Published:Updated:

அனுராக் என்னும் அசுரன்!

Anurag Kashyap
பிரீமியம் ஸ்டோரி
News
Anurag Kashyap

நாட்டில் நிலவும் அசாதாரணமான சூழல் என்னை மீண்டும் வரவைத்தது’ எனத் தற்போது ட்விட்டருக்குத் திரும்பியிருக்கிறார்.

புது அலை இயக்குநர்களில் முதன்மையானவர் என, தன் சினிமாக்களின் மூலம் படைப்புரீதியாகக் கவனிக்கப்படும் அனுராக்கை, இப்போது `மோடி அரசை காரசாரமாக விமர்சிப்பவர்’ என்ற விதத்தில் உலகமே உற்று கவனித்துக் கொண்டிருக்கிறது.

ட்விட்டரில் அனுராக், மோடி அரசை ‘பாசிஸ அரசு’ என விமர்சிக்கும் ஸ்டைல் அவர் எடுக்கும் படங்களைப் போலவே ‘கல்ட்’டாக இருக்கிறது. அதேபோல இவர் பதிவிடும் கருத்துகளுக்கு பா.ஜ.க-வினரால் வரும் மோசமான எதிர்வினைகளையும், ‘பாருங்கள் உங்கள் கட்சியினரின் சகிப்புத்தன்மையை!’ எனத் தன்னை விமர்சித்து வரும் ஒவ்வொரு ட்வீட்டையும் மோடிக்கே டேக் செய்கிறார். மோடிக்கு இன்றைய தேதியில் `ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’ மொமன்ட்தான்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

சமீபத்தில் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக அனுராக் போட்ட பதிவு இதுதான்... “எல்லாம் கையை மீறிப்போய்விட்டது... இனிமேலும் அமைதியாக இருக்க முடியாது. இந்த அரசு தெளிவாக பாசிஸத்தைக் கடைப்பிடிக்கிறது. இதற்கு எதிராகக் குரல் எழுப்ப வேண்டியவர்கள், மாற்றத்தைக் கொண்டுவரும் திறம் படைத்தவர்கள் அமைதியாக இருப்பது எனக்குக் கோபத்தை ஏற்படுத்துகிறது” என்று பெப்பர் தூக்கலான ஒரு பதிவைப் போட்டிருந்தார்.

அனுராக் என்னும் அசுரன்!
அனுராக் என்னும் அசுரன்!

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் சில மாதங்களுக்கு முன் ட்விட்டரை விட்டே கோபத்தோடு வெளியேறி வனவாசம் இருந்தவர் அனுராக். காரணம், நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் மோடியின் ஆட்சியை டார்டாராகக் கிழித்து இவரும் சக கலைஞர்களும் கடிதம் எழுதியதுதான்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

‘‘இந்த ஆபத்தான பா.ஜ.க ஆட்சி மீண்டும் அதிகாரத்துக்கு வராமல் இருக்க, உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள். இதுவே உங்களின் கடைசி வாய்ப்பு! இந்திய அரசியலமைப்பின்படி, உங்களின் அரசாங்கத்தைத் தேர்வுசெய்யுங்கள். அந்த அரசாங்கம், நமது பேச்சுரிமை, கருத்துரிமையை வழங்குவதாக இருக்க வேண்டும்’’ என்று எழுதி அதன்கீழ் முக்கியமான இயக்குநர்கள் கையொப்பமிட்டனர். மாட்டு அரசியல், சிறுபான்மையினர் மீதான வெறுப்பு அரசியல், கும்பல் வன்முறை, மோசமான பொருளாதாரக் கொள்கை, நாட்டில் வன்முறை பெருகிவிட்டது, சகிப்புத்தன்மை இல்லாமல் போய்விட்டது என, நீ...ண்... டது அந்தக் கையெழுத்துக் கடிதம்! பொங்கி எழுந்தனர் பா.ஜ.க-வினர்.

மணிரத்னம், அனுராக் உட்பட 49 பிரபலங்கள்மீது தேசத் துரோகம், பொதுமக்களுக்குத் தொந்தரவு விளைவித்தல், மத உணர்வுகளைப் புண்படுத்துதல், அமைதியைக் குலைக்கும் வகையில் பேசுதல் ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்தக் கடிதத்தை வரிக்கு வரி உருவாக்கியவர்களுள் முதன்மையானவர் அனுராக்தான். இதனாலேயே அவரை மோசமாக ட்விட்டரில் விமர்சிக்க ஆரம்பித்தனர் சிலர். மோடி மீண்டும் அரியணை ஏறியதும் அனுராக்மீதான இணைய தாக்குதல் இன்னும் அதிகமாகியது.

‘இது எதிர்பார்த்ததுதான். இன்னும்கூட எதிர்பார்க்கிறேன்’ எனக் கிண்டலாக, அவரைத் திட்டிப்போடப்படும் பதிவுகளை ரீ-ட்வீட் செய்துகொண்டிருந்தார். எந்த கும்பல் வன்முறைக்கு எதிராக அவர் பேசினாரோ அதையே இணையம் வழியிலும் அவர்மீது நிகழ்த்தத் தொடங்கினர். ஒருகட்டத்தில் எல்லைமீறி அனுராக் காஷ்யப்பின் மகள்மீது வன்மத்தைக் காட்டி மிரட்ட ஆரம்பித்தனர். ‘இதுதான் உங்கள் சகிப்புத்தன்மையின் உச்சம்’ என மோடிக்கே அதை டேக் செய்தார். திடீரென ஒருநாள் கோபமாக ‘சகிப்புத்தன்மையற்ற இன்றைய சூழலில் சமூக வலைதளங்களில் இயங்குவது என் குடும்பத்துக்குப் பாதுகாப்பு இல்லை’ எனக்கூறி ‘புதிய இந்தியாவில் இருக்கும் அனைவருக்கும் வாழ்த்துகள்’ என்று பகடி செய்து ட்விட்டரை விட்டே வெளியேறினார் அனுராக்.

Cut -To- நிகழ்காலம்...

‘நாட்டில் நிலவும் அசாதாரணமான சூழல் என்னை மீண்டும் வரவைத்தது’ எனத் தற்போது ட்விட்டருக்குத் திரும்பியிருக்கிறார். இம்முறை 360 டிகிரியில் பா.ஜ.க-வை விமர்சிக்கிறார். மோடியை ‘ஹிட்லர்’ என்றும், அமித் ஷாவை ‘கோயபல்ஸ்’ என்றும் ட்விட்டர் கடாயில் போட்டு வறுத்தெடுக்கிறார்.

மாணவர் போராட்டத்தில் கருத்து சொல்லிப் பிறகு பின்வாங்கிய அக்‌ஷய் குமாரை ‘முதுகெலும்பு இல்லாத நடிகர்’ எனப் போட்டுத்தாக்கினார். போகிறபோக்கில் ஹைதராபாத்தில் நடந்த ஆர்.எஸ்.எஸ் மாநாட்டைக் காய்ச்சியெடுத்தார். RSS-க்கு ‘Rashriya SchutzStaffel’ என ஹிட்லரின் நாஜிப் படையின் பெயரை வைத்து, ‘ஆயிரக்கணக்கானோர் லத்தியைச் சுழற்றியபடி ரோட்டில் செல்லும் தைரியத்தை யார் கொடுத்தது?’ எனக் கேள்வியும் கேட்கிறார்.

ஜாமியா பல்கலைக் கழக மாணவர்கள்மீதான தாக்குதலாகட்டும், உ.பி-யில் நிகழ்த்தப்படும் காவல்துறையின் அத்துமீறல்களாகட்டும், இணையத்தில் வெளியான வெவ்வேறு வீடியோப் பதிவுகளைத் தன் ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்கிறார். பா.ஜ.க-வின் ஐடி விங்கும் சரிக்கு சமமாகக் களமிறங்க, இந்த நிமிடம் வரை தக்காளிச்சட்னிதான்!

‘பொருளாதார முறைகேடுகள் செய்ததால் அனுராக் காஷ்யப் மீது சி.பி.ஐ ரெய்டு’ என்ற தகவல் இணையத்தில் பரவ, சூப்பர் கூலாக, ‘மீடியாவில் மட்டுமே பொய்த்தகவலை BJP IT wing பரப்பியிருக்கிறார்கள். எனக்கு எந்த சம்மனும் வரவில்லை. யார் வேண்டுமானாலும் வரலாம்!’ என பதில் கொடுத்திருக்கிறார்.

இம்முறை லேசில் போகமாட்டார் போல என்று எண்ணி அவரை நேரடியாகவே சீண்ட ஆரம்பித்துவிட்டனர். ‘நீ ஒரு அட்டக்கத்தி. வாய்ச்சொல் வீரன். ட்வீட் மூலம் பப்ளிசிட்டி தேடும் ஆள்’ எனத் தாக்க ஆரம்பித்துள்ளனர். “நான் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக மும்பைப் போராட்டத்தில் கலந்துகொண்டவன். கடந்த 2011-ல் ஊழலுக்கு எதிரான அன்னா ஹசாரேவின் போராட்டத்திலும் முன்னின்றேன். 90களில் மண்டல் கமிஷனுக்கு எதிரான போராட்டத்திலும் கலந்துகொண்டேன் தெரியுமா!” என்று அவர் பதிலடி சொல்ல... இணையத்தில் இன்னொரு சர்ச்சைக்கு ஆளானார் அனுராக்.

‘ஓ... இந்த ஆள் இட ஒதுக்கீட்டுக்கு எதிராகக் களமாடியவன்... கபடதாரி. சாதியவாதியின் இரட்டை வேடம் வெளிப்பட்டுவிட்டது!’ என்று அவருக்கு எதிராகக் களமாட ஆரம்பித்தனர்.

அதற்கும் தன் ஸ்டைலில் அனுராக் செம பஞ்ச் வைத்ததுதான் ட்விஸ்ட். “அப்போது எனக்கு 19 வயது. அன்றைய வயதில் இட ஒதுக்கீடு குறித்த என் பார்வையும் முதிர்ச்சியும் அவ்வளவுதான். இன்று அப்படி இல்லை. பக்குவமாகி அப்படியே எதிர் திசையில் இருக்கிறேன். அதனால் அன்றைய என் பார்வைக்காக இன்று எல்லோரிடமும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்’ என்று ஓப்பனாகவே சொல்லியிருக்கிறார். அனுராக்கின் இந்த நேர்மை, அவரை விமர்சித்தவர்களையும் கவர்ந்தது.

ஆனால் பா.ஜ.க-வினருக்கு மட்டும் `தண்ணியக்குடி’ மொமன்ட் தான்! வா அசுரா வா!