அயன் முகர்ஜி இயக்கத்தில் ரன்பீர் கபூர், ஆலியா பட் நடிப்பில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'பிரம்மாஸ்திரா.' அமிதாப் பச்சன், ரன்பீர் கபூர், ஆலியா பட், மெளனி ராய், நாகார்ஜுனா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இதில் நடித்திருந்தனர்.
தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் இந்தியா முழுவதும் வெளியாகியிருந்த இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தது. இந்தியாவின் அவெஞ்சர்ஸாக மாறியிருக்க வேண்டிய இப்படம் சிறுசிறு குறைகளால் அதனைத் தவறவிட்டது.
இந்நிலையில் இப்படத்தின் முதல் பாகத்தின் குறைகளை மேம்படுத்தி இரண்டாம், மூன்றாம் பாகங்களை வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது. இதுபற்றிக் கூறியுள்ள பிரம்மாஸ்திராவின் இயக்குநர் அயன் முகர்ஜி, "பிரம்மாஸ்திரா முதல் பாகத்திற்குக் கிடைத்த அன்பு மற்றும் விமர்சனங்களைக் கருத்தில்கொண்டு, இப்படத்தின் இரண்டு மற்றும் மூன்றாவது பாகங்களை மேம்படுத்தும் பணிகளில் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறோம். இப்படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் முதல் பாகத்தினைவிட மேம்படுத்தப்பட்டதாகவும், சிறப்பாகவும் இருக்கும். இன்னும் கால அவகாசம் எடுத்து இதன் ஸ்கிரிப்டை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்று தெரிந்துகொண்டேன்!" என்று கூறியுள்ளார்.
மேலும், "இதன் அடுத்தடுத்த பாகங்கள் விரைவில் வெளியாகும்" என்றும் "இப்படம் இந்திய சினிமாவுக்கு மிகவும் முக்கியமான ஒரு பங்களிப்பாக அமையும்" என்றும் கூறியுள்ளார்.