Published:Updated:

`இரட்டை இலைச் சின்ன லஞ்ச வழக்கு’ சுகேஷ் பாலிவுட் நடிகையிடமும் கைவரிசை!

சுகேஷ்
சுகேஷ்

சுகேஷ் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸிடம் மோசடி செய்திருக்கிறார் எனப் புகார் எழுந்துள்ளது. இது குறித்து போலீஸார் நடிகையிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பிரபலங்களை மிரட்டிப் பணம் பறித்தல், முடியாத காரியத்தை முடித்துக்கொடுப்பதாகக் கூறி மோசடி எனப் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு, தற்போது டெல்லி சிறையில் இருக்கும் சுகேஷ் சந்திரசேகர் பாலிவுட் பிரபலங்களையும் விட்டுவைக்கவில்லை. சுகேஷ், அவனுடைய கூட்டாளிகள் மீது ஏற்கெனவே ரூ.200 கோடி மிரட்டிப் பணம் பறித்த வழக்கு நிலுவையில் இருக்கிறது. இதுகு றித்து அமலாக்கத்துறை அதிகாரிகளும் தனியாக விசாரித்துவருகின்றனர். சுகேஷும் அவனுடைய ஆட்களும் சேர்ந்து தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றனர்.

ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ்
ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ்
`இரட்டை இலைச் சின்னம்' லஞ்ச வழக்கு; சுகேஷ் சந்திரசேகர் வீட்டில் சோதனை - 20 சொகுசு கார்கள் பறிமுதல்!

தமிழகத்தில் டி.டி.வி.தினகரன், எடப்பாடி பழனிசாமி இருதரப்பினரும் இரட்டை இலைச் சின்னத்துக்கு உரிமை கோரி தேர்தல் கமிஷனில் மனு கொடுத்திருந்தபோது இந்தச் சம்பவம் நடந்தது. இரட்டை இலைச் சின்னத்தை பெற்றுக்கொடுப்பதாகக் கூறி டி.டி.வி.தினகரனிடம் ரூ.50 கோடியை சுகேஷ் வாங்கிய வழக்கு டெல்லி நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் நடத்திவரும் விசாரணையில் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸிடம் சுகேஷ் பணத்தை மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இதற்காக, தனது மனைவியை சுகேஷ் பயன்படுத்தியிருப்பதாக அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து ஜாக்குலின் பெர்னாண்டஸிடம் விசாரணை நடத்தப்பட்டிருக்கிறது. இது குறித்து அமலாக்கப்பிரிவின் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் குற்றவாளி கிடையாது. அவர் பாதிக்கப்பட்டவர். சுகேஷுக்கு எதிராகச் சாட்சியாகத்தான் விசாரிக்கப்பட்டார். சுகேஷ், தன் மனைவி லீனாபால் உதவியுடன் நடிகையிடம் பண மோசடி செய்திருக்கிறார். நடிகையிடம் ஐந்து மணி நேரம் நடத்தப்பட்ட விசாரணையில் பல முக்கியத் தகவல்கள் கிடைத்திருக்கின்றன. வேறு ஒரு பிரபல நடிகரிடமும் சுகேஷ் தனது கைவரிசையைக் காட்டியிருக்கிறார். அவர் யார் என்று அடையாளம் கண்டிருக்கிறோம். ஆனால், பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் யார் என்பதைத் தெரிவிக்க முடியாது" என்றனர். கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி சென்னையில் சுகேஷுக்குச் சொந்தமான 82 லட்சம் மதிப்புள்ள பங்களாவையும், 15-க்கும் மேற்பட்ட ஆடம்பர கார்களையும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு