நடிகை கத்ரீனா கைஃப் கடந்த 2019ம் ஆண்டு நடிகர் விக்கி கெளஷலைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் ராஜஸ்தான் கோட்டையில் தங்களது திருமணத்தை ஆடம்பரமாக நடத்தினார். திருமணமாகி மூன்று வருடங்கள் ஆன நிலையில் கத்ரீனா கைஃப் அடிக்கடி அணியும் ஆடைகளைப் பார்த்து அவர் கர்ப்பமாக இருப்பதாகச் செய்திகள் பரவின. இந்தச் செய்தி குறித்து கத்ரீனா கைஃப் தனது தோழிகளிடம் பேசிய செய்தி இப்போது வெளியாகி இருக்கிறது.

கத்ரீனா கைஃப் தான் இப்போது குழந்தை பெற்றுக்கொள்வதைப் பற்றி நினைத்துப் பார்க்கவில்லை என்று தெரிவித்துள்ளார். இப்போதைக்கு ஒப்புக்கொண்டிருக்கும் படங்களில் கவனம் செலுத்துவதாகவும் அந்தப் படங்கள் முடிந்த பிறகுதான் குழந்தை பெற்றுக்கொள்வது குறித்துப் பரிசீலிக்கவேண்டும் என்றும் தனது தோழிகளிடம் தெரிவித்துள்ளார்.
ஆலியா பட் மற்றும் பிரியங்கா சோப்ராவுடன் சேர்ந்து 'ஜீ லி ஸரா' (Jee Le Zaraa) என்ற படத்திலும், விஜய் சேதுபதியுடன் 'Merry Christmas' படத்திலும் நடித்து வருகிறார். இந்தப் படங்களில் நடித்து முடித்த பிறகுதான் குழந்தை பெற்றுக்கொள்ளப்போவதாகத் தெரிவித்துள்ளார். இரண்டு படங்களையும் முடித்துவிட்டு ஒரு குழந்தை பெற்றுக்கொண்ட பிறகு மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தவும் முடிவு செய்துள்ளார்.

கத்ரீனா கைஃப், நடிகர் சல்மான் கானுடன் நடித்துள்ள 'டைகர் 3' படமும் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. முன்னதாக, கத்ரீனா கைஃப், சல்மான் கானைச் சில ஆண்டுகள் காதலித்து வந்தார். ஆனால் இக்காதலை கத்ரீனா கைஃப்தான் முறித்துக் கொண்டதாக அப்போது கூறப்பட்டது. அதுவும் சல்மான் கானுக்கு ஒரு எஸ்.எம்.எஸ். அனுப்பி பிரேக் அப் செய்து கொண்டதாக பாலிவுட்டில் செய்திகள் பரவின. அதன் பிறகு ரன்பீர் கபூரை ஐந்து ஆண்டுகள் காதலித்ததாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால் இந்தக் காதலும் கைகூடவில்லை. இறுதியில் நடிகர் விக்கி கௌஷலைக் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.