பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவும் நடிகை கியாரா அத்வானியும் கடந்த 2021ம் ஆண்டிலிருந்து காதலித்து வந்தனர். அவர்கள் இருவரும் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சாலிமரில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருந்தனர். இதற்காகக் கடந்த 4ம் தேதியே தம்பதி தங்களது குடும்பத்தினரோடு ஜெய்சாலிமர் சென்று இருந்தனர். கடந்த 5ம் தேதி திருமண சடங்குகள் மருதாணி வைப்பதுடன் தொடங்கியது.
இதில் தயாரிப்பாளர் கரண் ஜோஹர், நடிகர் சாஹித் கபூர், நடிகை ஜுஹி சாவ்லா, ஈஷா அம்பானி உட்படப் பல பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டனர். திருமணத்துக்கு வந்தவர்களுக்காக சுர்யகர் பேலஸ் ஹோட்டலில் மணமக்கள் 80 அறைகளை முன்பதிவு செய்திருந்தனர். திருமணம் நடத்த வாடகை மட்டும் ரூ.1.2 கோடி கொடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தவிர விருந்தினர்களுக்காகப் பதிவு செய்யப்பட்ட ஒவ்வொரு அறைக்கும் தினமும் வாடகை மட்டும் இரண்டு லட்ச ரூபாயாகும். 6ம் தேதி இசை நிகழ்ச்சி மற்றும் மஞ்சள் வைத்தல் நிகழ்ச்சி நடந்தது. ஆரம்பத்தில் 6ம் தேதிதான் திருமணம் நடப்பதாக இருந்தது. ஆனால் இருவருக்கும் நேற்று இரவுதான் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு மணமகன் சித்தார்த் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். தங்க கலரில் சித்தார்த் ஷெர்வானி அணிந்திருந்தார். மணமகள் பிங்க் கலர் லெஹங்கா அணிந்திருந்தார்.
இத்திருமணத்திற்குப் பிறகு இருவரும் கணவன் மனைவியாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பகிர்ந்து கொண்டுள்ளனர். அந்தப் படங்கள் தற்போது பெருமளவு பகிரப்பட்டு வைரலாகி வருகின்றன.
அதில் இருவரும், "நாங்கள் நிரந்தரமாகப் பதிவு செய்து கொண்டோம். (Permanent Booking) எங்களின் இந்த வருங்காலப் பயணத்துக்கு உங்களின் ஆசீர்வாதமும் அன்பும் தேவை" என்று குறிப்பிட்டுள்ளனர். திருமணத்தில் இருவரின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர்.
திருமணம் நடந்த ஹோட்டல் பழைமையான கலைப்பொருள்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. திருமணத்தில் நாட்டுப்புற கலைஞர்களின் நடன நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. திருமண நிகழ்ச்சியைப் புகைப்படம் எடுக்க யாருக்கும் அனுமதி கொடுக்கப்படவில்லை. கியாராவும், சித்தார்த்தும் தங்களது நட்பு குறித்து வெளியுலகத்துக்குத் தெரிவித்துக்கொண்டது கிடையாது.

ஒரு முறை இது குறித்து கியாராவிடம் கேட்டதற்கு, "திருமணத்திற்கு பிறகே இது குறித்துப் பேச முடியும்" என்று குறிப்பிட்டு இருந்தார். திருமணம் செய்து கொண்ட பாலிவுட் தம்பதிகளுக்கு பாலிவுட் பிரபலங்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
ராஷ்மிகா மந்தனா, சமந்தா, ஸ்ரத்தா கபூர், விக்கி கெளஷல், கத்ரீனா கைஃப், சாக்ஷி தோனி, ராம் சரண், ஆலியா பட், அனில் கபூர், வருண் தவான் உட்படப் பலரும் சோசியல் மீடியாவில் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். நேற்று திருமணம் முடிந்ததும் திருமண தம்பதி நேராக டெல்லி புறப்பட்டுச் சென்றனர். டெல்லியில் நாளை (9ம் தேதி) திருமண வரவேற்புக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.