நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா ஆபாச படம் எடுத்து மொபைல் ஆப்கள் மற்றும் ஒடிடி தளங்களில் வெளியிட்டதாக திங்கள் கிழமை மும்பையில் குற்றப்பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
ராஜ் குந்த்ராவின் வங்கிக்கணக்கில் இருந்த 7 கோடி ரூபாயை குற்றப்பிரிவு போலீஸார் முடக்கியுள்ளனர். ராஜ் குந்த்ராவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கும் தகவல்கள் கிடைத்துள்ளன.
கொரோனா காலத்தில் அதிக அளவில் ஆபாச வீடியோக்களுக்கு தேவை இருந்தது. மற்றொரு புறம் பாலிவுட் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் இருக்கும் நடிகைகள் கொரோனா காலத்தில் வருமானம் இல்லாமல் திண்டாடிக்கொண்டிருந்தனர். இவற்றை கவனத்தில் கொண்ட ராஜ் குந்த்ரா பணம் மற்றும் வேலையில்லாமல் கஷ்டப்படும் நடிகைகளை பயன்படுத்தி ஆபாச படம் எடுத்து சம்பாதிக்க திட்டமிட்டார்.

இதற்காக 'ஹாட்ஷாட்' என்ற மொபைல் ஆப்பை தொடங்கி அதனை லண்டனில் உள்ள தனது மைத்துனர் பிரதீப் பக்ஷி என்பவருக்கு விற்பனை செய்வது போல் செய்துகொண்டார். இந்தியாவில் ஆபாச படங்களை மொபைல் ஆப்பில் பதிவேற்றம் செய்யமுடியாது என்பதால் இது போன்று செய்தார். அதனை தொடர்ந்து நடிகை கெஹானாவின் துணையோடு வாய்ப்பு தேடிக்கொண்டிருக்கும் நடிகைகளுக்கு ஓடிடி தளங்களில் வெளியிட இருக்கும் வெப் சீரியலில் நடிக்க வாய்ப்பு கொடுப்பதாக ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.
நடிகைகளை ஒருங்கிணைப்பவரும், ராஜ் குந்த்ராவின் முன்னாள் ஊழியருமான உமேஷ் காமத்தும் இவர்களின் கூட்டணியில் சேர்ந்துள்ளார். ஆரம்பத்தில் வெப் சீரியல் என்று கூறிவிட்டு பண ஆசை காட்டி மாடல் அழகிகளை ஆபாச படங்களில் நடிக்க வைத்துள்ளனர். ராஜ் குந்த்ராவிற்கு ஆபாச வீடியோ எடுத்ததில் தொடர்பு இருக்கிறது என்பதை நிரூபிக்க ராஜ் குந்த்ரா - உமேஷ் காமத் - பிரதீப் பக்ஷி ஆகியோர் வாட்ஸ்அப்பில் உரையாடிய விபரம் கிடைத்திருக்கிறது.
கொரோனா காலத்தில் ஆபாச படங்கள் எடுத்து வீ டிரான்ஸ்ஃபர் மூலம் லண்டனுக்கு அனுப்பி அங்கிருந்து 'ஹாட்ஷாட்' மொபைல் ஆப்பில் பதிவேற்றம் செய்துள்ளனர். இந்த ஆபாச வீடியோக்கள் மூலம் ஆரம்பத்தில் தினமும் 2-3 லட்சம் ரூபாய் வரை சம்பாதித்த ராஜ் குந்த்ரா பின்னர் தினமும் 6-8 லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்க ஆரம்பித்தார் என்று குற்றப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒரு கட்டத்தில் படம் எடுத்து வெளியிடுவதை விட நேரடியாக ஆபாச செயல்களை ஒளிபரப்பு செய்ய குந்த்ரா விரும்பியதாக குற்றப்பிரிவு போலீஸார் தெரிவித்துள்ளனர். லண்டனில் உள்ள கென்ரின் லிமிடெட் நிறுவனம்தான் குந்த்ராவிடமிருந்து 'ஹாட்ஷாட்' மொபைல் ஆப்பை விலைக்கு வாங்கியது. ஆனால் விலைக்கு கொடுப்பது போல் கொடுத்துவிட்டு குந்த்ராதான் கென்ரின் மற்றும் ஹாட்ஷாட் ஆகிய இரண்டனையும் நடத்தி வந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்ட சில மணி நேரத்தில் அவரது ஐடி பிரிவு அதிகாரி ரேயான் என்பவரும் கைது செய்யப்பட்டார். ராஜ் குந்த்ரா நிறுவனத்திற்கும், கென்ரின் நிறுவனத்திற்கும் இடையிலான பண பரிவர்த்தனை குறித்த விபரங்களை குற்றப்பிரிவு போலீஸார் திரட்டி வருகின்றனர்.
ராஜ் குந்த்ராவால் பாதிக்கப்பட்ட நடிகைகள் தொடர்ந்து புகார் செய்து வருகின்றனர். மேலும் பாதிக்கப்பட்டவர்கள் புகார் செய்ய முன் வரவேண்டும் என்று இணை கமிஷனர் மிலிந்த் தெரிவித்துள்ளார்.
இந்த ஆபாச வீடியோ மோசடியில் நடிகை ஷில்பா ஷெட்டிக்கு தொடர்பு இருக்கிறதா என்று அவரிடம் கேட்டதற்கு, இது வரை நடத்தப்பட்ட விசாரணையில் ஷில்பா ஷெட்டிக்கு எதிராக எந்த வித ஆதாரமும் கிடைக்கவில்லை. ஆனால், தொடர்ந்து விசாரித்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளனர்.
கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து 'ஹாட்ஷாட்' அப்ளிகேஷன் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.