பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் வரும் 9-ம் தேதி ராஜஸ்தானில் தனது காதலன் விக்கி கௌஷலைத் திருமணம் செய்ய இருக்கிறார். இத்திருமணம் கடைசி வரை ரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தது. கத்ரீனா தரப்பிலோ அல்லது விக்கி கௌஷல் தரப்பிலோ திருமணம் குறித்து எந்தத் தகவலையும் வெளியிடவில்லை. திருமணத் தகவலை எப்படி ரகசியமாக வைத்துக்கொண்டார்களோ அதேபோன்று தங்களது காதலையும் இருவரும் மிகவும் ரகசியமாகவே வைத்துக்கொண்டனர். எந்த ஒரு சூழ்நிலையிலும் தங்களது காதலை வெளிப்படையாக அறிவித்துக்கொண்டது கிடையாது. அதோடு பொது நிகழ்ச்சிகளில்கூட இருவரும் சேர்ந்து வருவதைத் தவிர்த்து வந்தனர். அதோடு இதற்கு முன்பு ஒரு படத்தில்கூட இருவரும் சேர்ந்து நடித்ததும் கிடையாது. இதற்கு முன்பு நடிகர் ரன்பிர் கபூரை கத்ரீனா சில ஆண்டுகள் காதலித்ததோடு அவரோடு தனி வீட்டில் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வந்தார்.

பிறகு அவர்களது காதல் முறிந்துவிட்டது. எனவேதான் தனது புதிய காதலை ரகசியமாகவே வைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் கத்ரீனா உறுதியாக இருந்திருக்கிறார் என்கின்றனர். அதுவும் தன்னைவிட வயது குறைந்த விக்கி கௌஷலைக் கத்ரீனா எப்படி காதலித்தார் என்பதுதான் அனைவருக்கும் ஆச்சரியமான ஒன்றாக இருக்கிறது. அவர்களின் காதலுக்கு இயக்குனர் கரண் ஜோகர் முக்கிய காரணமாக இருந்திருக்கிறார். 2018-ம் ஆண்டு கரண் ஜோக்கரின் காஃபி வித் கரண் 6 ஷோவில் நடிகை கத்ரீனா கைஃப் பங்கேற்றார். அவரிடம் யாருடன் சேர்ந்து நடிக்க விரும்புகிறீர்கள் என்று கத்ரீனாவிடம் கேட்டதற்கு விக்கி கௌஷலுடன் சேர்ந்து நடித்தால் நன்றாக இருக்கும் என்று தனது ஆசையை வெளிப்படுத்தினார்.

அடுத்த சில நாட்களில் விக்கி கௌஷலும் அதே நிகழ்ச்சியில் பங்கேற்றார். அவரிடம் கத்ரீனா கைஃப் சொன்ன விஷயத்தை கரண் ஜோகர் சொன்னபோது அதனை கேட்டு விக்கி மயங்கி விழுந்தார். இந்த நிகழ்வுக்குப் பிறகு இருவரும் தனிப்பட்ட முறையில் வெளியுலகிற்கு தெரியாமல் தங்களது நட்பை வளர்த்து வந்தனர். அதுவே நாளடைவில் காதலாக மாறியது. 2019-ம் ஆண்டு இருவரும் சேர்ந்து ஹோட்டலில் சாப்பிட சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அவர்கள் இருவரும் நட்பில் இருக்கின்றனர் என்பதை வெளியுலகிற்கு காட்டியது. அதோடு அலிபாக்கிலும் இருவரும் சேர்ந்து விடுமுறையைக் கழித்தனர். முதல் முறையாக நண்பர் ஒருவரின் தீபாவளி விருந்தில் இருவரும் சேர்ந்து கலந்துகொண்டனர். அதன் பிறகு திரைப்பட விருது நிகழ்ச்சிகள் உட்பட பல நிகழ்ச்சிகளில் இருவரும் ஒன்றாக கலந்துகொண்ட போதிலும் ஒருபோதும் தங்களது காதலை வெளியுலகிற்கு தெரிவித்துக்கொண்டது கிடையாது.
2019-ம் ஆண்டு திரைப்பட விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் விக்கி கௌஷல் கத்ரீனாவிடம் விளையாட்டாக தனது காதலை வெளிப்படுத்தினார். கொரோனா பொது முடக்க காலத்தில் விக்கி கத்ரீனா கைஃப் இல்லத்திற்கு சென்று அவரைச் சந்தித்திருக்கிறார். ஆனால் சமீபத்தில் அதனை பத்திரிக்கையாளர்கள் கண்டுபிடித்தனர். இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தவுடன் கடந்த தீபாவளியன்று திருமண நிச்சயதார்த்தம் போன்ற ஒரு நிகழ்ச்சியை தனது நண்பரும், தயாரிப்பாளருமான கபீர் கான் வீட்டில் கேத்ரீனா நடத்தினார். இதில் இரு வீட்டார் மட்டுமே கலந்து கொண்டனர்.

கபீர்கானை கத்ரீனா தனது சகோதரனாக கருதுவதால் அவரது வீட்டில் இந்த நிகழ்ச்சி நடந்தது. திருமணத்திற்காக 6-ம் தேதி மும்பையில் இருந்து புறப்பட்டு சென்ற போதுதான் கத்ரீனா கைஃப் பத்திரிக்கையாளர்களைப் பார்த்து சிரித்த முகத்துடன் கையடைத்தார். ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் இருந்து திருமண ஜோடி விஐபிக்கள் செல்லும் வழியாக வெளியில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இருவரும் ஆரம்பத்தில் ஹெலிகாப்டர் மூலம் திருமணம் நடைபெறும் இடத்திற்கு செல்வதாக இருந்தது. ஆனால் விக்கி மற்றும் கத்ரீனா ஆகியோர் தனித்தனியாக தங்களது குடும்ப உறுப்பினர்களுடன் காரில் திருமணம் நடைபெறும் இடத்திற்குச் சென்றனர்.