Election bannerElection banner
Published:Updated:

டீமானிட்டைசேஷன்தான் களம்... ஆனாலும் அனுராக் இப்படிச் செய்திருக்க வேண்டாமே! #Choked

கார்த்தி
Choked
Choked ( Netflix )

பணமதிப்பிழப்பு பற்றிய படம். அதுவும் அனுராக் காஷ்யப் இயக்குநர். நெட்ஃபிளிக்ஸ் வெளியீடு என்பதால், சென்சாருக்கும் வேலையிருந்திருக்காது. அப்படியானால் எப்படி இருக்கிறது 'சோக்டு' - Choked: Paisa Bolta Hai?

இது லாக்டெளன் காலம் என்பதால் வெட்டுக்கிளிகளைப் போலப் படையெடுத்து வருகின்றன தியேட்டரில் வெளியாகவேண்டிய சினிமாக்கள். ஆடித்தள்ளுபடியில் ̀Stock clearance' என எக்ஸ்பைரி அயிட்டங்களை வேகவேகமாக வெளியே தள்ளிவிடுவது போல், இந்த OTT நாள்களில் போனியாகாத சரக்குகளையும் தள்ளிவிடுகிறார்கள். நெட்ஃப்ளிக்ஸுக்காக அனுராக் காஷ்யப் எடுத்த 'சோக்டு' (Choked) படம், முழுக்க முழுக்க OTT-க்காகவே எடுக்கப்பட்ட படம் என்றாலும் அப்படி வரிசைகட்டி வரும் பல படங்களில் ஒன்றுதான் இதுவும் எனச் சொல்ல வைக்கிறதா?

choked
choked
netflix

பாடகியாக ஆசைப்பட்டு அந்த முயற்சியில் தோற்று, வங்கிக் கணக்காளராக சராசரி வேலை செய்கிறார் சரிதா பிள்ளை. இசையமைப்பாளராக ஆசைப்பட்டு நிரந்தரமாக எந்த வேலையும் செய்யாது குடியிருப்பைச் சுற்றிச் சுற்றிவருகிறார் சரிதாவின் கணவர் சுஷாந்த் பிள்ளை. இவர்களுக்கு ஒரு மகன். மும்பையின் சின்ன அடுக்குமாடிக் குடியிருப்பில், ஒரு புறாக்கூடு இவர்களுடையது. அன்றாடப் பிரச்னைகளுக்கே என்ன செய்வது என விழிபிதுங்கித் தவிக்கிறது குடும்பம். பணம்தான் இவர்கள் வீட்டின் நிம்மதியின்மையைக் குலைக்கும் விஷயம். இச்சூழலில்தான் எதிர்பாராத வகையில் சரிதாவின் கைகளுக்குக் கட்டுக்கட்டாகப் பணம் வந்து சேர்கிறது. அந்தப் பணத்தை வைத்துக்கொண்டு சரிதா என்ன செய்கிறார். அதனால் வரும் ஆபத்துகள் என்ன, அதில் இருந்து குடும்பம் மீள்கிறதா என்பதே 'சோக்ட்' படத்தின் கதை.

சரிதா பிள்ளையாக சயாமி கெர். தினமும் லன்ச் பாக்ஸுடன், சப்அர்பன் ரயில்பிடித்து, வேலைக்கு ஓடும் சராசரி பெண்ணாக சயாமி சரியான தேர்வு. சரியான வேலையில்லாத, கனவுகளை நோக்கிப் பயணிக்கவும் தெரியாத பட்டதாரி கணவர் சுஷாந்த்தாக வரும் ரோஷன் மேத்யூஸின் நடிப்பிலும் குறைவில்லை. கதை என்றால் வில்லன் இருக்க வேண்டுமே என்பதற்காக ரெட்டியாக உபேந்திரா (சிவப்பதிகாரத்தில் இன்ஸ்பெக்டராக வருபவர்). அனைவரும் நன்றாகவே நடித்திருக்கிறார்கள். ஆனால், படத்தின் நிஜ வில்லன் கதையும், திருப்பங்கள் எதுவும் இல்லாத திரைக்கதையும்தான்.

choked
choked
netflix
அசுர ஆட்டம்!

அந்த அப்பார்ட்மென்ட் சுவரில் உடைந்து விழும் பைப் போல பழுதடைந்த ஒரு கதை. எந்தவிதத் துணையும் இல்லாமல், ஆங்காங்கே தொக்கி நிற்கும் காட்சிகள். ரோஷன் மேத்யூஸ் ஏன் தமிழராக வர வேண்டும் என்பதில் ஆரம்பித்து, ஒருவேளை நாம் மிடில்கிளாஸில் ஒரு ஃபேன்டஸி கதையைப் பார்க்கிறோமா எனும் அளவுக்குக் காட்சிகள் செல்கின்றன. சுவாரஸ்ய ஒன்லைனை வைத்து மந்திரத்தில் மாங்காய் விழக் காத்திருந்திருக்கிறார் கதை ஆசிரியர் நிஹித் பாவே. பணம் வரும் வழியில் இருக்கும் சுவாரஸ்யம் வேறு எதிலும் இல்லை. அனுராக்கின் படங்களில் இசைக்குப் பெரிய வேலை இருக்காது என்றாலும், இந்தப் படத்தின் பின்னணி இசை நம்மை அதிகமாய்ச் சோதிக்கிறது. Choked என்பதற்கான காரணமாகச் சொல்லப்படும் ஃபிளாஷ்பேக், சட்டென முடிந்துபோவதும், அதன் தொடர்ச்சி அவ்வப்போது எழுவதும் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாமல் செல்கிறது.

பணமதிப்பிழப்பு பற்றிய படம். அதுவும் அனுராக் காஷ்யப் இயக்குநர். நெட்ஃபிளிக்ஸ் வெளியீடு என்பதால், சென்சாருக்கும் வேலையில்லை. இதனால் அனுராக்கின் கைவரிசையில் சோக்டு பெரிய பொலிட்டிக்கல் படமாக இருக்கும் என எதிர்பார்த்து உட்கார்ந்தால் பெருத்த ஏமாற்றம்.
வேலையில்லா முதியவரின் ஒப்புதல் வாக்குமூலம்... `Inhuman Resources' வெப் சீரிஸ் ஒரு பார்வை!

இந்தப் படத்துக்கான எதிர்பார்ப்பு அதிகமானதற்கு அனுராக்கின் அரசுக்கு எதிரான நிலைப்பாடும் ஒரு காரணம். ஆனால், மொத்தமாக ஃபேமிலி டிராமாவாகப் படத்தைக் கொண்டுபோய்விட்டார் அனுராக். "இது வங்கி... பணம்தான் கொடுக்க முடியும். கருணை எல்லாம் நீங்க ஓட்டுப் போட்ட ஆளுங்ககிட்ட கேளுங்க" போன்று அங்கொன்றும் இங்கொன்றுமான சில வசனங்கள் மட்டும் தரம். நெட்ஃபிளிக்ஸுக்கு இரண்டு படங்கள் செய்துகொடுக்க வேண்டிய நிலையில், முதலாவதாக 'கோஸ்ட் ஸ்டோரிஸ்' வெளியிட்டார் அனுராக். ஆம், அதில் ஒரு கதை அனுராக் இயக்கியது. அதுவே லேசாகத் தொண்டையைக் கவ்வியது. இது அதற்கு அடுத்தகட்டம். சிம்பிளாகச் சொல்வதென்றால், செல்லாக்காசை வைத்து வெளியாகியிருக்கும் 'சோக்டு' ரொம்பவும் சுமார்.

படத்தின் டிரெய்லர்

சில தினங்களுக்கு முன்னர்தான் அனுராக் தயாரிப்பில், நவாஸுதின் சித்திக்கி 2014-ல் நடித்த 'Ghoomketu' படம் ஜீ5-ல் வெளியானது. அதைப் பார்த்த காயத்திலிருந்து மீள்வதற்குள் இப்படி இன்னொரு இடி. அனுராக் உங்கள் இயக்கத்தில், உங்கள் கதைகளைப் பார்க்க ஆசை. உங்கள் மீது அதிக நம்பிக்கை வைத்திருக்கிறோம். அதை நீர்த்துப்போகச்செய்யாதீர்கள். 'பாம்பே வெல்வட்' போல், பெரிய பட்ஜெட் சொதப்பல் என்றால்கூட ஏற்றுக்கொள்ள முடிகிறது. ஆனால், இப்படி ஹோம் கிரவுண்டில் டக் அவுட் ஆகலமா?

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு