Published:Updated:

கமல்ஹாசனை இந்தியாவின் ஸ்டாராக்கிய ஸ்பெஷல் சினிமா... இதன் சீக்வெலும் செம ஹிட் தெரியுமா?! #40YearsofEkDuujeKeLiye

கமல்ஹாசன், ரதி, 'ஏக் துஜே கே லியே'
கமல்ஹாசன், ரதி, 'ஏக் துஜே கே லியே'

40-ம் ஆண்டுக்குள் நுழைந்திருக்கும் இந்தப்படம் இந்தியாவின் மிக முக்கியமான படங்களின் பட்டியலில் எப்போதும் இடம்பிடிக்கும். `ஏக் தூஜே கே லியே'வும் அதன் ஒரிஜினல் படமான `மரோ சரித்ரா'வும் கிளாசிக்ஸ்!

கமல்ஹாசனை இந்தியா முழுவதுக்கும் அடையாளம் காட்டிய படம் `ஏக் தூஜே கே லியே.' கமல்ஹாசன் நேரடியாக இந்தியில் நடித்து மிகப்பெரிய ஹிட் அடித்த இந்தத் திரைப்படம் 1981-ம் ஆண்டு இதே ஜூன் 5-ம் தேதி ரிலீஸானாது. 40-ம் ஆண்டுக்குள் அடியெடுத்து வைக்கும் இந்தப் படத்தைப் பற்றி தெரிந்துகொள்வது இக்கால சினிமா ரசிகர்களுக்கு மிகவும் அவசியமானது.

`ஏக் தூஜே கே லியே' படத்தில் நடித்தபோது கமல்ஹாசனுக்கு வயது 27. இது அவருடைய 101-வது படம். முந்தைய படமான `ராஜபார்வை'யில் தயாரிப்பாளர் அவதாரமும் எடுத்த பின், 100 படங்களில் நடித்த மிகப்பெரிய திரை அனுபவத்தோடு `ஏக் தூஜே கே லியே' மூலம் இந்தியில் ஹீரோவாக அறிமுகமானார் கமல். இயக்குநர் கே.பாலசந்தருக்கு இது இந்தியில் இரண்டாவது படம். `அரங்கேற்றம்' படத்தின் இந்தி வடிவமான `ஆய்னா'தான் அவரது முதல் படம். இதிலேயே ஒரு குட்டி உதவி இயக்குநராக கமல் ஒரே ஒரு காட்சியில் நடித்திருப்பார். கதாநாயகி ரதி அக்னிஹோத்ரிக்கும் மாதவிக்கும் `ஏக் தூஜே கே லியே'தான் முதல் இந்திப் படம். பின்னணிப் பாடல்களைப் பாடி இந்தப் படத்தின் மூலமாக ஒரு தேசிய விருதை வாங்கிய எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்குமே இதுதான் முதல் இந்திப் படம். படத்தின் தயாரிப்பு, மிகப்பெரிய இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் இருந்த எல்.வி.பிரசாத்.

"ஒரே ஒரு சின்ன வார்த்தை... என்னையும் இளையராஜாவையும் பிரிச்சிடுச்சு!" - கே.பாக்யராஜ்

கே.பாலசந்தர் இயக்கத்தில் கமல்ஹாசன் மற்றும் சரிதா நடித்து, 1978-ல் தெலுங்கில் வெளியானப்படம் `மரோ சரித்ரா.' சூப்பர்ஹிட் படமாக மாறி, தெலுங்கில் மட்டுமல்லாமல், தமிழ்நாட்டிலும் வெற்றிகரமாக ஓடியது. சென்னையில் கிட்டத்தட்ட ஒன்றே முக்கால் வருடங்கள் ஓடிய படம் இது.

இதை இந்தியில் பாலசந்தர் எடுக்கும்போது தெலுங்கில் நடித்திருந்த அத்தனை முக்கியமான நடிகர்களையும் அப்படியே இந்தியில் அறிமுகப்படுத்தினார். கதாநாயகியாக மட்டும் சரிதா இல்லாமல், அப்போது பிரபலமாக இருந்த ரதி அக்னிஹோத்ரியை நடிக்க வைத்தார். இந்தியிலும் `ஏக் தூஜே கே லியே' செம ஹிட். கமல்ஹாசன் இந்த ஒரே படத்தின்மூலம் இந்தியின் சூப்பர் ஸ்டாராகவும் மாறினார். 1982-ல் வெளிவந்த ஃபிலிம்ஃபேர் புத்தகம், "இந்தி சூப்பர்ஸ்டார்களான மிதுன் சக்ரவர்த்தி, ரிஷி கபூர் ஆகியோருக்குப் போட்டியாகக் கமல்ஹாசன் என்ற மிகத் திறமையான கலைஞன் இந்திக்கு வந்துவிட்டார்'' என்று விரிவான ஒரு கட்டுரையை எழுதியிருந்தது. `ஏக் தூஜே கே லியே' மூலம் கமல்ஹாசனுக்குக் கிடைத்த இந்தி அறிமுகம் அப்படி.

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

`ஏக் தூஜே கே லியே' படம் கோவாவை கதைக்களமாகக் கொண்டது. கோவாவில் சிவராமகிருஷ்ணனும் (பூர்ணம் விஸ்வநாதன்) அரவிந்த் தேஷ்பாண்டேவும் பக்கத்து வீட்டுக்காரர்கள். பூர்ணம் விஸ்வநாதனின் மகன் வாசு என்ற வாசுதேவனாகக் கமல்ஹாசன் சென்னையில் மேலதிகாரியுடன் சண்டை போட்டு, வேலையை விட்டுவிட்டு கோவாவுக்கு வந்துவிடுவான். பக்கத்து வீட்டில் இருக்கும் சப்னா, ஒரு நாள் அவளைத் துரத்தும் ஆசாமியிடம் இருந்து தப்பிப்பதற்காக அங்கே ஜாக்கிங் சென்றுகொண்டிருக்கும் வாசுவிடம் பேச ஆரம்பிப்பார். மெதுவாக இருவருக்கும் காதல் அரும்பும். ஒருவர் இல்லாமல் இன்னொருவர் இல்லை என்ற அளவு தீவிரமான காதல்.

சப்னாவை எப்போதுமே துரத்தும் லைப்ரேரியன், சப்னாவும் வாசுவும் சேர்ந்து இருக்கும் போட்டோக்களை எடுத்து சப்னாவின் வீட்டில் கொடுத்து விடுவார். இதன்பின் இருவரையும் பிரித்து வைக்க முயற்சிகள் நடக்கும். இருவரும் அதையும் மீறி சந்திப்பார்கள். ஒரு கட்டத்தில் பிரச்னைகள் மிகப்பெரிதாக வெடிக்க ஒரு முடிவெடுக்கப்படும். ஒரு வருடம் இருவரும் ஒருவரையொருவர் பார்க்காமல், எந்தத் தொடர்பும் இல்லாமல் பிரிந்திருந்து, அதற்குப் பின்னும் இருவருக்கும் ஒருவரையொருவர் பிடித்திருந்தால் திருமணம் செய்து வைக்கலாம் என்பதுதான் அந்த முடிவு. வாசு வேலைக்காக ஹைதராபாத் சென்றுவிடுவான். அங்கே சந்தியா என்ற இளம் விதவையுடன் பழகுவான். அவளிடம் இருந்து நடனமும் இந்தியும் கற்றுக்கொள்வான். தினமும் சப்னாவுக்காக கடிதம் எழுதி, ஒரு வருடம் பேசிக்கொள்ளக் கூடாது என்பதற்காக அனுப்பாமல் தன்னிடமே வைத்துக்கொள்வான் வாசு.

ஏக் தூஜே கே லியே
ஏக் தூஜே கே லியே

இந்த நேரத்தில் வேலை நிமித்தமாக வாசு மங்களூர் போக, அங்கே தோழிகளுடன் சப்னாவும் வந்திருப்பார். மங்களூர் பயணத்துக்குத் துணையாக சப்னாவுடன் அவரது பெற்றோர் ஓர் உறவுக்காரப் பையனையும் அனுப்பியிருப்பார்கள். சப்னாவுடன் இருக்கும் உறவுக்காரப் பையனைப் பார்க்கும் கமல், சப்னா இல்லாத நேரத்தில் அவனிடம் நீ யார் எனக் கேட்பார். அப்போது அவன் சப்னாவைத் திருமணம் செய்துகொள்ளப்போகிறவன் என பொய்சொல்லிவிட, அதை சப்னாவின் தோழிகளிடமும் உறுதிப்படுத்திக்கொண்டு ஹைதராபாத் கிளம்பிவிடுவான் வாசு. ஊருக்கு வந்ததும் நேராக சந்தியாவிடம் போய், அவளை மணந்துகொள்ள விரும்புவதாக விரக்தியில் சொல்லிவிடுவான். இருவருக்கும் திருமண ஏற்பாடுகள் நடக்கும். இடையில் வாசுவின் வீட்டில் அவன் சப்னாவுக்காக எழுதி வைத்திருக்கும் கடிதங்களைப் படிக்கும் சந்தியா, உண்மையை உணர்ந்துகொள்வாள். நேராக கோவா சென்று சப்னாவைச் சந்தித்துப் பேசுவாள். பின்னர் வாசுவிடம் வந்து சப்னாவைப் பற்றிச் சொல்லி, அவனை கோவா போகச்சொல்லி, தங்களின் திருமணத்தை நிறுத்திவிடுவாள். இதனால் கோபமடையும் சந்தியாவின் அண்ணன், கோவாவில் இருக்கும் ஒரு ரவுடியிடம், வாசுவைக் கொல்லச் சொல்லிக் கத்துவான். இறுதியில் என்ன நடந்தது என்பதே `ஏக் தூஜே கே லியே'.

படத்தில் கமல்ஹாசனின் அப்பாவாக நடித்திருக்கும் பூர்ணம் விஸ்வநாதன், ரதியின் அம்மாவான சுபா கோட்டே, சந்தியாவாக வரும் மாதவி, அவரின் அண்ணனாக வரும் ராஸா முராத் ஆகிய அனைவரும் பிரமாதமாக நடித்திருப்பார்கள். பிரபல நகைச்சுவை நடிகர் அஸ்ரானி ஒரு சிறிய வேடத்தில் வருவார். கமல்ஹாசனைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை. நடிப்பில் அசத்தியிருப்பார். வாசு என்ற இளைஞன் நம் கண் முன் வந்து, கமல்ஹாசன் என்ற நடிகனை நாம் மறந்துவிடுவோம்.

பாலசந்தர், கமல்ஹாசன்
பாலசந்தர், கமல்ஹாசன்

படத்தில் கமல்ஹாசனும் ரதியும் பரிமாறிக்கொள்ளும் சங்கேத சிக்னல்கள் மிகவும் பிரபலம். துணி துவைப்பதில் ஒரே மாதிரி சத்தம் வருமாறு துவைப்பது, வீடுகளின் மின்விளக்குகளைப் போட்டுப்போட்டு அணைப்பது, புத்தகங்களை மாற்றிமாற்றித் தட்டுவது ஆகியவை அக்காலத்தில் பெரிதும் ரசிக்கப்பட்டன. படத்தின் முதல்பாதி முழுதும் அவ்வளவு ஜாலியாக, இனிமையாகச் செல்லும். படம் முழுக்கவே கோவாவின் அற்புதமான லொகேஷன்களில் பாலசந்தர் பிரமாதப்படுத்தியிருப்பார். ஒளிப்பதிவு, பாலசந்தரின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் பி.எஸ்.லோக்நாத். எத்தனையோ படங்களில் அவருடன் பணிபுரிந்தவர் `அபூர்வ ராகங்கள்' படத்துக்காக தேசிய விருது பெற்றவர். படத்தில் கமல்ஹாசன் செய்யும் மோட்டார் பைக் ஸ்டன்ட்கள் எல்லாம் செம த்ரில்லாக இருக்கும். படத்தில் பூர்ணம் விஸ்வநாதன் தமிழர் என்பதால், கிட்டத்தட்டப் பாதி படம் வரை கமல்ஹாசன் தமிழில்தான் பேசிக்கொண்டிருப்பார். எனவே, படத்தைப் புரிந்துகொள்வதில் மொழிரீதியாகப் பெரிய சிரமம் இருக்காது.

படத்தின் அத்தனை பாடல்களும் சூப்பர்ஹிட்களாக மாறின. இசையமைத்தவர்கள் லக்‌ஷ்மிகாந்த் - பியாரிலால். படத்தில் கமல்ஹாசனுக்கு எஸ்.பி பாலசுப்ரமணியம்தான் பாடுவார் என்பது பாலசந்தரால் முதலிலேயே இசையமைப்பாளர்களுக்குச் சொல்லப்பட்டுவிட்டது. ஆனால், அதுவரை ஒரு இந்திப் பாடல் கூடப் பாடாத எஸ்.பி.பியை எப்படிப் பாடவைப்பது என்று அவர்கள் தயங்க, படத்தின் நாயகனே பாதி படம் வரை தமிழ்தான் பேசுவான் என்பதால் எஸ்.பி.பியை அவசியம் பாடவைக்க வேண்டும் என்று பாலசந்தர் உறுதியாக இருந்தார். இதனால் தனது முதல் இந்திப் படத்தில் பாடல்கள் பாடினார் எஸ்.பி.பி. அதன் விளைவு முதல் இந்திப் படத்திலேயே அவருக்கு தேசிய விருது கிடைத்தது. `ஏக் தூஜே கே லியே' படத்தின் பாடல்கள் இன்றும் இனிமையானவையே. இப்போதும் பரவலாக இந்தியில் கேட்கப்படுபவையே.

பாலசந்தர், கமல்ஹாசன்
பாலசந்தர், கமல்ஹாசன்

இந்தப் படத்தின் க்ளைமாக்ஸ் மறக்கமுடியாதது. படம் முழுக்கவே அவ்வளவு காதலாக, இனிமையாக இருக்க, க்ளைமாக்ஸ், ஆறாத சோகத்தைப் பிரதிபலிப்பதாகவே இருக்கும். படத்தைப் பார்த்த ராஜ் கபூர், க்ளைமாக்ஸை மாற்றச்சொன்னதாகவும் பாலசந்தர் மறுத்துவிட்டதாகவும் கூட இந்தப் படத்தைப் பற்றிய ஒரு செய்தி உண்டு. கமல்ஹாசன் ஒருமுறை, `ஏக் தூஜே கே லியே' படத்துக்கு ஒரு இரண்டாம் பாகம் எடுக்க வேண்டும் என்ற ஆசையை பாலசந்தரிடம் சொல்ல பெரிய யோசனைக்குப் பிறகு சம்மதித்தார் பாலசந்தர். `ஏக் தூஜே கே லியே'வின் இரண்டாம் பாகத்தைத் தமிழிலேயே கமல்ஹாசனை வைத்து எடுத்தார். அதுதான் `புன்னகை மன்னன்.' `ஏக் தூஜே கே லியே'வின் க்ளைமாக்ஸில் இருந்து இந்தப் படம் தொடங்கும். இருவரில் ஒருவர் பிழைத்துவிட்டால் என்ன ஆகும் என்பது படத்தில் சொல்லப்பட்டிருக்கும். `ஏக் தூஜே கே லியே'வில் வரும் அந்த நினைவுச்சின்னம் புன்னகை மன்னனிலும் இருக்கும்.

`ஏக் தூஜே கே லியே' ஒரு மறக்கமுடியாத படம். இயக்கம், ஒளிப்பதிவு, நடிப்பு, உணர்வுகள், வசனங்கள், பாடல்கள் என்று எல்லாவற்றிலும் சிகரம் தொட்ட படம் இது. `ஏக் துஜே கே லியே' இன்னும் நூறாண்டுகள் ஆனாலும் பேசப்படும் படமாக இருக்கும்.

அடுத்த கட்டுரைக்கு