பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரஹாம் நடிக்கும் படங்களில் ஆக்ஷன் காட்சிகளுக்காவே அவருக்கு தனி ரசிகர் படை இருக்கிறது. எப்போதும் உடலை ஃபிட் ஆக வைத்திருக்கும் ஜானின் நடிப்பில் உருவான ‘Attack: Part One’ திரைப்படம் ஏப்ரல் 1 வெளியாகி இருக்கிறது. இந்தப் படம் ஒரு வருடத்திற்கும் மேலாக ரீலீஸ் காகக் காத்திருந்து ஒருவழியாக இன்றைக்கு திரையில் வெளியானது. ஜான் ஆபிரஹாம் தெலுங்கு படமொன்றில் நடிப்பதாகப் பரவிய தகவலுக்குப் பதிலளிக்கும் விதமாக சமீபத்திய நேர்காணல் ஒன்றில், “நான் ஒருபோதும் வட்டார மொழி படங்களில் நடிப்பதாக இல்லை. நான் ஹிந்தி பட ஹீரோ. இரண்டாவது கதாநாயகனாக பெயருக்கு நடிக்க போவது கிடையாது. மற்ற நடிகர்களைப் போல பிசினஸுக்காக நான் தெலுங்கு படத்திற்கோ மற்ற மொழி படங்களுக்கோ நடிக்கச் செல்வதாக இல்லை.” என மறுப்பு தெரிவித்திருக்கிறார்.

தென்னிந்திய சினிமா உலகில் இருந்து பேன் இந்திய அளவிலான படங்கள் வெளியான வண்ணம் உள்ளன. இதனால் பாலிவுட் நடிகர்கள் இங்கும், தென்னிந்திய நடிகர்கள் பாலிவுட்டிலும் நடித்து வருகிறார்கள். அதனாலே இதுபோலான செய்திகள் பரவி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
சல்மான் கான் சமீபத்தில், "தென் இந்தியப் படங்கள் இங்கு ஹிட்டாகின்றன, இந்திப் படங்கள் அங்கு ஓடுவதில்லை" எனத் தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார். ஜான் ஆபிரஹாம் தற்போது ஷாரூக் கான், தீபிகா படுகோன் நடிக்கும் Pathaan படத்தில் நடித்து வருகிறார்.