Published:Updated:

`இது... அதுல்ல' - கேம் ஆஃப் த்ரோன்ஸில் வரும் காட்சி காப்பியடிக்கப்பட்டதா? #TVPotti

வருண்.நா

இந்தி சீரியல் அலாவுதீனில் வரும் ஒரு காட்சி, உலகப் புகழ்பெற்ற தொடரான 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' சீரீஸிலிருந்து காப்பி அடிக்கப்பட்டது என்று சமூக வலைதளங்களில் விவாதம் ஓடிக் கொண்டிருக்கிறது.

கேம் ஆஃப் த்ரோன்ஸ்
கேம் ஆஃப் த்ரோன்ஸ்

பொதுவாக சினிமாக்களில்தான் பல காட்சிகளைப் பார்க்கும்போது `இது... அதுல்ல' என்று தோன்றும். இந்த சீன் அந்தப் படத்திலிருந்து காப்பி அடிக்கப்பட்டது, இந்த ட்யூன் அந்தப் பாட்டிலிருந்து காப்பி அடிக்கப்பட்டது என்றுதான் புகார்கள் எழுந்து கேள்விப்பட்டிருப்போம். ஆனால் தற்போது எழுந்திருக்கும் புகார் ஒரு சீரியலின் மீதானது. சோனி சேனலில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் இந்தி சீரியல் அலாவுதீன்.

அலாவுதீன் இந்தி சீரியல்
அலாவுதீன் இந்தி சீரியல்

இந்த சீரியலில் வரும் ஒரு காட்சி, உலகப் புகழ்பெற்ற தொடரான 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' சீரீஸிலிருந்து காப்பி அடிக்கப்பட்டது என்று சமூக வலைதளங்களில் விவாதம் ஓடிக் கொண்டிருக்கிறது.

அலாவுதீன் தொடரில், ஒரு காட்சி இடம்பெற்றுள்ளது. அந்தத் தொடரின் கதாநாயகன் ஒரு எலும்புக் கூட்டுடோடு சண்டையிடுகிறார். அந்தச் சண்டையில் கதாநாயகன் கையை ஓங்கிக் கொண்டு கத்தியோடு அந்த எலும்புக் கூட்டை நோக்கி ஓடி வருகிறார். அப்போது அந்த எலும்புக் கூடு அவரின் கழுத்தைப் பிடித்துவிடுகிறது.

அப்போது தன் வலது கையிலிருந்த கத்தியைக் கீழே போட்டு இடது கையில் பிடித்து அந்த எலும்பு கூட்டை கத்தியால் குத்தி வீழ்த்துகிறார். இங்கே நீங்கள் கேட்கலாம், எலும்பு கூட்டை எப்படி கத்தியால் குத்தலாம் என்று. இதற்கான பதிலை அந்தச் சீரியலின் இயக்குநர்தான் சொல்லவேண்டும். இங்கே பிரச்னை எலும்புக் கூடு அல்ல, அந்தக் காட்சிதான். இதே முறையைக் கையாண்டுதான் 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' சீரியலில் ஆர்யா ஸ்டார்க், நைட்கிங்கை கொலை செய்வாள். எனவே நெட்டிசன்கள் இந்தக் காட்சிகளை ஒப்பிட்டு கலாய்த்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் எலும்பு கூட்டை கொலை செய்ததையும் கலாய்த்துத் தள்ளி வருகின்றனர்.

ஒரு சில சமூக ஊடகவாசிகள், கேம் ஆஃப் த்ரோன்ஸில் வரும் அந்தக் காட்சியே காப்பி அடிக்கப்பட்டதுதான் என்று ஒரு வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். 2012-ம் ஆண்டு 'ஆப்ரஹாம் லிங்கன் : வாம்பையர் ஹன்டர்' என்ற படத்தில் இதேபோல ஒரு காட்சி இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆப்ரஹாம் லிங்கன் : வாம்பையர் ஹன்டர்
ஆப்ரஹாம் லிங்கன் : வாம்பையர் ஹன்டர்

கேம் ஆஃப் த்ரோன்ஸ் மற்ற சீசன்களைவிட இந்த சீசன் அதிகம் பார்க்கப்பட்டிருந்தாலும், மோசமான விமர்சனங்களைச் சந்தித்த சீசன் என்ற பெயரையும் பெற்றுள்ளது. இப்போது இந்தக் காட்சி காப்பியடிக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டையும் பெற்றிருக்கிறது கேம் ஆஃப் த்ரோன்ஸ்.