ஹிந்தியில் பிரபலமான காபி வித் கரண் நிகழ்ச்சி 7-வது சீசன் தொடங்கப்படும் என எதிர்பார்த்த நிலையில் இனி அந்த நிகழ்ச்சி தொடராது என பாலிவுட் இயக்குநரும் தயாரிப்பாளரும் இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளருமான கரண் ஜோகர் கனத்த மனதோடு சமூக வலைதளத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்.
பாலிவுட் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு தங்களின் மனம் திறந்து பேசும் நிகழ்ச்சியாக 'காபி வித் கரண்' கடந்த ஆறு சீசன்களாக தொடர்ந்து வந்தது. ஏழாவது சீசனை ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருந்த நேரத்தில் கரண் ஜோகரின் இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. ஒருபக்கம் இந்நிகழ்ச்சியை மிஸ் செய்வதாக ரசிகர்கள் பதிவிட மற்றொரு பக்கம் இந்நிகழ்ச்சியின் மீதான விமர்சனத்தை மற்றவர்கள் வெளியிட்டு வருகிறார்கள்.
கரண் ஜோகர் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, "காபி வித் கரண் நிகழ்ச்சி ஆறு சீசன்களாக என்னுடைய வாழ்வின் ஒரு பகுதியாகவும் உங்களது வாழ்வின் ஒரு பகுதியாகவும் இருந்தது. பாப் கல்ச்சர் வரலாற்றில் எங்களுடைய தாக்கமும், இடமும் கூட இருப்பதாக நான் நினைக்கிறேன். கனத்த மனதோடு இதனை அறிவிக்கிறேன், காபி வித் கரண் இனி ஒரு போதும் திரும்பி வராது..."
2004-ல் பிரபல தொலைக்காட்சியில் ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் 2019-ல் நிறைவு பெற்றது. அதன் பிறகு இந்த மே மாதம் அடுத்த சீசன் ஆரம்பிக்க உள்ளதாக வதந்திகள் வந்தன. ஆலியா பட் - ரன்பீர், சாரா அலி கான், ஜான்வி கபூர் என 7-வது சீசனின் முதல் நிகழ்ச்சியில் யார் யார் கலந்து கொள்பவர்கள் என விவாதிக்கப்பட்டு வந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.