Published:Updated:

''என் வீட்டுக்குள் ஆண்கள் இருக்கிறார்களா எனத் தேடுவார்கள்!'' - பரினீதி சோப்ரா

 பரினீதி சோப்ரா
பரினீதி சோப்ரா

''இந்தப் படம் எனக்கு நான் வளர்ந்த கிராமத்தை நினைவுபடுத்தியது. அங்கெல்லாம் ஆண்கள் தூங்க செல்லும் வரை பெண்கள் சாப்பிடக்கூடாது. ஆண்கள் உணவு மேஜையில் அமர்ந்திருக்கும் போதும் சாப்பிடக் கூடாது. என்னுடைய வீட்டில் கூட அம்மா அப்படி அமர்ந்து சாப்பிட முடியாது.''

'சந்தீப் ஆர் பிங்கி ஃபரார்' - பாலிவுட் இப்போது கொண்டாடிக் கொண்டிருக்கும் படம். கடந்த ஆண்டே ரிலீசுக்கு தயாரான படம் லாக்டெளன் காரணமாக இந்த ஆண்டு மார்ச் மாதம் தியேட்டரில் ரிலீஸ் ஆனது. இப்போது OTT தளத்தில் இரண்டாவது இன்னிங்ஸ். இம்முறை பெருவாரியான மக்களின் பாராட்டுதலில் படத்தில் நடித்த பரினீதி சோப்ரா மற்றும் அர்ஜுன் கபூர் இருவரும் திக்குமுக்காடி போயிருக்கிறார்கள். எவ்வித தொடர்பும் இல்லாத இருவர் சந்தர்ப்ப சூழலால் கொலைகார கும்பலிடம் சிக்கி, அவர்களிடமிருந்து தப்பிக்க போராடுவதுதான் படத்தின் கதை. படம் நெடுகிலும் இந்தியாவின் ஆணாதிக்க மனோபாவத்தினால் பெண்கள்படும் அவதியும் பேசப்பட்டிருக்கிறது.

Parineethi chopra
Parineethi chopra
aninews

மிக சாதாரணமாக ஒரு பெண் வீட்டில் இருக்கும் ஆண்களுக்கு உணவு பரிமாறுவதில் தொடங்கி, ஒரு பெண்ணுக்கு எதிரான பாலியல் குற்றம் வரை பெண்களுக்கு எதிரான எல்லா விதமான பிரச்னைகளும், மனநிலைகளும் காட்சிப்படுத்த பட்டிருக்கின்றன. இதை பற்றி படத்தில் நடித்த பரினீதி சோப்ரா கொடுத்திருக்கும் பேட்டிகள் படத்தை விடவும் அதிக ஹிட் அடித்திருக்கின்றன. அதன் சில சுவாரஸ்யங்கள் மட்டும் இங்கே!

"ஆணாதிக்க மனநிலை நமது வாழ்வியலோடு ஊறிப்போய் இருக்கிறது. அதனால் அந்த எண்ணம் இருப்பதை கூட நாம் உணர்வதே இல்லை. என்னுடைய வாழ்க்கையிலும் சிறு சிறு விஷயங்களில் கூட இதை உணர்ந்திருக்கிறேன். நான் சம்பாதித்து நான் கட்டும் வீட்டின் கட்டுமான தொழிலாளர்கள்கூட எந்த முடிவுகளை எடுப்பதற்கும் ஆண்களை தேடுவார்கள். நான் சொல்வதைக் கேட்காமல், வீட்டுக்குள் ஆண்கள் யாரும் இருக்கிறார்களா எனப் பார்ப்பார்கள். என்னிடம் பேச மறுப்பார்கள். அவர்களுக்கு என் முடிவுகளை புரிய வைக்க நான் மிகவும் சிரமப்பட்டேன். இப்படி இந்த படத்தில் என் நிஜ வாழ்க்கை அனுபவங்கள் பல கலந்திருந்தது.

சந்தீப் ஆர் பிங்கி ஃபரார்
சந்தீப் ஆர் பிங்கி ஃபரார்
imdb.com

படத்தில் ஒரு காட்சி வரும், ஆண்கள் எல்லாம் உணவருந்த அமர்ந்திருப்பார்கள். பெண்கள் எல்லாம் நின்று கொண்டிருப்பார்கள். என் கதாபாத்திரம் ஆண்களுக்கு பரிமாறாமல் அவர்களுக்கு சமமாக உணவருந்த அமர்வது போல அமைக்கப்பட்டிருக்கும். அதை அங்கிருக்கும் பெண்களே விரும்பாதது போன்ற காட்சி அது. இதுதான் நிஜ உலகமும். இது எனக்கு நான் வளர்ந்த கிராமத்தை நினைவுபடுத்தியது. அங்கெல்லாம் ஆண்கள் தூங்க செல்லும் வரை பெண்கள் சாப்பிடக்கூடாது. ஆண்கள் உணவு மேஜையில் அமர்ந்திருக்கும் போதும் சாப்பிடக் கூடாது. என்னுடைய வீட்டில் கூட அம்மா அப்படி அமர்ந்து சாப்பிட முடியாது. இப்படித்தான் இருக்கவேண்டும் என என் தந்தை காட்டாயப்படுத்தவில்லை. இருந்தாலும் அது ஒரு எழுதப்படாத சட்டம். இந்த அனுபவங்களின் நினைவோடுதான் இந்த படத்தில் நடித்தேன். இந்த கதாபாத்திரத்தில் நடிக்கும் போது இந்த ஆணாதிக்க மனநிலையை உடைக்க வேண்டும் என்று எனக்கு நானே சொல்லி கொண்டேன்" இவ்வாறு பேசியிருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு