங்கா எடுத்துக்கூறினார்.

Shang-Chi: அதே மார்வெல் ஃபார்முலா, ஆனால்... எப்படி இருக்கிறார் MCUவின் புதிய சூப்பர்ஹீரோ ஷாங்க் சி?

2018-ம் ஆண்டு ராஜ் குந்த்ராவும் என்னை ஹோட்டல் ஒன்றில் சந்தித்து பேசினார். அதனை தொடர்ந்து ரூ.41.33 லட்சத்தை வியான் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் முதலீடு செய்தேன். ஆனால் சொன்னபடி அவர்கள் முதலீட்டிற்கு லாபம் கொடுக்கவில்லை. கம்பெனியின் பங்குகளும் சரிந்துவிட்டன" என்று குறிப்பிட்டுள்ளார்.

இப்போது ரோஹிதாஸ் டெல்லி நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்துள்ளார்.

ராஜ் குந்த்ரா - ஷில்பா ஷெட்டி
ராஜ் குந்த்ரா - ஷில்பா ஷெட்டி

அவர் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் இது குறித்து கூறுகையில், "எனது மனுதாரரை ராஜ் குந்த்ரா திட்டமிட்டு முதலீடு செய்யவைத்து அதனை தன்னுடைய சுயலாபத்திற்காக பயன்படுத்தியுள்ளார். மோசடி செய்யவேண்டும் என்ற நோக்கத்தில்தான் அவர்கள் முதலீடுகளை பெற்றுள்ளனர். எனவே அவர்களை கோர்ட்டிற்கு அழைத்து தக்க தண்டனை வழங்கவேண்டும்" என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

ஏற்கெனவே ஆபாச வீடியோ சிக்கலில் சிக்கி இருக்கும் ராஜ் குந்த்ராவிற்கு இந்த வழக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல், கடந்த ஜூலை 29ம் தேதி கைது செய்யப்பட்ட ராஜ் குந்த்ராவை அவரது மனைவி ஷில்பா ஷெட்டி விவாகரத்து செய்ய திட்டமிட்டு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
அடுத்த கட்டுரைக்கு