சினிமா
Published:Updated:

என்னதான் ஆச்சு இந்த பாலிவுட்டுக்கு?

என்னதான் ஆச்சு இந்த பாலிவுட்டுக்கு?
பிரீமியம் ஸ்டோரி
News
என்னதான் ஆச்சு இந்த பாலிவுட்டுக்கு?

ஆகஸ்ட் 19 முதல் விசாரணையைத் தொடங்கியிருக்கிறது சிபிஐ.

ன்னமோ தெரியலை, என்ன மாயமோ புரியலை, கொஞ்சநாளாவே பாலிவுட்டுக்குப் பிரச்னைகளுக்கு மேல் பிரச்னை. ஒவ்வொரு பிரச்னையா பார்ப்போமா?

என்னதான் ஆச்சு இந்த பாலிவுட்டுக்கு?


#MeToo சர்ச்சை

2018-ம் ஆண்டு அக்டோபரில் இந்தியாவிலும் #MeToo அலையைத் தொடங்கி வைத்தார் தனுஸ்ரீ தத்தா. தமிழில் விஷாலுடன் ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’யில் நடித்த இவர் பாலிவுட்டில் 10-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர். இவர் இந்த #MeToo குற்றச்சாட்டை வைத்தது சீனியர் நடிகரான நானா படேகர் மீது. 2009-ம் ஆண்டு வெளியான ‘ஹார்ன் ஓகே ப்ளீஸ்’ பட ஷூட்டிங்கின்போது நானா படேகர் தன்னை ஆபாசமாக நடனமாட வற்புறுத்தியதாகக் குற்றம்சாட்டிய தனுஸ்ரீ, இதில் மகாராஷ்ட்ராவின் நவ்நிர்மாண் சேனா அமைப்பும் நானாவுக்கு உதவியதாகத் தெரிவித்தார். 15 பேருக்கும் அதிகமான சாட்சியங்களை விசாரித்ததில் நானா படேகர் குற்றமற்றவர் என்று விடுவிக்கப்பட்டார். தனுஸ்ரீ தரப்பில், அவர் இந்தச் சம்பவம் நடந்தபோதே சினி மற்றும் டிவி ஆர்டிஸ்ட்ஸ் அசோஸியேஷனில் புகார் அளித்ததாகவும் போலீஸ் இதை மிகவும் தாமதமாக விசாரிப்பதாகவும் குற்றம் சாட்டினார். மேலும், தான் பாலியல் ரீதியாகத் துன்பப்படுத்தப்படும்போது அதை எதிர்க்காமல் நின்று வேடிக்கை பார்த்தவர்களையெல்லாம் சாட்சி என்று விசாரித்தால் எப்படி உண்மை வெளியே வரும் என வருந்தினார். இது உண்மையோ பொய்யோ, தனுஸ்ரீயைத் தொடர்ந்து பல பெண்கள் இயக்குநர்களால், நடன இயக்குநர்களால், தயாரிப்பாளர்களால் தாங்கள் சந்தித்த பாலியல் அத்துமீறல்கள் குறித்து வெளிப்படையாகப் பகிரத் தொடங்கினர். ஆனால், இதில் பல குற்றச்சாட்டுகள், வெறும் குற்றச்சாட்டுகளாக மட்டுமே அடங்கிப்போனது சோகம்.

சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை

இந்த ஆண்டு ஏற்கெனவே நடிகர்கள் ரிஷி கபூர் மற்றும் இர்ஃபான் கான் மரணத்தால் துவண்டிருந்த பாலிவுட்டுக்கு சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலை பேரிடியாக இறங்கியது. குஜராத் கலவரங்களை மையப்படுத்திய சேத்தன் பகத்தின் நாவலை அடிப்படையாக வைத்து உருவான ‘கை போ சே’ படத்தில் அறிமுகமான சுஷாந்த், தோனியின் பயோபிக்கில் தோனியாகவே வந்து நின்று ஹார்ட்டின்களை அள்ளினார். தன் ‘சிச்சோரே’ படத்தில் தற்கொலைக்கு எதிராகப் பேசியவர் அந்த முடிவையே இறுதியில் எடுத்தது பார்ப்பவர் மனதை ரணமாக்கியது. அவரின் முன்னாள் உதவியாளர் தற்கொலை, மன அழுத்தம் என இந்தத் தற்கொலைக்குப் பின் பல சர்ச்சைகளும் மர்மங்களும் இருப்பதாகச் செய்திகள் வெளியாகின.

என்னதான் ஆச்சு இந்த பாலிவுட்டுக்கு?

சுஷாந்த்தின் காதலி ரியா சக்ரபோர்தி உட்பட 5 பேர் மீது தற்கொலைக்குத் தூண்டியதாக தங்கள் சொந்த ஊரான பாட்னாவில் புகாரைப் பதிவு செய்தது சுஷாந்த் குடும்பம். சுஷாந்த் மும்பையில் தற்கொலை செய்துகொண்டதால் மகாராஷ்ட்ரா அரசும் பல கேள்விகளை எதிர்கொண்டது. இதற்கு சிபிஐ விசாரணை தேவையில்லை என மகாராஷ்ட்ராவின் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் கருத்து தெரிவித்தார். இருந்தும் பீகார் அரசின் முயற்சியால் தற்போது வழக்கு சிபிஐ-யிடம் சென்றிருக்கிறது. ஆகஸ்ட் 19 முதல் விசாரணையைத் தொடங்கியிருக்கிறது சிபிஐ.

என்னதான் ஆச்சு இந்த பாலிவுட்டுக்கு?

நெப்போட்டிச சர்ச்சை

பாலிவுட்டின் பரம்பரைச் சொத்தான ‘நெப்போட்டிசம்’ சுஷாந்த்தின் தற்கொலையால் மீண்டும் பேசுபொருளாகியிருக்கிறது, இந்த விவாதத்தை முதலில் தொடங்கி வைத்தவர் பாலிவுட்டின் டாப் கதாநாயகிகளில் ஒருவரான கங்கனா ரனாவத். ஏற்கெனவே அவருக்கும் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநரான கரண் ஜோஹருக்கும் பனிப்போர் நடந்துவந்த வேளையில், சுஷாந்தின் மரணத்துக்குக் காரணம் கரண்தான் என வெளிப்படையாகவே குற்றம் சாட்டினார். தொடர்ந்து பாலிவுட் குடும்பங்களின் வாரிசுகளையே நடிகர், நடிகைகளாக அறிமுகப்படுத்தும் கரண் ஜோஹர் போன்றவர்கள்தான் சுஷாந்த் போன்ற திறமையான நடிகர்களை வளரவிடாமல் மன அழுத்தத்துக்குத் தள்ளினர் என்கிற ரீதியில் கங்கனா வீடியோவில் பேச, பாலிவுட் எங்கும் அது பற்றிக்கொண்டது. கரண் மட்டுமன்றி சீனியர் இயக்குநர் மகேஷ் பட், சோனாக்ஷி சின்ஹா, டாப்ஸி, சயிஃப் அலிகான் மற்றும் கரீனா கபூர் உள்ளிட்டோர்மீதும் புகார் வாசித்து பாலிவுட்டில் மாஃபியா தலையீடுகள் இருப்பதாகவும் தொடர்ந்து பேசிவருகிறார் கங்கனா. இதைப் பெரும்பாலான பாலிவுட் ரசிகர்களே ஏற்றுக்கொண்டு தொடர்ந்து தங்களின் கோபத்தை ட்வீட் செய்துவருகின்றனர்.

என்னதான் ஆச்சு இந்த பாலிவுட்டுக்கு?

சர்ச்சையில் குன்ஜன் சக்ஸேனா

ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூரின் ‘குன்ஜன் சக்ஸேனா’ படம் நெட்ஃபிளிக்ஸில் நேரடியாக வெளியாகியிருக்கிறது. ஏற்கெனவே ‘நெப்போட்டிச’ விவாதம் அனல் கிளப்பிக்கொண்டுவரும் நேரத்தில் இந்தப் படத்தையும் தயாரித்திருப்பது கரண் ஜோஹர்; கதாநாயகி பாலிவுட்டை ஆளும் கபூர் குடும்பத்தின் ஒரு வாரிசு. போதாக்குறைக்கு நிஜக் கதையை எடுக்கிறேன் என வாக்களித்துவிட்டு, உண்மைக்குப் புறம்பாகக் காட்சிகளை வைத்து தங்களைத் தவறாகச் சித்திரித்துவிட்டதாகக் கொதித்தெழுந்துள்ளது இந்திய விமானப்படை. கார்கில் வீராங்கனை குன்ஜன் சக்ஸேனாவின் பயோபிக்கான இதில் அவர் குறித்த மிகைபிம்பத்துக்காகவும் படத்தை சுவாரஸ்ய மாக்கவும் விமானப்படையில் இல்லாத ஆணாதிக்கத்தையும் பாலின பாகுபாட்டையும் காட்சிப்படுத்தியிருப்பதாகச் சர்ச்சை எழுந்துள்ளது.

என்னதான் ஆச்சு இந்த பாலிவுட்டுக்கு?

டிஸ்லைக்ஸ் வாங்கிய ‘சடக் 2’ அலியா பட்

மகேஷ் பட்டின் கிளாசிக் படமான ‘சடக்’ படத்தின் சீக்குவலான ‘சடக் 2’-ல் அவரது இரு மகள்கள் அலியா பட், பூஜா பட், தயாரிப்பாளர் சித்தார்த் ராய் கபூரின் சகோதரரான ஆதித்ய ராய் கபூர் மற்றும் சஞ்சய் தத் ஆகியோர் நடித்துள்ளனர். சுஷாந்த்தின் தற்கொலை கிளப்பியிருக்கும் ‘நெப்போடிச’ விவாதம் இந்தப் படத்தின் விளம்பரத்தையும் பெரிதாக பாதித்துள்ளது. சமீபத்தில் யூடியூபில் வெளியான இந்தப் படத்தின் டிரெய்லர் நெப்போடிசத்தை ஊக்குவிப்பதாக விமர்சிக்கப்பட்டு டிஸ்லைக்குகளை அள்ளிக்கொண்டிருக்கிறது. ஆகஸ்ட் 19 நிலவரப்படி, உலகின் அதிகமான டிஸ்லைக்குகள் பெற்ற வீடியோக்கள் பட்டியலில் 11 மில்லியனுக்கும் அதிகமான டிஸ்லைக்குகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. அலியா பட் திறமையான நடிகை என்றாலும் தொடர்ந்து வாரிசுகளை மட்டுமே களமிறக்கும் பாலிவுட்டுக்கு இது கிலியைக் கிளப்பியுள்ளது.

உடல்நலக் கோளாறுகள்

கடந்த ஜூலை 11-ம் தேதி பிக் பி அமிதாப் பச்சனுக்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டது. அவரைத் தொடர்ந்து அபிஷேக் பச்சனுக்கும் ஐஸ்வர்யா ராய்க்கும் கொரோனா உறுதியாகி அனைவரும் மும்பை நானாவதி மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டனர். அபிஷேக் - ஐஸ்வர்யா ராயின் 8 வயது மகள் ஆராத்யாவுக்கும் கொரோனா எனச் செய்தி வெளியானது. அமிதாப்பின் மனைவி ஜெயா பச்சனுக்கு மட்டும் கொரோனா நெகட்டிவ் எனப்பட்டது. தற்போது அனைவரும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். அமிதாப்புக்கும் தற்போது நெகட்டிவ் என ரிசல்ட் வந்துவிட்டதால் மே மாதம் அவர் விட்டுச் சென்ற ‘கோன் பனேகா க்ரோர்பதி’ நிகழ்ச்சியின் ஷூட்டிங்கில் மீண்டும் பாதுகாப்புடன் பங்கேற்கத் தொடங்கியுள்ளார்.

என்னதான் ஆச்சு இந்த பாலிவுட்டுக்கு?

நடிகர் சஞ்சய் தத்துக்கு நுரையீரல் புற்றுநோய் என, சில வாரங்களுக்கும் முன்பு ட்விட்டரில் செய்தி வாசிக்கப்பட்டது. மும்பையில் ஆரம்பக்கட்ட சிகிச்சை எடுத்துக்கொண்டு கொரோனா நிலையைப் பொறுத்து அடுத்தகட்ட சிகிச்சைக்காக அமெரிக்கா செல்வார் எனத் தெரிவிக்கப்பட்டது. அதேபோல், சஞ்சய் தத்தும் தன் உடல்நலனைக் கருத்தில்கொண்டு சமூக வலைதளத்திலிருந்து கொஞ்ச காலம் பிரேக் எடுப்பதாக அறிவித்தார். ஆனால், அவரின் உடல்நிலை குறித்தோ அவருக்கு இருக்கும் பிரச்னை குறித்தோ வெளிப்படையாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை. சென்ற வாரம் சஞ்சய் தத்தின் மனைவி மானயதா வெளியிட்ட அறிக்கையில், இது மிகவும் சவாலான கட்டம் எனவும், குடும்பமே வருத்தத்திலிருந்தாலும் போராடத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் சஞ்சுவுக்காக பிரார்த்திக்கும் ரசிகர்களுக்கும் அன்பர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வேளையில் அவரின் உடல்நிலை குறித்துத் தவறான செய்திகளைப் பரப்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

என்னதான் ஆச்சு இந்த பாலிவுட்டுக்கு?

இந்திய சினிமா வணிகத்தில் 40 சதவிகிதம், பாலிவுட்டுடையது. தொடர்ந்து பாலிவுட்டில் நடக்கும் பிரச்னைகள் பாலிவுட்டுக்கு மட்டுமல்ல, இந்திய சினிமாவுக்கும் நல்லதல்ல.