சினிமா
Published:Updated:

கனவுகளில் கரைந்தவன்!

சுஷாந்த்
News
சுஷாந்த்

வாழ வேண்டும் என்பதை 51வதாக இணைத்திருக்கலாமே சுஷாந்த்!

‘சராசரி இந்தியனின் வயது 60. எனக்கு 30. வாழ்வில் நான் செய்த தவறுகளால்தான் வாழ்வின் இறுதி அத்தி யாயத்தை ஆச்சர்யப்படத்தக்க வகையில் வாழ முடிகிறது” - சுஷாந்த் சிங் சொன்னது இது.

இன்னொரு பேட்டியில், நாசாவுக்கு 100 குழந்தைகளை அனுப்ப வேண்டும், ஐரோப்பா முழுக்க ரயிலில் பயணிக்க வேண்டும், வேற்றுக் கிரகங்களின் பாதையை ஆராய வேண்டும், எனத் தன் வாழ்நாள் விருப்பங்களாய் 50 விஷயங்களைத் தேர்வு செய்திருந்தார் சுஷாந்த். வாழ வேண்டும் என்பதை 51வதாக இணைத்திருக்கலாமே சுஷாந்த்!

சுஷாந்த்
சுஷாந்த்

வாரிசுகளின் உலகமான பாலிவுட்டில் நுழைவதும் இருப்பைத் தக்கவைப்பதும் கடினம். அதையும் தாண்டி அங்கு சாதித்தவர்கள் நவாஸுதீனும் இர்ஃபான் கானும். சுஷாந்த் சிங் என்னும் பாட்னா இளைஞனுக்கு அவர்கள் ஆதர்சம் ஆகிப்போனதில் வியப்பேது மில்லை. பிலிம்ஃபேர் விருதுகளில் மேடை நாடகக் கலைஞராக ஆரம்பித்த சுஷாந்த்தின் கலைப் பயணம் ‘கை போ சே’ மூலம் வெள்ளித் திரைக்கு வந்தது. அதன்பின் அவர் கரியர் முழுவதுமே வித்தியாசம்தான். அவர் சினிமாப்பயணத்தின் உச்சம் தோனியின் பயோபிக். கட்டபொம்மனாய் சிவாஜியை நினைவில் நிறுத்தமுடியும். ஆனால், தோனி என்றதும் தோனி முகம்தான் நினைவுக்கு வரும். உயிருடன் இருப்பவரின் வாழ்க்கையைப் படமெடுத்தால் வரும் சிக்கல் அது. அதிலும் சிக்ஸர் அடித்தார். சுஷாந்த்தின் இன்னொரு சிக்ஸர் ‘சிச்சோர்ரே.’ தேர்வில் தோற்ற தால் தற்கொலைக்கு முயன்ற மகனிடம் சுஷாந்த் பேசும் காட்சி, தற்கொலைக்கு முயல்பவர்களை ஒருகணம் யோசிக்க வைக்கும். அதை யேனும் அந்த மோசமான முடிவு எடுப்பதற்கு முன்பு அவர் பார்த்திருக்கலாம் என உருகுகிறார்கள் ரசிகர்கள்.

ஆல் இந்தியா ரேங்க் எடுக்குமளவுக்கு படிப்பில் கெட்டி; ஆனாலும் கல்லூரியை விட்டு நடிப்புத்துறையில் சாதித்தற்குக் காரணம் அவரின் ஆர்வமும் உழைப்பும்தான்.. இயற்பியல், வானியல், கம்யூட்டர் கோடிங் என எல்லாவற்றிலும் சுஷாந்த் ஷார்ப். அவர் இன்ஸ்டா பக்கம் அவரின் வேறொரு உலகை நாம் பார்க்க விட்டுச் சென்றிருக்கிறது.

தனிமை சுகமும் சோகமும், வரமும் சாபமும் கலந்ததொரு கலவை. தனிமை தரும் அக உணர்வு இதுதான் என யாராலும் எப்போதும் பகுப்பாய்வு செய்ய இயலாது. ஏனெனில் அது நபருக்கு நபர் மாறுபடும். சிலருக்கு நிம்மதி தரும் தனிமை, ஏனோ சுஷாந்த்துக்கு அப்படியானதாக இல்லை. சுஷாந்த் தன் அப்பாவிடம் பேச முயன்றார். ஆனால், இந்த லாக்டௌனில் அது நடக்கவில்லை. பவித்ரா ரிஷ்தா (திருமதி செல்வத்தின் இந்திவெர்சன்) தொலைக் காட்சித் தொடரில் தன்னுடன் நடித்த அங்கிதா லொன் கண்டேவை ஆறு ஆண்டுகள் காதலித்தார். இருவரும் 2016-ம் ஆண்டு பிரிந்தனர். ஜூன் 11-ம் தேதி அங்கிதாவுக்கு நிச்சயதார்த்தம் முதல் பல செய்திகள் சுஷாந்த்தின் மரணத்தில் கிசுகிசுக்கப்படு கின்றன. ஆனால், எதற்கும் ஆதாரமும் இல்லை. இது அதற்கான நேரமும் இல்லை.

34 வயதான சுஷாந்தின் வாழ்க்கையில் நிறைய பாடங்கள் நமக்குண்டு, இந்த ஒரு முடிவைத் தவிர.

எதிர்மறை எண்ணங்கள் உங்களுக்குத் தோன்றினால், தயவு செய்து அருகிலிருக்கும் இதுபோன்ற மனநல மையங்களை அணுகவும். Sneha India Foundation: +914424640050. நேரம் : காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை.