Published:Updated:

ஆர்யன் கானுடன் செல்ஃபி எடுத்த மோசடி மன்னன் - புதிய சர்ச்சை!

மோசடி வழக்கில் தேடப்படும் நபர் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் ஷாருக்கான் மகனுடன் எப்படி செல்பி எடுத்துக்கொண்டார் என்று சர்ச்சை எழுந்துள்ளது.

நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யான் கான் கடந்த 2-ம் தேதி சொகுசு கப்பலில் நடந்த போதைப்பொருட்களுடன் பார்ட்டியில் கலந்து கொண்டது தொடர்பாக கைது செய்யப்பட்டார். அவருடன் மொத்தம் 8 பேர் பிடிபட்டனர். தற்போது இவ்வழக்கில் போதைப்பொருள் சப்ளை செய்த நைஜீரியாவைச் சேர்ந்தவர் உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஷாருக்கான் மகனுக்கு போதைப்பொருள் தடுப்பு பிரிவினரின் காவல் முடிந்ததையடுத்து நீதிமன்ற காவலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படும் ஆர்யன் கான்
விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படும் ஆர்யன் கான்

ஆர்யான் கான் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு அழைத்துச் செல்லும் போது அவருடன் கேபி கொசாவி என்பவர் பாதுகாப்பாக சென்றார். இதே போன்று ஆர்யானுடன் கைது செய்யப்பட்ட அர்பாஸ் மெர்ச்சண்டுடன் பாஜக பிரமுகர் மனிஷ் பனுசாலி என்பவர் சென்றார். கொசாவி, ஷாருக்கான் மகனுடன் செல்பி எடுத்து சமூக வலைத்தளத்திலும் வெளியிட்டுள்ளார். இது இப்போது புதிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

சொகுசு கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம்; நடிகர் ஷாருக் கான் மகனுக்கு ஜாமீன் கிடைக்குமா?

கொசாவியை புனே போலீஸார் மோசடி வழக்கில் தேடி வருகின்றனர். அவர் மீது வெளிநாட்டுக்கு ஆட்களை வேலைக்கு அனுப்புவதாக கூறி பணம் வாங்கி மோசடி செய்ததாக குற்றச்சாட்டு இருக்கிறது. இவ்வழக்கில் புனே போலீஸார் கொசாவியை தேடி வந்தனர். திடீரென ஷாருக்கான் மகனுடன் செல்பி எடுத்துக்கொண்ட போட்டோ வெளியானவுடன் புனே போலீஸார் உஷார் அடைந்துள்ளனர்.

இது குறித்து புனே போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரா கூறுகையில், ”கொசாவியை மோசடி வழக்கில் தேடி வந்தோம். அவர் ஷாருக்கான் மகனுடன் போட்டோ எடுத்து வெளியிட்டது குறித்து எங்களுக்கு சிலர் தகவல் கொடுத்தனர். அவர் 2018ம் ஆண்டில் இருந்து தலைமறைவாக இருக்கிறார். இப்போது மீண்டும் அவரை தேட ஆரம்பித்திருக்கிறோம்” என்றார். புனே மட்டுமல்லாது தானே, மும்பையிலும் கொசாவி மீது வழக்கு நிலுவையில் இருக்கிறது. தன்னை தனியார் துப்பறியும் நிபுணர் என்று கூறிக்கொண்டு அலையும் கொசாவியை இவ்வழக்கில் சாட்சியாக சேர்த்திருப்பதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் தெரிவித்தனர்.

ஆர்யானுடன் கொசாவி
ஆர்யானுடன் கொசாவி

பாஜக பிரமுகர் மனிஷ் பனுசாலி எப்படி போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் இருக்கவேண்டிய இடத்திற்கு வந்தார் என்று கேட்டதற்கு, அவரையும் சாட்சியாக சேர்த்திருப்பதாகவே அதிகாரிகள் சொல்கின்றனர். பனுசாலி தரப்பில் கேட்டால் போதைப்பொருள் கப்பல் பார்ட்டியில் பயன்படுத்தப்படுவது குறித்து நாங்கள்தான் துப்பு கொடுத்தோம் என்று கூறுகிறார். மற்றொரு புறம் மஹாராஷ்டிராவையும், பாலிவுட்டையும் களங்கப்படுத்தவேண்டும் என்று திட்டமிட்டு போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் மூலம் பாஜகவினர் போலியான இது போன்ற ஒரு நாடகத்தை அரங்கேற்றி இருப்பதாக தேசியவாத காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு