1970 மற்றும் 80 களில் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் ஜெயசுதா. தமிழில் ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார். நடிகையாக இருந்து பின் அரசியல் வாதியாக மாறிய ஜெயசுதா தற்போது தென்னிந்திய நடிகர்களுக்கு இந்திய அரசாங்கம் உரிய அங்கிகாரத்தை வழங்குவதில்லை என்று விமர்சித்துள்ளார்.
தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட ஜெயசுதா இது தொடர்பாக பேசுகையில், "வெறும் பத்து படங்கள் நடித்து முடித்தவுடனே கங்கனா ரணாவத் போன்ற பாலிவுட் நடிகைகளுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவிக்கப்படுகிறது.

ஆனால் திரையுலகில் பல தசாப்தங்களாக பணியாற்றிய நடிகர், நடிகைகளுக்கு அதிலும் குறிப்பாக தென்னிந்திய திரைப்படத் துறையில் பணியாற்றும் கலைஞர்களுக்கு அவர்களின் பணிக்கான எந்த ஒரு உரிய அங்கீகாரமும் இந்திய அரசாங்கத்தால் வழங்கப்படுவதில்லை எனத் தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து மேலும் பேசிய அவர், “கங்கனா ரணாவத்துக்கு பத்மஸ்ரீ வழங்கியது தவறில்லை. அவர் ஒரு அற்புதமான நடிகைதான். இருப்பினும் அவர் வெறும் பத்து படங்கள் நடித்து முடித்தவுடனே அவர் அந்த விருதைப்பெற்றுள்ளார். ஆனால் நாங்கள் பல படங்களில் பணியாற்றியிருந்தும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்படவில்லை.
கின்னஸ் சாதனையில் இடம்பிடித்திருக்கும் பெண் இயக்குநர் விஜய நிர்மலாவுக்கு கூட இதுபோன்ற பாராட்டு கிடைக்கவில்லை. சில சமயங்களில், தென்னிந்திய திரையுலகத்தினரை இந்திய அரசாங்கம் பாராட்டுவதில்லை என்று நான் வருத்தப்படுகிறேன் என நடிகையும், அரசியல்வாதியுமான ஜெயசுதா தெரிவித்திருக்கிறார்.