பாடகர் கே.கே என்று எல்லோராலும் அழைக்கப்படும் கிருஷ்ணகுமார் குன்னத் நேற்று இரவு கொல்கத்தாவில் உள்ள குருதாஸ் கல்லூரியின் விழாவொன்றில் இசை கச்சேரியை நிகழ்த்தச் சென்றிருந்தார். நிகழ்ச்சியின் போது உடல்நலக் குறைபாட்டை உணர்ந்தவர், முடித்துவிட்டு தான் தங்கியிருந்த கிராண்ட் ஹோட்டலுக்குத் திரும்பியுள்ளார். அதன் பிறகு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
இரவு 10:30-க்கு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் போது அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக அறிவித்திருக்கிறார்கள். கே.கேயின் மரணத்தை `இயற்கைக்கு மாறான மரணம்' என வழக்கு பதிவு செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
அவரது முகத்திலும் தலையிலும் காயங்கள் இருந்ததாகப் போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது. இறப்பிற்கான காரணத்தை அறிய பிரேத பரிசோதனை செய்யப்படவுள்ளது. கொல்கத்தாவில் உள்ள SSKM மருத்துவமனையில் இதற்கான நடைமுறைகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அவர் பங்கேற்ற நிகழ்ச்சியின் மேடையில் நடந்த வீடியோவை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். ஏற்பாடு செய்யப்பட்ட மேடையில் குளிர்சாதனம் வேலை செய்யவில்லை, வழக்கத்துக்கு மாறாக அவர் வியர்வையில் நனைந்தவண்னம் இருந்தார். மக்கள் கூட்டமும் அதிகமாக இருந்ததாகத் தெரிவிக்கின்றனர்.
கிருஷ்ணகுமார் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பல இந்திய மொழிகளில் பாடியுள்ளார். அவருக்கு வயது 53. தமிழில் 'மின்சார கனவு' படத்தில் 'ஸ்ட்ராபெர்ரி கண்ணே' தொடங்கி பல ஹிட் பாடல்களைக் கொடுத்தவர்.
மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். "அவசியமான நடைமுறைகளுக்கும் இறுதி ஊர்வலத்தை நிறைவேற்றவும் அவரது குடும்பத்துக்கு தேவையான உதவிகள் கிடைக்கப் பெற நேற்றிரவில் இருந்து நானும் எனது சக ஊழியர்களும் வேலை செய்து கொண்டிருக்கோம். எனது ஆழ்ந்த அனுதாபங்கள்" என ட்வீட் செய்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியும் இரங்கல் தெரிவித்துள்ளார். இந்தியாவின் திரை நட்சத்திரங்கள் பலரும் தங்களின் இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.