Published:Updated:

கங்கனா ரனாவத் vs டாப்ஸி... திசைமாறும் பாலிவுட்டின் நெப்போட்டிஸ பஞ்சாயத்து!

கங்கனா, டாப்ஸி
கங்கனா, டாப்ஸி

டாப்ஸியும் ஸ்வரா பாஸ்கரும் தொடர்ந்து கங்கனாவின் கருத்துக்கு மறுப்பு தெரிவித்தும், கங்கனாவைக் கலாய்த்தும் சோஷியல் மீடியாவில் எழுதிக்கொண்டிருக்கின்றனர்.

சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் இறப்பு பாலிவுட் நெப்போட்டிஸம் (வாரிசுகளின் ஆதிக்கம்) பிரச்னையை பெரிதாக்கியது. சுஷாந்தின் தற்கொலைக்கு நெப்போட்டிஸம் ஒரு காரணம் என ஆரம்பித்த பேச்சுகள் கங்கனா ரனாவத்தின் பேட்டிக்குப் பிறகு இன்னும் வேகமெடுத்தது. பாலிவுட்டில் நிலவும் நெப்போட்டிஸம் பற்றித் தொடர்ந்து பேசிவருகிறார் கங்கனா. இந்நிலையில் இப்போது நெப்போட்டிஸ சர்ச்சை இன்னொரு பிரச்னையாக மாறிக்கொண்டிருக்கிறது.

கங்கனா, டாப்ஸி மற்றும் ஸ்வரா பாஸ்கர் எனப் பாலிவுட்டின் மூன்று முக்கிய நடிகைகளும் தொடர்ந்து ட்விட்டரில் நெப்போட்டிஸம் தொடர்பாக ஒருவரோடு ஒருவர், தொடர் பேட்டி மற்றும் ட்வீட்களால் மோதி வருகின்றனர்.
கங்கனா
கங்கனா

கங்கனா, கடந்த வாரம் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு ஒன்றுக்கு பேட்டியளித்திருந்தார். அதில், "நெப்போட்டிஸத்தை அழியாமல் பாதுகாப்பவர்கள் எனது குற்றச்சாட்டுகளில் இருந்து எப்படியும் நழுவிவிடுவார்கள். நாளை, டாப்ஸி, ஸ்வரா பாஸ்கர் போன்ற 20 பேரை வெளியில் இருந்து அழைத்து வந்து, ‘எங்களுக்குக் கரண் ஜோஹரிடம் எந்தப் பிரச்னையும் இல்லையே? கங்கனாவுக்கும் அவருக்கும்தானே பிரச்னை’ என்று சொல்ல வைப்பார்கள். இதனால் எனக்குத்தான் பாதிப்பு அதிகம். உங்களுக்குக் கரண் ஜோஹரைப் பிடிக்கும் என்றால் நீங்கள் இன்னும் ஏன் அடுத்தகட்ட நடிகைகளாகவே இருக்கிறீர்கள்? வாரிசுகளான அலியா பட், அனன்யா பாண்டேயை விடவும் நீங்கள் நல்ல நடிகைகள். ஆனால், அப்படிப்பட்டவர்கள் நடிக்கும் படங்கள் உங்களுக்கு ஏன் கிடைப்பதில்லை?" என்று பேசியிருந்தார். மேலும் இன்னொரு பேட்டியில், "டாப்ஸி - ஸ்வரா பாஸ்கர் போன்ற, வாய்ப்புக்காக முக்கியமான நபர்களிடம் பழகும் நபர்கள்" என்றும் கங்கனா பேச இப்போது இந்த விவகாரம் பற்றி எரிய ஆரம்பித்திருக்கிறது.

டாப்ஸியும் ஸ்வரா பாஸ்கரும் தொடர்ந்து கங்கனாவின் கருத்துக்கு மறுப்பு தெரிவித்தும், கங்கனாவைக் கலாய்த்தும் சோஷியல் மீடியாவில் எழுதிக்கொண்டிருக்கின்றனர்.

இவர்களுக்குள் ஏற்படும் பிரச்னை, இது முதல்முறை அல்ல. சென்ற வருடம், கங்கனாவின் சகோதரி ரங்கோலி, டாப்ஸியைத் தாக்கி எழுதியிருந்தார். காரணம், கங்கனாவின் படமான ‘ஜட்ஜ்மென்ட்டல் ஹை க்யா?’ திரைப்படத்தின் டிரெய்லரைப் பாராட்டி டாப்ஸி போட்டிருந்த ட்வீட்டில் கங்கனாவின் பெயரையே அவர் சொல்லவில்லை. கங்கனாவைப் பற்றி எதுவும் எழுதவும் இல்லை. இதனால், அப்போது கங்கனாவின் மேனேஜராகவும் இருந்த ரங்கோலி, `கங்கனாவின் மலிவான காப்பி’ என்று டாப்ஸியை விமர்சித்திருந்தார். அதற்கு டாப்ஸியும், ''என் ட்விட்டரில் பலரும் பல கருத்துகள் சொல்வார்கள். இதற்கு என்னால் எதுவும் சொல்ல முடியாது. கங்கனா ஒரு சீனியர் நடிகை. அவர் மேல் எனக்கு இன்னும் மரியாதை உண்டு'' என்று பதில் சொல்லியிருந்தார். அப்போதில் இருந்தே இருவருக்கும் பிரச்னைதான்.

அனுராக் காஷ்யப்
அனுராக் காஷ்யப்

இதில் அனுராக் காஷ்யப் பெயரும் அடிபட்டுக் கொண்டிருக்கிறது. சில நாள்கள் முன்னர் அனுராக் காஷ்யப் ஒரு ட்வீட் போட்டு, அதில் கங்கனாவின் ஒரு பேட்டியையும் சேர்த்திருந்தார். "ஒரு காலத்தில் நாங்கள் நெருங்கிய நண்பர்கள். ஆனால், இந்தப் புதிய கங்கனாவை எனக்கு இப்போது யாரென்றே தெரியவில்லை" என்று எழுதியிருக்கிறார் அனுராக். டாப்ஸி நடித்த `மன்மர்ஸியான்’ படத்தை அனுராக் இயக்கியிருக்கிறார். கங்கனாவுடன் `குயின்’ படத்தில் தயாரிப்பாளராகப் பணிபுரிந்திருக்கிறார். இந்தப் பிரச்னையில் தனது ஆதரவை டாப்ஸிக்கே அளித்தும் இருக்கிறார். அந்த 'மன்மர்ஸியான்' படத்தின் சமயத்தில், கங்கனாவைப் பற்றிய ஒரு கேள்விக்கு 2018-ல் அவரும் டாப்ஸியும் சிரித்திருந்தார்கள். அது கங்கனாவைப் புண்படுத்தி, அதிலிருந்து இருவரும் பேசிக்கொள்வதில்லை. அதற்காக மன்னிப்புக் கேட்கவும் தயார் என்றும் அனுராக் சொல்லியிருந்தார். ஆனால், கங்கனா இன்று வரை அவருடன் பேசுவதில்லை.

கங்கனாவின் டீம்தான் இதுவரை கங்கனா பற்றிய அனைத்து விஷயங்களையும் கங்கனாவின் சார்பில் சோஷியல் மீடியாவில் ஷேர் செய்து வருகின்றனர். அந்த ஐடியில், "சுஷாந்த்தின் மரணத்துக்கு பாலிவுட்டின் பணக்கார வாரிசுகள் பொறுப்பேற்றே ஆக வேண்டும் என்று கங்கனா போராடி வருகையில், டாப்ஸி, ஸ்வரா பாஸ்கர் போன்றவர்கள் அதை எதற்காக இப்போது வேறுபக்கம் கொண்டுசெல்கின்றனர்?" என்ற கேள்வியும் எழுப்பியிருக்கிறார்கள்.

சுஷாந்த், சில வருடங்கள் முன்னர் அதாவது, 2015-ல் இந்த வாரிசு அரசியல் பற்றி இரண்டு ஃபேஸ்புக் பதிவுகள் எழுதியிருக்கிறார். அதை கங்கனாவின் டீம் கடந்த 24-ம் தேதி ஷேர் செய்திருக்கிறது. தொடர்ந்து இந்த நெப்போட்டிஸத்துக்கு எதிராகக் கங்கனா பேசி வருவது அனைவருக்குமே தெரியும். பாலிவுட்டின் பெரிய தலைகளான கரண் ஜோஹர், ஆதித்ய சோப்ரா ஆகியவர்களையும் போலீஸார் விசாரிக்க வேண்டும் என்றும் பேசியிருக்கிறார் கங்கனா. இதனால்தான், "டாப்ஸி, ஸ்வரா பாஸ்கர் ஆகியோர் மட்டுமே எதற்காகத் தனது கருத்துகளுக்கு எதிர்கருத்து வைக்கின்றனர். அவர்கள் கரண் ஜோஹர் போன்றோரை நண்பர்களாகப் பெற்றிருப்பதுதான் காரணம்" என்பது கங்கனாவின் எண்ணமாக இருக்கிறது.

டாப்ஸி
டாப்ஸி
#DilBechara எப்படி? ரஜினியாக, சூப்பர் ஸ்டாராக வாழ்ந்திருக்கலாமே சுஷாந்த்!

அதேசமயம், கங்கனாவுக்கும் டாப்ஸிக்கும் உரசல்கள் சில வருடங்களாகவே இருந்தும் வருகின்றன. கங்கனாவைப்போலவே டாப்ஸியும் வெளியில் இருந்து வந்தவர்தான். கங்கனா இருக்கும் நம்பர் 1 இடத்தை நோக்கித் டாப்ஸி வேகமாக முன்னேறி வந்துகொண்டிருக்கிறார். இதுகூட இருவருக்கும் பிரச்னைகளைக் கிளப்பியிருக்கலாம். டாப்ஸிக்கு சில வாரிசு நடிகர்கள், நடிகைகள் சோஷியல் மீடியாவில் ஆதரவும் தெரிவித்திருக்கின்றனர். எனவே, இது கங்கனாவுக்கு எதிராக பாலிவுட்டின் வாரிசுகள் நடத்தும் சண்டையாகவும் இருக்கலாம் என்கிறார்கள்.

எது எப்படி இருந்தாலும், இவர்களின் உரசல்களால், சுஷாந்த்தின் மரணம் பின்னுக்குத் தள்ளப்பட்டிருப்பதுதான் உண்மை.
அடுத்த கட்டுரைக்கு