சினிமா
தொடர்கள்
Published:Updated:

கரைகளையும் திரைகளையும் கடந்த நதி!

vikatan
பிரீமியம் ஸ்டோரி
News
vikatan

இன்று நெட்ஃப்ளிக்ஸைத் திறந்தால் அதன் முகப்பில் காட்டப்படும் சீரிஸ்/படங்களில் ஏதேனும் ஒன்றிலேனும் நிச்சயம் ராதிகா ஆப்தேவின் முகம் தென்படும்.

நான் ஒரு பெரிய பட்ஜெட் படத்தில் நடிப்பேன். அப்படியே ஒரு சுயாதீனப் படத்தில் நடிப்பேன். பிறகு ஒரு குறும்படம் நடிப்பேன். கூடவே ஓடிடியில், டிவியில் ஷோக்கள் செய்வேன். ஏன், மேடை நாடகத்தில்கூட நடிப்பேன். எனக்கு இதில்தான் நடிக்கவேண்டும் என்ற வரையறையெல்லாம் இல்லை. எதுவாக இருந்தாலும் சொல்லவரும் கன்டென்ட் எனக்கு சுவாரஸ்யமானதாகத் தோன்ற வேண்டும், அவ்வளவே!’’

கரைகளையும் திரைகளையும் கடந்த நதி!

'சின்னத்திரைக்கு இப்போதே போவதா' எனச் சின்னத்திரையையும் ஓடிடி-யையும் ஏதோ ஓய்வுபெற்றவர்களின் சரணாலயமாக எண்ணும் மனப்பான்மை இன்றும் பல உச்ச நடிகர், நடிகைகளிடம் காணப்படுகிறது. இதிலிருந்து மாறுபட்டு, கலையின் வெளி பெரியது, அதற்கு எல்லைகளில்லை என்பதை உணர்த்துமாறு வெள்ளித்திரை முதல் நம் கைகளிலிருக்கும் ஸ்மார்ட்போன் தொடுதிரை வரை அனைத்தையும் ஆக்கிரமித்துவிட்ட ராதிகா ஆப்தே எனும் நடிப்பு ராட்சசிக்கு அறிமுகமே தேவையில்லை.

கொரோனா வைரஸ் தாக்கம் இன்று நாட்டையே உலுக்கிக்கொண்டிருக்க, பல்வேறு முன்னணித் தயாரிப்பாளர்கள், நடிகர்கள் ஓடிடிக்குத் தங்களின் படங்களை விற்பது, ஓடிடிக்கு என்றே பிரத்யேகமாக படங்கள், வெப்சீரிஸ்கள் செய்வது எனக் களமிறங்க முடிவு செய்துவிட்டனர். அவர்கள் அத்தகைய டிஜிட்டல் உலகில் நுழையும்போது அங்கே ஏற்கெனவே ராதிகா ஆப்தே தனக்கான இடத்தைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு அமர்ந்திருப்பார். ஆம், இன்று நெட்ஃப்ளிக்ஸைத் திறந்தால் அதன் முகப்பில் காட்டப்படும் சீரிஸ்/படங்களில் ஏதேனும் ஒன்றிலேனும் நிச்சயம் ராதிகா ஆப்தேவின் முகம் தென்படும்.

கரைகளையும் திரைகளையும் கடந்த நதி!

பிறந்த இடம் நம் வேலூர் என்றாலும் புனேயைச் சொந்த ஊராகக் கொண்ட ராதிகா ஆப்தேவின் பெற்றோர் இருவருமே மருத்துவர்கள். சிறு வயதில் வீட்டிலேயே கல்வி கற்கும் முறையில் பயின்றவர் கல்லூரியில் பொருளாதாரமும் கணிதமும் எடுத்துப் படித்தார். புனேயிலிருந்தபோதே கதக் நடனத்தைக் கற்றவர், அங்கேயே நாடகக் கலையிலும் கால் பதித்தார். ஒரு வருடம் லண்டனில் நடனம் பயின்று திரும்பியவருக்குப் பாலிவுட்டில் ஒரு மெகா பட்ஜெட் படத்தில் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அவரின் உடல் பருமனாக இருப்பதாகக்கூறி வெளியே அனுப்பியது தயாரிப்புத் தரப்பு.

கல்லூரியில் படித்தபோதே ஓர் இந்திப் படத்தில் சிறிய வேடத்தில் நடித்தவருக்கு நாயகியாக முதல் ரிலீஸ் என்னவோ 2009-ல் வெளியான `அந்தஹீன்' என்ற வங்காளப் படம்தான். படத்தின் நாயகன் ராகுல் போஸ், ராதிகாவின் நடிப்பை ஒரு மேடை நாடகத்தில் பார்த்து அவரை நாயகியாகத் தேர்ந்தெடுத்தார். அதில் பிருந்தா எனும் துணிச்சலான டி.வி நிருபர் பாத்திரம். கூடவே அபர்ணா சென், ஷர்மிளா தாகூர் எனப் புகழ்பெற்ற கலைஞர்கள் அவருடன் நடித்தனர். நெகிழ்ச்சியான காதல் கதையான இது, நான்கு தேசிய விருதுகளை அள்ளியது. லூசுப்பெண்களாக நாயகிகள் சித்தரிக்கப்பட்ட அந்தக் காலகட்டத்தில் முதல் படத்திலேயே சுதந்திரமான, தைரியமான பெண் பிருந்தாவாக எல்லோர் மனதிலும் இடம்பெற்றார் ராதிகா ஆப்தே.

கரைகளையும் திரைகளையும் கடந்த நதி!

அதன்பிறகு அவருக்கான பெரிய விசிட்டிங் கார்டாக அமைந்தது ராம்கோபால் வர்மா இரண்டு பாகங்களாக இயக்கிய `ரத்த சரித்திரம்' படம்தான். தமிழில் பிரகாஷ் ராஜ் இயக்கிய `தோனி' படத்தில் பாலியல் தொழிலாளி பாத்திரத்தில் நடித்தார். பின்னர் சில மராத்தி, பெங்காலி படங்களில் தலைகாட்டியவர் தமிழில் `ஆல் இன் ஆல் அழகுராஜா', `வெற்றிச்செல்வன்' படங்களில் நடித்தார். பாலிவுட்டில் இப்போதும் முடியாமல் நீண்டுகொண்டிருக்கும் பயோபிக் சீசனின் முக்கியத் தொடக்கப்புள்ளி நவாசுதின் சித்திக்கி நடிப்பில் 2015-ல் வெளியான `மாஞ்சி - தி மவுன்டைன் மேன்.' தன் கிராமத்தின் குறுக்கே இருக்கும் மலையைக் குடைந்து பாதை அமைத்து அரசு இயந்திரங்களோடு சண்டை செய்த தஸ்ரத் மாஞ்சியின் கதையைப் பேசிய படத்தில் மாஞ்சியின் கர்ப்பிணி மனைவியாக நடித்திருந்தார் ராதிகா ஆப்தே. ராதிகா நடிக்கத் தெரிந்த நடிகை என்பதையே அப்போதுதான் உணர்ந்துகொண்டது பாலிவுட்.

அதற்கு முன்னரே அனுராக் காஷ்யப் இயக்கிய `That Day After Everyday' என்ற குறும்படத்தில் ராதிகா தனி முத்திரை பதித்திருந்தாலும், 2015-ல் வெளியான `அஹல்யா' என்ற வங்காளக் குறும்படத்தில் ஒரு மிகப்பெரிய இளைஞர்கள் கூட்டத்தைத் தன்வசம் ஈர்த்தார். ராமாயணத்தில் இந்திரனின் அழகில் மயங்கி கணவர் கௌதம முனிவரின் சாபத்துக்கு உள்ளாகிக் கல்லான அகலிகையின் கதையில் மாற்றங்கள் செய்து, ‘இங்கே இந்திரனே தவறு செய்பவன், அவனே கல்லாகிறான்’ என்று புராணத்தை மாற்றி எழுதியது இந்தப் படம்.

கரைகளையும் திரைகளையும் கடந்த நதி!

அதன்பிறகு ராதிகா ஆப்தேவை இந்தியாவெங்கும் கொண்டு சென்றது 2016-ல் வெளியான லீனா யாதவ் இயக்கிய `பார்ச்டு' படம். திரைப்பட விழாக்களில் கவனம் ஈர்த்த இந்தப் படம் ராஜஸ்தானின் ஒரு பிற்போக்கான கிராமத்திலுள்ள நான்கு பெண்களின் கதையைப் பேசியது. பழங்கால நம்பிக்கைகள், ஆணாதிக்கம், குழந்தைத் திருமணம், வரதட்சணைக் கொடுமை, திருமணத்துக்குப் பின்னர் உடலுறவுக்குக் கட்டாயப்படுத்தும் கணவன் எனப் பல பிரச்னைகளைப் படம் தைரியமாக விமர்சித்தது. படம் வெளியாகும் முன்னரே ராதிகா ஆப்தேவின் நெருக்கமான, கவர்ச்சியான காட்சிகள் இணையத்தில் லீக்காகி வைரலாகின. ராதிகாவை விமர்சித்து இணையப் போராளிகள் கொடிபிடித்தனர்.

இது குறித்து அப்போது பேசிய ராதிகா ஆப்தே, ``அந்தக் காட்சிகள் இணையத்தில் வெளியானதை என் கணவருடன் காலை உணவருந்தும்போதுதான் அறிந்துகொண்டேன். எப்படியும் அதை மக்கள் அனைவரும் பார்ப்பார்கள் என்பது நான் அறிந்த ஒன்றுதானே. நானும் என் கணவரும் சிரித்துக்கொண்டோம். என் வாழ்வுக்குத் துளியும் சம்பந்தமில்லாத நபர்களுக்கு என்னைப் பற்றிக் கருத்துக் கூற என்ன உரிமை இருக்கிறது? விமர்சனம் செய்பவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது எனக்கு அவசியமில்லை. ஒரு மனிதராக, ஒரு கலைஞனாக நான் எப்படி இருக்கிறேன் என்பதுதான் எனக்கு முக்கியம்’’ என்றார்.

அதே வருடம், `ஃபோபியா' என்ற உளவியல் சார்ந்த த்ரில்லர் படத்தில் நடித்தவர், தமிழில் பா.இரஞ்சித் இயக்கிய `கபாலி' படத்தில் ரஜினிகாந்துடன் நடித்தார். அதன்பிறகு வரிசையாக நெட்ஃப்ளிக்ஸ் தயாரிப்புகளான `லஸ்ட் ஸ்டோரீஸ்', `சேக்ரெட் கேம்ஸ்', `கவுல்' என நடித்துத் தள்ளினார். 2018-ல் ஆயுஷ்மான் குரானோவோடு இவர் நடித்த `அந்தாதுன்' சர்வதேச கவனம் பெற்று தேசிய விருதுகளையும் குவித்தது.

2019-ல் ஹாலிவுட்டில் அடியெடுத்து வைத்தவர், `The Wedding Guest', `The Ashram', `A Call to Spy' என வரிசையாகப் படங்கள் செய்தார். இதில் `ஏ கால் டு ஸ்பை' படம் இரண்டாம் உலகப் போரில் பிரிட்டனின் உளவாளியாகப் பணியாற்றிய மூன்று பெண்களின் வாழ்வைப் பற்றிப் பேசியது. ராதிகா ஆப்தே சர்வதேச கவனம் பெற்றார். அவரின் சமீபத்திய நெட்ஃப்ளிக்ஸ் ரிலீஸ் நவாசுதீனுடன் நடித்த `ராத் அகேலி ஹை' என்ற த்ரில்லர் படம். இதில் நவாசுதீனையே பல இடங்களில் ஓரங்கட்டி ஸ்கோர் செய்திருப்பார் ராதிகா ஆப்தே. இந்த வருடம் வெளியான ஹாட்ஸ்டார் சிரீஸான `ஓகே கம்ப்யூட்ட'ரில் நாயகியாக நடித்திருப்பவர், அடுத்த வருடம் `ஷாந்தாராம்' எனும் வெப்சீரிஸ் மூலம் `ஆப்பிள் டிவி ப்ளஸ்' ஓடிடியிலும் களமிறங்குகிறார்.

கரைகளையும் திரைகளையும் கடந்த நதி!
கரைகளையும் திரைகளையும் கடந்த நதி!

நடிப்பைத் தாண்டிப் பல சமூகப் பிரச்னைகள், பெண்ணுரிமை போன்றவை குறித்துப் பலமுறை தைரியமாகத் தன் கருத்துகளை எடுத்துரைத்திருக்கிறார் ராதிகா ஆப்தே. ஆண் நடிகர்களைவிடப் பெண் நடிகைகளுக்குக் குறைந்த சம்பளம் கொடுப்பது குறித்து விமர்சித்தது, மாதவிடாய் என்பது இயல்பான விஷயமே என்ற பிரசாரத்தை முன்னெடுத்தது, பாகிஸ்தான் நடிகர்கள் இந்தியாவில் நடிக்கக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டபோது அதை எதிர்த்து தைரியமாகக் குரல் கொடுத்தது எனப் பல இடங்களில் பல தருணங்களில் மக்கள் மனதில் இடம்பிடித்திருக்கிறார் ராதிகா ஆப்தே.

கரைகளையும் திரைகளையும் கடந்த நதி!

``நான் வாழ்வில் எந்த நெறிமுறைகளையும் பின்பற்றவில்லை. அவை எனக்கு அர்த்தமில்லாத ஒன்றாகவே தோன்றுகின்றன. எனக்குச் சரி என்று தோன்றுவதை, எனக்கு மகிழ்ச்சியளிப்பதை நான் செய்கிறேன்’’ என்று கூறும் ராதிகா ஆப்தேவுக்கு, பாலிவுட்டில் பெண் சூப்பர் ஸ்டார்களே உருவாகவில்லை என்ற வருத்தம் உண்டாம்.

ஆனால், நிஜ வாழ்விலும் சரி, சினிமாவிலும் சரி, ஒரு ராக்ஸ்டார் உண்டு. அவர் பெயர் ராதிகா ஆப்தே!