‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம், கேரளாவில் மட்டுமின்றி தேசிய அளவிலும் அனைவரது கவனத்தையும் பெற்று ஒரு பேசுபொருளாக மாறியுள்ளது. விபுல் ஷா தயாரிப்பில் இயக்குநர் சுதீப்தோ சென் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்தத் திரைப்படம் பல எதிர்ப்புகளையும் தாண்டி நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

இப்படத்தின் டிரெய்லரில் இந்து மற்றும் கிறிஸ்தவ பெண்களை ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு அழைத்துச் சென்று இஸ்லாம் மதத்துக்குக் கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டு, ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இணைக்கப்படுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இதனால் இந்தப் படத்தைத் தடை செய்ய வேண்டும் என்று கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகளும், கேரளாவின் இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்த தலைவர்களும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
ஆனால் இப்படத்துக்குத் தடை விதிக்க கேரள உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. நேற்று திரையரங்குகளில் வெளியான இந்தத் திரைப்படம் இந்தியா முழுவதும் ரூ.10 கோடி வரை வசூலித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. பலரும் எதிர்ப்பு தெரிவித்த இந்தத் திரைப்படத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஆதரவாகப் பேசியிருந்தார். அதாவது ‘தி கேரளா ஸ்டோரி' திரைப்படம், இந்தியத் தேசத்துக்கு எதிரான சதியை அம்பலப்படுத்தியுள்ளதாகக் கூறியிருந்தார். இந்நிலையில் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்தும் இத்திரைப்படத்திற்கு ஆதரவாகப் பேசியிருக்கிறார்.
“நான் இன்னும் படத்தைப் பார்க்கவில்லை. ஆனால் இந்த படத்தைத் தடை செய்ய நிறைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இந்தப் படத்தைத் தடை செய்ய உயர்நீதிமன்றமே மறுத்திருக்கிறது. நாட்டின் பொறுப்புள்ள அமைப்பான உயர்நீதிமன்றமே படத்திற்கு அனுமதி அளிக்கும்போது அது சரியான ஒன்றாகத்தானே இருக்கும். ஐஎஸ்ஐஎஸ் என்பது ஒரு தீவிரவாத அமைப்பு. இந்தப் படத்தில் அவர்களைத் தவிர வேறு யாரையும் தவறாகக் காட்டவில்லை என்றே நான் நினைக்கிறேன். ஒருவேளை இந்தப் படம் ஐஎஸ்ஐஎஸ்-ஐ குறித்து இல்லாமல் உங்களைப் பாதிப்பதாக நினைத்தால் நீங்கள்தான் தீவிரவாதி!” என்று கூறியிருக்கிறார்.