பாலிவுட் திரையுலகில் 15 வயதில் அறிமுகமான ஹன்சிகா மோத்வானி இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் பல ஹிட் படங்களில் நடித்து தனக்கெனத் தனி இடம் பிடித்தவர். குறிப்பாக தென்னிந்தியத் திரைப்படங்களில் அதிகம் நடித்த ஹன்சிகா, தமிழில் `ஒரு கல் ஒரு கண்ணாடி', `சிங்கம் 3', `வாலு', `வேலாயுதம்', `அரண்மனை', `புலி', `ரோமியோ ஜூலியட்' போன்ற திரைப்படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானவர்.
இந்நிலையில் ஈவென்ட் மேனேஜ்மென்ட் கம்பெனி நடத்திவரும் தொழிலதிபர் சோஹைல் கதுரியா என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் 4-ம் தேதி 450 ஆண்டுகள் பழைமையான ஜெய்ப்பூர் அரண்மனையில் கோலாகலமாக நடைபெற்றது. இது தொடர்பான காணொலிகள், புகைப்படங்கள் வைரலாகின. அதுவும், ஈபிள் டவர் அருகில் சோஹைல் கதுரியா, ஹன்சிகாவிற்கு புரொப்போஸ் செய்த புகைப்படம் பலருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இதையடுத்து திருமணத்திற்குப் பிறகு தற்போது `லவ் - ஷாதி - டிராமா' என்ற ஆவணத்தொடரில் பேசியுள்ள ஹன்சிகா, தனது திருமணம் மற்றும் சோஹைல் கதுரியா புரொபோஸ் செய்த அந்தத் தருணம் குறித்தும் தான் அதிகமாக தென்னிந்தியத் திரைப்படங்களில் நடிப்பது குறித்தும் பகிர்ந்துகொண்டுள்ளார்.
சோஹைல் கதுரியா, ஈபிள் டவர் முன் தனக்கு புரொபோஸ் செய்த தருணம் பற்றிப் பேசிய ஹன்சிகா மோத்வானி, "உண்மையில் நான் அதை எதிர்பார்க்கவில்லை. பாரீஸில் எனக்குப் பிடித்த சில பொருள்களை வாங்கலாம் என்றுதான் சென்றிருந்தேன். நானும் என் நெருங்கிய நண்பர்களும் சென்றோம். சோஹைலுக்கு வேலைகள் இருந்ததால் அவர் வருவது கொஞ்சம் சந்தேகமாகவே இருந்தது.
ஆனால், சர்ப்ரைஸாக அங்கு வந்து எனக்கு புரொபோஸ் செய்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார். அது என் வாழ்நாளில் மறக்க முடியாத தருணம். அதுவும் பாரீஸில் ஈபிள் டவர் முன் அது நடந்தது மிகவும் மகிழ்ச்சியானது. ஒரு பெண் ஆசைப்படும் மிகப்பெரிய கனவுகளில் ஒன்று அது" என்று கூறினார்.

மேலும், பாலிவுட்டைவிட தமிழ், தெலுங்கு எனத் தென்னிந்திய மொழிப்படங்களில் நடிப்பது பற்றியும், இங்கிருந்து அதிக வாய்ப்புகள் வருவது பற்றியும் பேசிய ஹன்சிகா, "உண்மையில், சினிமாவில் நடிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். குறிப்பிட்ட மொழியில் மட்டுமே நடிக்க வேண்டுமென்று நான் திட்டமிட்டதில்லை. ஆனால், தென்னிந்திய சினிமாவிலிருந்து நிறைய வாய்ப்புகள் வருகின்றன. இதனால் மற்ற மொழிப்படங்களில் நடிப்பது குறித்த யோசனைகள் எனக்கு வருவதில்லை. அதற்கான நேரமும் கிடைப்பதில்லை. நான் ஒரு பொழுதுபோக்குக் கலைஞர். என்னைப் பொறுத்தவரை, எனக்கு மொழி ஒரு தடையல்ல, எனக்கு எங்கு வாய்ப்பு கிடைத்தாலும் நான் பார்வையாளர்களை மகிழ்விப்பேன்" என்று கூறினார்.