நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா ஆபாச வீடியோக்கள் தயாரித்து அதனை மொபைல் ஆப்களில் பதிவேற்றம் செய்தது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் கண்டுபிடிக்கப்பட்ட ஆபாச வீடியோ மோசடி வழக்கில் இப்போது ராஜ்குந்த்ரா கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது ராஜ்குந்த்ரா போலீஸ் காவலில் இருக்கிறார். அவர் விசாரணைக்கு சரியாக ஒத்துழைக்கவில்லை என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.

ஆபாச படங்கள் தொடர்பாக ஷில்பா ஷெட்டியிடமும் வாக்குமூலம் வாங்கிய போலீஸார் அவர்களின் வீட்டையும் சோதனை செய்துள்ளனர். இவ்வழக்கில் தனக்கு எந்த வித தொடர்பும் கிடையாது என்று ராஜ் குந்த்ரா கூறி வருகிறார். இந்நிலையில் ராஜ் குந்த்ராவிடம் பணியாற்றிய நான்கு ஊழியர்கள் அவருக்கு எதிராக சாட்சியம் அளிக்க முன் வந்துள்ளனர். அவர்கள் நான்கு பேரும் ஏற்கனவே போலீஸாரிடம் ஆபாச வீடியோ தயாரிக்கப்பட்டது தொடர்பான அனைத்து விபரங்களையும் தெரிவித்துள்ளனர். இதனால் ராஜ்குந்த்ராவிற்கு எதிரான பிடிமேலும் அதிகரித்துள்ளது.
இது தவிர கடந்த பிப்ரவரி மாதம் ஆபாச வீடியோ தொடர்பாக கைது செய்யப்பட்ட நடிகை கெஹானா உட்பட 3 பேரை மும்பை போலீஸார் நேற்று விசாரணைக்காக அழைத்திருந்தனர். அவர்கள் முன்னிலையில் ராஜ் குந்த்ராவிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் ஆபாச வீடியோவில் தொடர்புடைய பெண்களின் பெயர்கள் மற்றும் இதில் தொடர்புடையவர்களின் பெயர்களைத் தெரிவிக்க தயாராக இருப்பதாகவும், வழக்கு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க தயாராக இருப்பதாகவும் கெஹானா போலீஸாரிடம் தெரிவித்துள்ளார்.

மேலும் ராஜ் குந்த்ராவின் அலுவலகத்தைச் சோதனை செய்தபோது அங்கு ரகசிய கப்போர்டு ஒன்று இருப்பதை போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். அதிலிருந்த பொருள்களையும், ஃபைல்களையும் போலீஸார் எடுத்து சென்றுள்ளனர். அதோடு கணக்கில் இல்லாத அளவுக்கு வெளிநாட்டில் இருந்து ராஜ் குந்த்ராவிற்கு பணம் வந்திருப்பதால் அவர் மீது விரைவில் பண மோசடி வழக்கு பதிவு செய்யப்படும் என்று அமலாக்கப்பிரிவு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ராஜ் குந்த்ரா மற்றும் ஷில்பா ஷெட்டி ஆகியோர் இணைந்து வங்கி கணக்கு ஒன்று வைத்துள்ளனர். அந்த வங்கி கணக்கிற்கு வந்த பணம் குறித்த விபரங்களையும் போலீஸார் திரட்டி வருகின்றனர்.