தோனியின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் மூலம் பிரபலமானவர் நடிகர் சுஷாந்த் சிங். இவர் கடந்த 2020ம் ஆண்டு ஜூன் 14ம் தேதி, தான் தங்கியிருந்த அபார்ட்மன்ட்டில் மர்மமான முறையில் இறந்தார்.
இந்த செய்தியறிந்த காவல்துறையினர் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும், சிபிஐ இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதையடுத்து சுஷாந்த் சிங் மரணம், தற்கொலை அல்ல கொலை என்று சுஷாந்த் சிங்கின் நெருங்கிய நண்பர்களும், உறவினர்களும் குற்றம் சாட்டினர். இந்த விவகாரத்தில் பல முக்கிய பாலிவுட் பிரபலங்களின் பெயர்களும் அடிபட்டன. போதை மருந்து, நெப்போடிசம், அரசியல் அழுத்தங்கள் உள்ளிட்ட பல்வேறு விவாதங்களை இது கிளப்பியது. இருப்பினும், இந்த விவகாரம் இன்னும் பெரும் மர்மமாகவே இருக்கிறது.
இதைத்தொடர்ந்து பாலிவுட்டில் நெப்போடிசம் மற்றும் அரசியல் தலைவிரித்தாடுவாதாகப் பலரும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்த வண்ணம் இருக்கின்றனர்.

இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகரான மனோஜ் பாஜ்பாய், சுஷாந்த் சிங் பற்றியும், திரைத்துறையில் இருக்கும் அரசியல் அழுத்தங்கள் குறித்தும் பேசியுள்ளார். இது குறித்து நேர்காணல் ஒன்றில் பேசிய மனோஜ், "சுஷாந்துடன் மிகவும் நெருக்கமாக பழகியிருக்கிறேன். அவர் ஒரு தூய்மையான ஆன்மா, நல்ல மனிதர். அவர் இப்படி ஒரு முடிவெடுப்பர் என்று நான் எதிர்பார்க்கவில்லை. பொதுவாக ஒருவர் வெற்றியை நோக்கி முன்னேறும்போது அரசியல் குறுக்கீடுகள், அழுத்தங்கள் அதிகமாகும். அந்த சமயத்தில் நம் வேலையில் இருக்கும் அழுத்தத்தையும், அரசியல் அழுத்தத்தையும் கையாள முடியாத சூழல் ஏற்படும். அந்த அழுத்தங்களை அவரால் கையாள முடியவில்லை. சுஷாந்த் நிறைய கஷ்டங்களை அனுபவித்துவிட்டார். நானும் அதுபோன்ற சூழலை எதிர்கொண்டிருக்கிறேன். இந்தத் துறையில் வெற்றியை நோக்கி நகரும் பலரும் இதுபோன்ற பிரச்னைகளை எதிர்கொள்கிறார்கள்" என்று கூறியுள்ளார்.