சினிமா
Published:Updated:

பாலிவுட்டின் நம்ம வீட்டுப்பிள்ளை!

ரன்வீர் சிங்
பிரீமியம் ஸ்டோரி
News
ரன்வீர் சிங்

அந்த ஷோ அதன்பிறகு பல்வேறு விமர்சனங்களைச் சந்தித்து இணையத்திலிருந்து நீக்கப்பட்டாலும், அன்று ரன்வீர் செய்தது எந்த நடிகனும் செய்யத் தயங்கும் ஒன்று.

பல நூறு பேர் கூடியிருக்கும் அரங்கம். அதுவரை பாலிவுட்டல்ல, இந்தியத் திரையுலகமே காணாத நிகழ்வு அங்கு அரங்கேறிக்கொண்டிருந்தது. நடு மேடையில் கரண் ஜோஹர் மற்றும் அர்ஜுன் கபூருடன் ரன்வீர் சிங்கும் அமர்ந்திருக்கிறார். அதே மேடையில் ஸ்டாண்ட் அப் காமெடி செய்பவர்கள், யூடியூபர்கள், சினிமா விமர்சகர்கள் ஒவ்வொருவராக மைக் முன்னால் வந்து நின்று, ஸ்டேஜின் நடுவிலிருக்கும் மூவரையும் அதுவரை கேட்டிராத வகையில் கலாய்ப்பது, வசைபாடுவது போன்றவற்றைச் செய்கிறார்கள். சபை நாகரிகம் காற்றில் பறக்க, சென்சார் செய்யப்படவேண்டிய வார்த்தைகள் பல வந்து விழுகின்றன. இவர்கள் மூவருமே அதை ஜாலியாக எடுத்துக்கொண்டு சிரிக்கின்றனர். சிரிக்கத்தான் வேண்டும். அதுதான் கேம். மேற்கத்திய நாடுகளில் பிரபலமான 'ரோஸ்ட்' கலாசாரத்தை அன்று இந்தியாவிற்கு இறக்குமதி செய்திருந்தனர். எத்தனை திட்டினாலும், எப்படித் திட்டினாலும் அதை ஜாலியாக எடுத்துக்கொள்ள வேண்டும். கோபம் கொள்ளக்கூடாது. அர்ஜுன் கபூரே ஒரு தருணத்தில் சற்றுப் பொறுமையிழந்தாலும், ரன்வீர் விட்டுக்கொடுக்கவே இல்லை.

அது தீபிகா படுகோன் ரன்வீர் சிங்கை டேட்டிங் செய்துவந்த காலகட்டம். ஸ்டாண்ட் அப் காமெடியன் அதிதி மிட்டல், அரங்கில் பார்வையாளராக அமர்ந்திருக்கும் தீபிகாவை நோக்கி, ‘‘உனக்கு நன்றிம்மா! நீ பேருதவி செய்துகொண்டிருக்கிறாய். ரன்வீரை டேட்டிங் செய்வதன் மூலம் அவர் வேறெந்தப் பெண்ணுக்கும் தொந்தரவு கொடுக்காமல் பார்த்துக்கொள்கிறாய். பெண் இனத்திற்காக மிகப்பெரும் தியாகத்தைச் செய்கிறாய்’’ என்கிறார். தீபிகா அதை ரசித்து கண்களில் நீர் வரச் சிரிக்க, ரன்வீர் அதைவிட வெடித்துச் சிரிக்கிறார். மற்றொருவர், ‘‘தீபிகாவின் டேட்டிங் ஸ்டாண்டர்டு ஏன் இப்படி இறங்கிவிட்டது என்று தெரியவில்லை. ரன்பீர் கபூருடன் டேட்டிங் போனவர் தற்போது ரன்வீர் சிங்குடன் சுற்றுகிறார். ஆனால், அவரின் மன வருத்தம் எங்களுக்குப் புரியும். ஏனென்றால் இந்த விழாவின் நாயகனாக நாங்களும் ரன்பீர் கபூரைத்தான் கேட்டோம். அவர் ஒத்துக்கொள்ளாததால் எங்களுக்குக் கிடைத்தது என்னவோ ரன்வீர்தான்’’ எனச் சொல்ல, மீண்டும் கூட்டத்தில் ஆர்ப்பரிப்பு. ரன்வீரே கைதட்டி ரசிக்கிறார்.

பாலிவுட்டின் நம்ம வீட்டுப்பிள்ளை!

அந்த ஷோ அதன்பிறகு பல்வேறு விமர்சனங்களைச் சந்தித்து இணையத்திலிருந்து நீக்கப்பட்டாலும், அன்று ரன்வீர் செய்தது எந்த நடிகனும் செய்யத் தயங்கும் ஒன்று.

எப்போதும் மோனோக்ரோம் மோடில் சிம்பிள் சட்டையுடன் உலா வரும் விஜய், ‘சும்மா நம்ம நண்பர் அஜித் மாதிரி ட்ரை பண்ணலாம்னு...’ என்று ஒருமுறை ப்ளேசரில் வந்து நின்றதே இங்கே பேசுபொருளானது. ஆனால், ரன்வீர் அங்கே உடையலங்காரம் எனும் பெயரில் செய்யும் கூத்துகள் விநோதமானவை. வெயில் பிளக்கும் கிரிக்கெட் மேட்ச்சுக்கு ஆடியன்ஸாக சென்றால்கூட இறுக்கமான உடை, தலையில் ரவுண்டு தொப்பி என வந்து நின்று லைவ் டிவி கேமராக்களைத் தன் பக்கமே நிற்கும் சிசிடிவி கேமராக்களாக மாற்றிவிடுவார். தன் மனைவி தீபிகா படுகோனே அருகிலிருந்தாலும் அவரையும் மீறி ஸ்பாட்லைட்டைத் தன் பக்கம் திருப்பிவிடுவார். காரணம், அந்த காஸ்ட்யூம்! ஐந்து நிமிட புரோக்ராம்தான் என்றாலும் கௌபாய் உடையில் செல்லலாமா என யோசிக்கக்கூடிய மனிதர்.

பாலிவுட்டின் நம்ம வீட்டுப்பிள்ளை!

2010-ல் பாலிவுட்டில் அடியெடுத்து வைத்த ரன்வீர் சிங்கிற்கு பால்யம் முதலே பாலிவுட் படங்கள்தான் எல்லாமே! ‘‘நான் குழந்தையாக இருந்தது முதலே இந்திப் படங்கள்தான் என்னை வசீகரித்தன. அதற்கு அப்பாற்பட்டு எனக்கு எந்த மொழிப் படங்கள் குறித்தும் தெரியாது. பாலிவுட்தான் என்னுள் இருக்கும் கலைஞனை வளர்த்தது’’ என்கிறார். யாஷ் சோப்ரா நிறுவனத் தயாரிப்பில் நாயகனாக நடிக்கவேண்டும் என்பது இன்றும் பல இந்தி நடிகர்களின் கனவு. அது ரன்வீருக்கு முதல் படத்திலேயே அமைந்தது. அனுஷ்கா ஷர்மாவுடன் இவர் நடித்த 'பேண்ட் பஜா பாரத்' படம் யாரும் எதிர்பாரா வண்ணம் மிகப்பெரிய ஹிட்டானது. ஒரு ஹிட் கொடுத்ததும் பாலிவுட் ஹீரோக்கள் பின்பற்றும் அதே சாக்லெட் பாய் பாணியைத்தான் ரன்வீரும் பின்பற்றினார்.

ரன்வீரின் கரியரில் அவர் ஓர் அசாத்திய நடிகன் என்பதை நிரூபித்த படம் என்றால் அது விக்கிரமாதித்ய மோத்வானே இயக்கத்தில் சோனாக்‌ஷி சின்ஹாவுடன் அவர் நடித்த ‘லூதேரா' படம்தான். எழுத்தாளர் ஓ.ஹென்றியின் புகழ்பெற்ற கதையான ‘தி லாஸ்ட் லீஃப்'பின் திரைப் பிரதிபலிப்பாக உருவான படம், ரன்வீரை ஒரு மாஸ்டர் கிளாஸ் நடிகன் என இனங்காட்டியது. அதேபோல் ரன்வீரின் கரியரில் இரண்டு இயக்குநர்கள் முக்கியமானவர்கள். ஒருவர் சஞ்சய் லீலா பன்சாலி, மற்றொருவர் ரோஹித் ஷெட்டி. தன்னை ஒரு நடிகராக நிலைநிறுத்திக்கொள்ள பன்சாலியின் இயக்கத்தில் அவர் நடித்த மூன்று படங்கள் பெரும்பங்கு வகித்தன. ஷேக்ஸ்பியரின் ‘ரோமியோ - ஜூலியட்' கதையை ‘கோலியோன் கி ராஸ்லீலா ராம்லீலா' என இயக்க, அதில் தீபிகா படுகோனுடன் ஜோடி சேர்ந்தார். இவர்களின் கெமிஸ்ட்ரி பெரிய அளவில் பேசப்பட, அதே பன்சாலி மேலும் இரண்டு படங்களை இந்த ஜோடியை வைத்தே இயக்கினார். மராத்திய பேஷ்வாக்களின் வரலாற்றைப் பேசிய ‘பாஜிராவ் மஸ்தானி'யில் ரன்வீர் வேறொரு நடிகனாக வந்து நின்றார். அந்தப் படம் இரண்டு தேசிய விருதுகளை வென்றதோடு, ஒன்பது பிலிம்பேர் விருதுகளையும் வென்றது.

பாலிவுட்டின் நம்ம வீட்டுப்பிள்ளை!

இதே டீம் 2018-ல், ‘பத்மாவத்' படத்தை எடுக்க, அதில் தீபிகா ஸ்கோர் செய்தாலும், அலாவுதின் கில்ஜியாக ரன்வீர் சிங் செய்தது ஆகப்பெரிய சம்பவம். அதற்காக பிலிம்பேர் விருதை வென்றதோடு மட்டுமல்லாமல், அந்த வருடத்தின் சிறந்த என்டர்டெயினர் ரன்வீர் எனப் பல விருது விழாக்கள் மகுடம் சூட்டின. இந்த மூன்றும் கிளாஸான ஹிட் படங்கள் என்றபோதும், ஒரு மாஸ் ஹீரோவாகத் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள விரும்பினார் ரன்வீர் சிங். 2014-ல் அர்ஜுன் கபூருடன் அவர் சேர்ந்து நடித்த ‘கன்டே', 2016-ல் அதித்ய சோப்ராவின் இயக்கத்தில் அவர் நடித்த ‘பேஃபிகர்' (Befikre) படங்கள் ஹிட்டாகின என்றாலும், அந்த மாஸ் இமேஜ் மட்டும் கைகூடிவரவில்லை. அப்போதுதான் கமர்ஷியல் இயக்குநர் ரோஹித் ஷெட்டி ‘சிம்பா'வுடன் வந்து ‘டெம்பர்' ஏற்றினார். தெலுங்கு ரீமேக்கான இந்தப் படம் விமர்சகர்களைக் கடுப்பேற்றினாலும் ‘சிம்பா' போலீஸாக ரன்வீர் சிம்மாசனம் போட்டு அமர்ந்தார். எல்லா சென்டர்களிலும் கல்லா கட்டிய படம் 400 கோடி வசூலைத் தொட்டது.

பாலிவுட்டின் நம்ம வீட்டுப்பிள்ளை!

ரன்வீர் சிங்கின் நடிப்பில் மற்றொரு மைல்கல்லாய் அமைந்த படம், ஜோயா அக்தரின் இயக்கத்தில் அலியா பட்டுடன் அவர் இணைந்து நடித்த ‘கல்லி பாய்.' மும்பையின் தாராவியில் ராப் இசைக் கலைஞனாக உலா வரும் ரன்வீர் தன் கரியரில் சாதிப்பதே படத்தின் கதை. 2019-ல் வெளியான படம், 13 பிலிம்பேர் விருதுகளை வென்று பாலிவுட்டில் அதுவரை எந்தப் படமும் செய்திடாத சாதனையைச் செய்தது. ரன்வீர் இதில் 7 பாடல்களை வேறு பாடியிருந்தார்.

இப்போது மீண்டும் ரோஹித் ஷெட்டி பக்கம் திரும்பியிருக்கும் ரன்வீர், அக்‌ஷய் குமார், அஜய் தேவ்கனுடன் இணைந்து நடித்திருக்கும் ‘சூர்யவன்ஷி' படத்துக்காக வெயிட்டிங். இதில் மீண்டும் சிம்பாவாக காக்கியில் வரவிருக்கிறார். அதே சமயம் 1983-ல் கிரிக்கெட் உலகக்கோப்பையை இந்தியா வென்றதை மையப்படுத்தி உருவாகியிருக்கும் ‘83' படத்தில் ரன்வீர்தான் கபில்தேவ். தீபிகா மீண்டும் இதில் இவருடன் ஜோடி சேர்ந்திருக்கிறார்.

பாலிவுட்டின் நம்ம வீட்டுப்பிள்ளை!

‘‘நடிகனாக நான் கற்றுக்கொண்டது ஒன்றுதான். மக்களின் கருத்துகளைப் பெரிதாக எடுத்துக்கொண்டு அதையே நினைத்துக்கொண்டிருக்கக்கூடாது. அது பாராட்டாக இருந்தாலும் சரி, கடுமையான விமர்சனமாக இருந்தாலும் சரி!’’ என்று தன் ஃபார்முலாவை உடைக்கும் ரன்வீர் நிஜ வாழ்க்கையிலும் அப்படித்தான் இருக்கிறார். விமர்சனங்களை ஒதுக்கிவிட்டு தனக்குப் பிடித்ததைச் செய்கிறார். அதற்குப் பேரார்வத்துடன் அதீத உழைப்பைக் கொட்டுவதால் மக்களும் அவரை ரசிக்கின்றனர். அந்த வகையில் ரன்வீர் சிங் பாலிவுட்டின் ‘நம்ம வீட்டுப் பிள்ளை.'