ராஜமௌலி இயக்கத்தில் பிரமாண்டமாக உருவான 'RRR' படத்தில் போதிய காட்சிகள் தனக்கு அளிக்கப்படவில்லை என ஆலியா பட் அப்செட்டாக இருப்பதாக வதந்திகள் பரவிவருகின்றன. அவர் இயக்குநர் ராஜமௌலியை unfollow செய்துவிட்டார் என்றும் RRR தொடர்பான பதிவுகளைத் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் நீக்கியிருக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகின்றன. ஆலியா பட் சமீபத்தில் ஜூனியர் என்.டி.ஆர்., ராம்சரண் நடித்த RRR படத்தில் நடித்திருந்தார். அவருக்கு படத்தில் காட்சி நேரம் குறைவாக இருந்தது. பாலிவுட்டின் பிரபல நடிகையான ஆலியாவுக்கு வலுவான கதாபாத்திரம் எழுதப்படவில்லை என்பதால் அவர் அப்செட்டாக இருக்கிறார் என வதந்தி எழுந்தது. அது தொடர்பாக ஆலியாவின் நெருங்கிய நண்பர் ஒருவர் ஆங்கில நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில், ”ஆலியா ராஜமௌலி மீது மிகுந்த மரியாதையை வைத்திருக்கிறார். படக்குழுவுடனும் சக நடிகர்களுடனும் படப்பிடிப்பின்போது நெருங்கிய நட்பில் இருந்தார். ஆலியா எந்தப் படத்திலும் படப்பிடிப்புக்குப் பிறகு தலையிடுவதில்லை, இயக்குநர்களின் முடிவுகளுக்கு மதிப்பளிப்பார். ஜூனியர் என்.டி.ஆர் உடன் அவர் நடித்த காட்சிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துவருகிறது. ராஜமௌலி, ஆலியா உடன் அலுவல் ரீதியாகத் தொடர்பிலேயே உள்ளார். அதனால் இந்த வதந்தியில் உண்மை எதுவும் இல்லை” என மறுத்துள்ளார்.

மேலும், "ஆலியா ராஜமௌலியின் சமூக வலைதளப் பக்கத்தைப் பின்தொடரவே இல்லை, பின்தொடர்ந்தால்தானே அன்ஃபாலோ செய்ய முடியும். படம் தொடர்பான சில பதிவுகளை நீக்கினார் எனச் சொல்கிறார்கள். அவர் அவற்றை நீக்கவில்லை, பழைய பதிவுகளை ஆர்கைவ் செய்து வைத்திருக்கிறார், அவ்வளவே" என்கிறார். ஆலியா பட் சார்பில் அதிகாரபூர்வமாக பதில் எதுவும் இன்னும் வெளியிடப்படவில்லை.
படத்துக்கான புரோமோஷன் டூரின் இரண்டாவது லீக்கிலும் ஆலியா பெரிதாகக் கலந்துகொள்ளவில்லை. ரன்பீர் கபூருடன் நடித்துவரும் 'பிரம்மாஸ்தரா' படத்தின் படப்பிடிப்பு நடந்ததால் அவரால் கலந்துகொள்ள முடியவில்லை எனவும் சொல்லப்படுகிறது.