Published:Updated:

மங்கள்யான் டீமில் இருந்த தமிழர்களை `மிஷன் மங்கள்’ படத்தில் காட்டாதது ஏன்..? - இயக்குநர் ஜகன் பதில்

பாலிவுட் இயக்குநர் பால்கியின் திரைப்படங்களிலும், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின் 'துப்பாக்கி', 'ஹாலிடே' போன்ற படங்களிலும், துணை இயக்குநராகப் பணியாற்றிய இயக்குநர் ஜகன் ஷக்தியின் அறிமுகப் படம் 'மிஷன் மங்கள்', பாலிவுட்டில் பெரும் வசூல் சாதனையை நிகழ்த்தி வருகிறது. அவரிடம் பேசினோம்.

Mission Mangal
Mission Mangal

பாலிவுட்டுக்குள் எப்படி நுழைந்தீர்கள்?

Director Jagan Shakti and Akshay Kumar
Director Jagan Shakti and Akshay Kumar
Mission Mangal

"நான் பெங்களூரில் படித்து வளர்ந்தவன். பள்ளிக் காலத்தில், மைசூர் இந்தி பிரசார பரிஷத் என்ற அமைப்பில் இந்தி கற்றுக்கொண்டேன். சிறுவயதில் என் பெற்றோர் கட்டாயப்படுத்தியதால், விருப்பமில்லாமல் இந்தி கற்றுக்கொள்ள நேர்ந்தது. மேலும் பெங்களூரில் அனைத்து மொழி திரைப்படங்களும் வெளியாகும். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என அனைத்து மொழித் திரைப்படங்களையும் பார்த்து வளர்ந்தேன். அப்போதிருந்தே மாஸ் ஹீரோ திரைப்படங்கள் என்னைக் கவர்ந்தன. இன்ஜினீயரிங் படிப்பு முடித்து, அது தொடர்பான பணியில் இருந்தேன். அது சலிப்படையவே, சினிமா கற்றுக்கொள்ள திரைப்படப் பள்ளியில் சேர்ந்தேன். அடுத்ததாக, இயக்குநர் பால்கியிடம் துணை இயக்குநராகப் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு, இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் 'துப்பாக்கி' இயக்கியபோது, அவரிடம் துணை இயக்குநராகப் பணியாற்றினேன். அதன் பிறகு அவர் இயக்கிய 'ஹாலிடே', 'அகிரா' போன்ற இந்திப் படங்களில் வேலை செய்தேன். பால்கி சாருடனும் முருகதாஸ் சாருடனும் இந்திப் படங்களில் பணியாற்றியதால், நானும் பாலிவுட்டில் முதல் படத்தை இயக்கியிருக்கிறேன்.’’

இந்தியாவின் வரலாற்றில் 'மங்கள்யான்' விண்ணில் செலுத்தப்பட்டது மிக முக்கியமான நிகழ்வு. அதைப் பற்றி திரைப்படம் இயக்க வேண்டும் என்ற எண்ணம் எப்படி வந்தது?

’’என் அக்கா இஸ்ரோவில் விஞ்ஞானியாகப் பணியாற்றி வருகிறார். அவரை அருகில் இருந்து பார்த்திருக்கிறேன். அவரைப் போல, பல பெண்கள் தினமும் காலை எழுந்து, வீட்டில் அனைத்து வேலைகளையும் செய்துவிட்டு, இஸ்ரோவில் பணியாற்றி மிகப்பெரிய சாதனைகளை நிகழ்த்தி வருகின்றனர். ஒவ்வொரு மாலையும் அலுவலகத்தில் இருந்து கிளம்பி வரும்போது, இரவு உணவுக்கு என்ன சமைப்பது என்பதை சிந்தித்துக்கொண்டே வீட்டுக்கு வருகின்றனர். இப்படியான வாழ்க்கை முறையும் திறமையும் ஆண்களுக்கு இல்லை. எனவே, இஸ்ரோவில் பணியாற்றும் பெண்களுக்காக இந்தப் படத்தை இயக்க விரும்பினேன். மங்கள்யான் விண்ணில் செலுத்தப்பட்ட பிறகு, எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தில், இஸ்ரோவின் பெண்கள் அதைக் கொண்டாடிக்கொண்டு இருப்பார்கள். அந்தப் புகைப்படம்தான் இந்தப் படத்துக்கான ட்ரிக்கர்!’’

Vikatan

அக்‌ஷய் குமார் தொடர்ந்து தேசப்பற்று சார்ந்த திரைப்படங்களிலும் ஆக்‌ஷன் திரைப்படங்களிலும் நடித்து வருபவர். பெண்களை முன்னிலைப்படுத்தும் 'மிஷன் மங்கள்' படத்துக்குள் அவர் எப்படி பொருந்தினார்?

Mission Mangal
Mission Mangal

"மங்கள்யான் வெற்றிக் கொண்டாட்டத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இந்தப் படத்துக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்தாலும், 'மிஷன் மங்கள்' மிகப்பெரிய கமர்ஷியல் திரைப்படமாக இருக்க வேண்டும் என நினைத்தேன். மற்ற கதாபாத்திரங்களைவிட, அவரது கதாபாத்திரம் படம் முழுவதும் இருக்கும். அக்‌ஷய் குமார் சமூக அக்கறையுள்ள மனிதர். அதனால் அவரது பெரும்பாலான படங்கள் தேசப்பற்றை மையப்படுத்தி வருகின்றன. எனினும் அவர் '2.0', 'காஞ்சனா' ரீமேக் முதலான கமர்ஷியல் படங்களிலும் நடித்து வருகிறார். அவர் எனக்கு நல்ல நண்பர். 'ஹாலிடே', 'பேட்மேன்' போன்ற படங்களில் அவரோடு பணியாற்றியிருக்கிறேன். அவருடன் சேர்ந்து 'கத்தி' படத்தின் பாலிவுட் ரீமேக்கை நான் இயக்குவதாக இருந்தது. ஆனால், அவர் '2.0' படத்தில் நடிக்க சென்றதால், அது நிறைவேறவில்லை. 'மிஷன் மங்கள்' படத்தைத் தமிழில் இயக்குவதற்காக முயற்சி செய்துகொண்டிருந்தபோது, அக்‌ஷய் குமார் அழைத்தார். இந்தக் கதை அவருக்குப் பிடித்ததால், அதை இந்தியில் படமாக்கினோம்.’’

சமீபத்தில் பாலிவுட்டில் வெளியாகும் திரைப்படங்கள் பற்றி..?

Director Jagan Shakti and Taapsee Pannu
Director Jagan Shakti and Taapsee Pannu
Mission Mangal

``பாலிவுட்டில் தற்போது பயோபிக் திரைப்படங்களுக்கு மார்க்கெட் இருக்கிறது. 'பதாய் ஹோ', 'அந்தாதுன்' போன்ற நல்ல ஐடியாக்களுடன் வெளிவரும் திரைப்படங்களும் மக்களிடம் சென்று சேர்கின்றன. இப்போது அனைவரிடமும் ஸ்மார்ட்போன் இருப்பதால், மக்கள் நல்ல திரைப்படங்களை எதிர்பார்க்கின்றனர். திரையரங்குகளில் திரைப்படம் பார்க்கும் மக்களின் எண்ணிக்கை மிகச்சொற்பம். கமல்ஹாசன் சில ஆண்டுகளுக்கு முன், தொலைக்காட்சிகளில் நேரடியாகத் திரைப்படம் பார்க்கும் திட்டத்தை முயற்சி செய்தார். தற்போது வெவ்வேறு விதமான தொலைக்காட்சிகள் வந்துவிட்டன. அதனால் மக்கள் நல்ல சினிமாவை எதிர்பார்க்கின்றனர். சேட்டிலைட் ரைட்ஸ் தரும் பணத்தைவிட, ஆன்லைன் தளங்கள் அதிக பணத்தைத் தருகின்றன. தியேட்டர் ஸ்க்ரீன்களைவிட, மொபைல் ஸ்க்ரீன்கள் அதிகரித்துவிட்டன. இதை சினிமாவுக்கான வளர்ச்சியாகப் பார்க்கிறேன்.’’

அக்‌ஷய் குமார், வித்யா பாலன், சோனாக்‌ஷி சின்ஹா, நித்யா மேனன், டாப்சி, ஷர்மான் ஜோஷி என ஒரு மிகப்பெரிய பட்டாளமே இருக்கிறதே... இவர்களை இயக்கிய அனுபவம்?

Director Jagan Shakti and Ravi Varman
Director Jagan Shakti and Ravi Varman
Mission Mangal

’’முருகதாஸ் சாருடன் பணியாற்றியபோது, அவர் அதிகமாக சுதந்திரம் அளித்தார். என் மீது அவர் வைத்திருந்த நம்பிக்கையால், பெரிய திரைப்படங்களைக் கையாண்டுள்ளேன். பால்கி சார் இயக்கிய படங்களும் பெரிய படங்கள். அந்த அனுபவமும் கைகொடுத்தது. டாப்சி, நித்யா மேனன் தவிர அனைவருடனும் ஏற்கெனவே பணியாற்றியிருக்கிறேன். இத்தனை பெரிய நடிகர்களும் என்னை அறிமுக இயக்குநராகப் பார்க்காமல், எனக்கான சுதந்திரத்தைக் கொடுத்தனர். அனைத்து நடிகர்களுக்கும் பலமாகவும் சமமாகவும் பின் கதைகளைக் கொடுத்திருந்தோம். ஒளிப்பதிவாளர் ரவிவர்மனுடன் முன்பே பணியாற்றிய அனுபவம் இருந்தது. நான் துணை இயக்குநராக இருந்தபோது, எதிர்காலத்தில் நான் இயக்கும் முதல் படத்தில் பணியாற்றுவதாக எனக்கு வாக்கு கொடுத்தார். அதை இதில் பயன்படுத்திக்கொண்டேன். ஒரு டீம் அமைந்ததால், படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.’’

மங்கள்யான் அனுப்பப்பட்ட போது ஆட்சியில் இருந்தது காங்கிரஸ் கட்சி. இந்தப் படத்தில் காங்கிரஸ் ஆட்சியில் மங்கள்யான் குழுவுக்கு ஒதுக்கப்பட்ட இடம் உட்பட அனைத்துமே தரம் குறைந்தவை எனவும், படத்தின் இறுதியில் மங்கள்யானுக்குத் தொடர்பே இல்லாத பிரதமர் மோடி தோன்றுவதும் இதை பி.ஜே.பி ஆதரவு திரைப்படம் என்ற அடையாளத்தை அளிக்கிறதே?

’’இல்லை. நாங்கள் இதை அப்படி அரசியலோடு அணுகவில்லை. ஒரு சுதந்திர தின உரையின்போது, பிரதமர் மோடி 'ஹாலிவுட் திரைப்படமான 'க்ராவிட்டி'யின் பட்ஜெட்டைவிட குறைந்த பட்ஜெட்டில் இந்திய விஞ்ஞானிகள் செவ்வாய்க்கிரகத்தை அடைந்துவிட்டனர். அகமதாபாத்தில் ஒரு கிலோமீட்டர் ஆட்டோ பயணத்தின் விலை 12 ரூபாய். நமது விஞ்ஞானிகள் கிலோமீட்டருக்கு 7 ரூபாய் செலவில் செவ்வாய்க்கிரகம் வரை சென்றுவிட்டனர்' என்று கூறியிருந்தார். அந்த வரிகள் முக்கியம் வாய்ந்தவை. அந்த வரிகளுக்காக மோடியின் பேச்சை இறுதியில் சேர்த்திருந்தோம். மேலும், இஸ்ரோவுக்கு ஒதுக்கப்பட்ட பணத்தில், மற்றொரு திட்டமாக மங்கள்யான் அமைந்தது. மத்திய அரசு பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் நிதிக்குள் இஸ்ரோ செயல்படுவதால், அந்தக் காட்சிகள் அப்போதைய காங்கிரஸ் அரசைக் குற்றம் சொல்லவில்லை. இந்தப் படம் அரசியல் சார்பில்லாமல், இந்தியாவின் விஞ்ஞானிகளைப் பாராட்டும் நோக்கத்தில் எடுக்கப்பட்டது.’’

Vikatan

'Padman' படத்திலும் பணியாற்றியிருக்கிறீர்கள். 'Padman' படத்திலும், 'மிஷன் மங்கள்' படத்திலும் காட்டப்படும் சாதனையாளர்கள் உண்மையில் தென்னிந்தியர்களாக இருக்க, இந்தி பார்வையாளர்களுக்காக அவர்களது அடையாளம் வட இந்தியர்களாக மாற்றப்பட்டிருப்பது ஏன்?

Mission Mangal
Mission Mangal

’’ 'மிஷன் மங்கள்' படத்தின் கதாபாத்திரங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பகுதியைச் சேர்ந்தவர்கள். ஆனாலும், முன்னணி கதாபாத்திரங்கள் இப்படி மாற்றப்படுவதற்குக் காரணம் பொருளாதாரம். பாலிவுட் சினிமாவில் வெளியாகும் திரைப்படங்களின் வசூல் மும்பை மண்டலத்தையும், டெல்லி மண்டலத்தையும் வைத்து இயங்குகிறது. இந்தி பேசும் பார்வையாளர்கள் பெரும்பான்மையாக இருப்பதால் இப்படியாக மாற்ற வேண்டியதாக இருக்கிறது. நிஜ வாழ்க்கையில் கோவையில் இருப்பவரை, சினிமாவில் இந்தி பேச வைத்து இயக்கினால், அது பார்வையாளர்களைச் சென்று சேர்வது கடினம். அதனால் புதிய கதாபாத்திரமாக மாற்றப்படுகிறது. எனினும், இரண்டு படங்களின் இறுதியிலும் உண்மையான சாதனையாளர்களின் அடையாளங்கள் காட்டப்படுகின்றன. ஒரு படைப்பாளியாக, பார்வையாளர்கள் தங்களைப் படத்தோடு இணைத்துக்கொள்ள இந்த மாற்றத்தை செய்ய வேண்டியதாக உள்ளது.’’

மயில்சாமி அண்ணாதுரை, சிவன் போன்ற பிற்படுத்தப்பட்ட சமூகங்களில் இருந்து வந்த தென்னிந்தியர்கள் 'மங்கள்யான்' திட்டத்தை வழிநடத்தியபோதும், 'மிஷன் மங்கள்' காட்டியிருக்கும் மங்கள்யான் குழுவினர் தென்னிந்தியாவைச் சேர்ந்த உயர்சாதியினராகக் காட்டப்பட்டுள்ளது ஏன்?

’’இந்தக் கதையை எழுதி, கதாபாத்திரங்களை வடிவமைத்தபோது, நாங்கள் இந்தக் கோணத்தில் யோசித்துப் பார்க்கவில்லை. 'மிஷன் மங்கள்' படத்தைத் தமிழில் ரீமேக் செய்ய வேண்டும் என்ற திட்டம் இருக்கிறது. அப்போது நிச்சயமாக இதைச் சரிசெய்ய வேண்டும் என நினைக்கிறேன். நித்யா மேனன் கதாபாத்திரத்தின் கணவரை விளிம்புநிலை மக்களுக்காக எழுதுபவராக வடிவமைத்திருந்தேன். அவர்களது வீட்டில் அம்பேத்கர் படம் மாட்டப்பட்டிருக்கும்."

"சாதி, மதம் பார்க்காமல், விளிம்புநிலை மக்களுக்காக என் படங்கள் பேச வேண்டும் என நினைக்கிறேன். விளிம்புநிலை மக்களில் இருந்து வரும் சாதனையாளர்களின் கதைகள் பெரிதாக எழுதப்பட வேண்டும். இங்கு நேரமின்மை காரணமாக, அவை சுருக்கப்பட, இவ்வாறு மாற்றுகிறோம்.’’
ஜகன் ஷக்தி