'Lust Stories', 'Kabir Singh' போன்ற படங்களில் நடித்தவர், கியாரா அத்வானி. சமீபத்தில் வருண் தவானுடன் இணைந்து ‘Jugjugg Jeeyo’ என்கிற படத்தில் நடித்துள்ளார். ராஜ் மேத்தா இயக்கியுள்ள இந்தப் படம் ஜூன் 24 அன்று திரைக்கு வருகிறது. இந்தப் படத்திற்கான புரொமோஷனுக்காக நிறைய ஊர்களுக்குச் சென்று வருகிறார் கியாரா. அப்படியான புரொமோஷனுக்காக படக்குழுவுடன் செல்லும்போதுதான் இந்தச் சம்பவம் நடந்திருக்கிறது.
கியாரா அத்வானியும் வருண் தவானும் மும்பை மெட்ரோ ரயிலில் பயணிக்கும் போது வடா பாவ் சாப்பிட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதுதான் பிரச்னைக்குக் காரணம். இதில் என்ன பிரச்னை என்கிறீர்களா?
மெட்ரோ ரயில் நிலையத்திலோ ரயிலிலோ உணவு பொருள்களைச் சாப்பிடக்கூடாது என்பது விதி. ரயில் நிலையத்தின் தூய்மையைப் பேணுவதற்காக இந்த விதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அனில் கபூர் உள்ளிட்ட படக்குழுவுடன் கியாரா, வருண் ஆகியோர் ரயிலில் பயணம் செய்யும் இந்த வீடியோவுக்கு இன்ஸ்டாகிராமில் நெட்டிசன்கள் பலரும் விமர்சித்து கமென்ட் செய்து வருகிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘செலிபிரிட்டி என்பதால் என்ன வேண்டுமானால் செய்யலாமா’, ‘விதியை மீறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்பது போன்ற கமென்ட்கள் வந்த வண்ணம் உள்ளன. ஒரு பயனர் மகாராஷ்ட்டிராவின் சுற்றுலாத் துறை அமைச்சர் ஆதித்யா தாக்கரே, மெட்ரோ நிர்வாகம் ஆகியோரை டேக் செய்து “இது போன்ற விதிமீறல்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இதனை அனுமதிப்பது தவறான முன்னுதாரணம். எப்படி நீங்கள் அனுமதிக்க முடியும்?” என்று பதிவிட்டுள்ளார்.
அதே சமயம், ‘வடா பாவ் சாப்பிட்டது குத்தமா?’ என்கிற ரீதியில் கியாராவுக்கு ஆதரவாகவும் கமென்ட்களைக் காண முடிந்தது.
இது தொடர்பாக கியாரா அத்வானி, வருண் தரப்பில் எந்தப் பதிலும் வரவில்லை.