அரபு தேசம், பாலியல் சந்தை, அப்பாவி இளைஞன்... எப்படியிருக்கிறது #KhudaHaafiz?

#KhudaHaafiz: பாலிவுட்டின் லேட்டஸ்ட் OTT வரவு. 2006-ல் ரிலீஸான மும்பை பெருவெள்ளம் பற்றிய முக்கியமான டாக்குமென்ட்ரியான `The Awakening' படத்தின் இயக்குநர் ஃப்ரூக் கபீர் இயக்கத்தில் `துப்பாக்கி' பட வில்லன் வித்யுத் ஜம்வால் ஹீரோவாக நடிக்க ஹாட்ஸ்டாரில் வெளியாகியிருக்கிறது.
`பெண் கடத்தல்' தொடர்பான உண்மைச் சம்பவங்களோடு கொஞ்சம் கற்பனை கலந்து எடுக்கப்பட்ட சினிமா என்ற டேக்லைனோடு ரிலீஸ் ஆன இப்படம் எப்படி இருக்கிறது?
சமீர்-நர்கீஸ்... லக்னோவில் வசிக்கும் புதிதாய் திருமணமான காதல் தம்பதி. 2008-ல் இந்தியாவில் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலை வளைகுடாவில் இருக்கும் நோமன் என்ற நாட்டுக்கு (கற்பனை தேசம்) அவர்களைக் கிளம்பிச் செல்ல நிர்பந்திக்கிறது. 5 நாட்களில் சமீருக்கும் விசா கிடைக்கும் என்ற சூழலில் முதலில் விசா வந்ததால் நர்கீஸுக்கு `குதா ஹாஃபிஸ்' (இறைவன் துணையிருப்பான்) சொல்லி நோமனுக்கு அனுப்பி வைக்கிறான் சமீர்.

நோமன் ரீச் ஆன நர்கீஸ் தன் கணவருக்கு பதட்டத்தோடு போன் செய்கிறாள். காப்பாற்றுமாறு பேசிக்கொண்டிருக்கும்போதே நர்கீஸின் அலறல் சத்தத்தோடு செல்போன் இணைப்பு துண்டிக்கப்படுகிறது. சமீர் அதிர்ச்சியில் குழம்பி பதட்டமாகி மனைவியை அனுப்பிய டிராவல்ஸ் நிறுவனத்துக்கு போலீஸோடு போய் நிற்கிறான்.
``நாங்களும் பதற்றத்தில்தான் இருக்கிறோம். எங்கள் ஏஜென்ட் விமான நிலையத்தில் இருந்தும் உங்கள் மனைவியைப் பார்க்க முடியவில்லை. அவரை யாரோ கடத்திச் சென்றிருக்கிறார்கள்'' என்கிறது டிராவல்ஸ் தரப்பு.
நோமனுக்கு சமீரும் கிளம்பிச் செல்கிறான். கண்ணைக்கட்டி காட்டில் விடப்பட்டதைப்போல இருக்கும் அந்நாட்டின் சூழலில், லோக்கல் டிரைவர் உஸ்மான் என்பவருடன் சேர்ந்து நர்கீஸைத் தேடுகிறான். `பாலியல் சந்தை' பற்றிய க்ளூ கிடைத்ததும் அங்கிருக்கும் மிகப்பெரிய சந்தை ஒன்றுக்கு கஸ்டமர் போர்வையில் உஸ்மானுடன் போகிறான் சமீர். அங்கு பாலியல் தொழிலாளியாக அரை மயக்க நிலையில் நர்கீஸ் அழைத்து வரப்பட... அதிர்ச்சியாகிறான் சமீர்.

சமீரும் நர்கீஸும் முன்பின் அறிமுகமானவர்கள் என்பதை உணர்ந்த அந்த விடுதியின் தலைவன் சமீரை தாக்குகிறான். பெரிய குண்டர் படை, துப்பாக்கி, வாள்கள் சூழ்ந்த கடுமையான பாதுகாப்பு அரண்களைக் கடந்து நர்கீஸைக் காப்பாற்ற இயலாமல் கையறு நிலையில் அங்கிருந்து உஸ்மானுடன் தப்பிக்கிறான். அவனை அந்த கூட்டம் துரத்தி வரும் வழியில் கார் விபத்துக்குள்ளாக காயமடைந்த அவனை நோமன் போலீஸ் கைது செய்கிறது.
போலீஸ் - பாலியல் மாஃபியா இரண்டையும் சமாளித்து மனைவியை சமீர் எப்படி மீட்கிறான் என்பதே கதை.
சமீராக வித்யுத் ஜம்வால். ஒரு சராசரி இளைஞனாக மனைவியைத் தொலைத்துவிட்டு ஏலியன் போல ஒரு தேசத்தில் அப்பாவியாக சுற்றும்போது பரிதாபத்தை அள்ளுகிறார். மனைவியை கண்முன்னே ஒரு கூட்டமே தூக்கிச் செல்லும்போது ரத்தம் சூடாகி அவர் செய்யும் ரியலான ஆக்ஷன் அதகளம்... அமர்க்கள ரகம்!
மனைவி முன் அவர் போடும் சண்டைக்காட்சிகள் நம்பும்படியாக காட்சிப்படுத்தப்படுத்தியிருப்பது அழகு. ஆனால், அதன்பிறகு திட்டமிட்டு ஹாலிவுட் பாணியில் சாகசங்களை செய்ய விட்டிருப்பது ஓவர் டோஸாகி விட்டது.
வித்யுத் தவிர மற்ற கேரக்டர்கள், நர்கீஸாக வந்த ஷிவலேகா வரை ஆவரேஜாகவே நடித்திருப்பது மைனஸ்.

படத்தின் மிகப்பெரிய குறையே நிறைய க்ளிஷே காட்சிகள்தான். (Spoiler Alert) அந்த ஊர் போலீஸ் அதிகாரி வான்டடாக வந்து உதவுவதாக காட்டும்போதே நம்மால் எளிதாய் யூகிக்க முடிகிறது... பின்னால் இவன்தான் வில்லனாய் இருக்கப் போகிறான் என்று!
வளைகுடா நாடென்றால் டெம்ப்ளேட்டாக காட்டப்படும் கட்டடங்கள், கேமரா கோணங்கள், பெர்ஸியன் மியூஸிக், பாலைவனத்தின் நடுவே மாஃபியா தலைவன் ஹூக்கா புகைப்பது, அவனை தூரமாக நின்று கேமராவில் க்ளிக் செய்வதை எல்லாம் கால் நூற்றாண்டுக்கு முன் நம் ஊர் ஜெய்சங்கர் படங்களில் பார்த்து விட்டோம். அதேப்போல அந்த ஊர் ஆட்களும் இந்தியை சரளமாகப் பேசுவது, அங்கேயும் மும்மொழிக் கொள்கையை அந்த நாட்டு அரசு எப்போதோ கொண்டுவந்து விட்டதோ என நினைக்க வைக்கிறது.
இசை, கேமரா, எடிட்டிங் எல்லாமே ஆக்ஷனுக்கான ப்ளஸ்களாக நிச்சயம் இருக்கிறது.
டைட்டில் கார்டில் உஸ்பெகிஸ்தான் டூரிஸமுக்கு நன்றி சொல்லியிருப்பதன் மூலம் `நோமன்' என்ற இல்லாத `No man's Land'-ஐ அங்கு எடுத்திருப்பது தெரிகிறது. வளைகுடா நாடொன்றின் `Flesh Trade' பற்றி பேசியிருப்பதெல்லாம் நல்லதுதான். ஆனால், இன்னும் யதார்த்தம் கூட்டி சிக்கலை ஆராய்ந்திருந்தால் முக்கியமான ஆவணப்படமாக மனதில் நின்றிருக்கும்.

ஆனால், பழமைவாத இஸ்லாமிய நாடுகளின் இன்னொரு பக்கம் ஆபத்தானது என்ற அளவில் சுருங்கிப்போனது வருத்தம்தான். உஸ்மான் கேரக்டரை ரொம்ப நல்லவர் கேரக்டராய் காட்டி சமாளித்திருப்பதெல்லாம் தாத்தா காலத்து திரைக்கதை டெக்னிக்!
இப்படி ஒரு கோடு போட்ட நோட்டில் எழுதியதைப்போல திரைக்கதை நேராக இருந்தாலும் வித்யுத் ஜம்வாலின் சாகசங்களுக்காக படத்தை ரசிக்கலாம்.
வித்யுத்தின் `கமாண்டோ' சீரிஸிலிருந்து மாறுபட்ட ஒரு ரியல் லைஃப் ஆக்ஷன் த்ரில்லர் என்ற வகையில் இப்படம் ஒருமுறை பார்க்கலாம் ரகம்!