சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

மீடியா பசிக்கு இரையா ரியா?

சுஷாந்த் சிங் தற்கொலை
பிரீமியம் ஸ்டோரி
News
சுஷாந்த் சிங் தற்கொலை

சுஷாந்த் சிங்கின் தற்கொலை பல இந்திய மீடியாக்களின் ப்ரைம் டைம் செய்தியாக (‘வாட்ச் இட் ஆப்டர் தி பிரேக்’குடன்தான்) மாறியிருக்கிறது.

சுஷாந்த் சிங்கின் தற்கொலை கடந்த மூன்று மாதங்களில் பல்வேறு பரிணாமங்களை எடுத்துள்ளது. வட இந்திய ஊடகங்களின் 24*7 ப்ரைம் டைம் கவரேஜ் இதற்குத் தரப்பட்டதில், சீன ஊடுருவல் பிரச்னை, ஜிடிபி வீழ்ச்சி, கொரோனா பாதிப்பு போன்ற செய்திகள் புறக்கணிப்பட்டன. 30 ஆண்டுகளுக்கு முன்னர் பாலிவுட் நடிகை ரேகாவுக்கு சூனியக்காரி, கொலையாளி எனப் பட்டம் கட்டிய வட இந்திய மீடியா, இம்முறை இலக்கு வைத்தது ரியா சக்ரபோர்த்திமீது! வட இந்திய மீடியாக்களின் இந்த தீர்ப்பு எழுதும் அத்துமீறலைப் பார்த்து பல பிரபலங்களும் #StopMediaCircus என குரல்கொடுத்துவருகின்றனர்.

யாருக்காக இந்த ‘நீதி?’

சுஷாந்த் சிங்கின் தற்கொலை பல இந்திய மீடியாக்களின் ப்ரைம் டைம் செய்தியாக (‘வாட்ச் இட் ஆப்டர் தி பிரேக்’குடன்தான்) மாறியிருக்கிறது. ‘மீடியா டிரெயல்’ என்ற வார்த்தைக்கு அகராதியைப் புரட்டவேண்டிய அவசியத்தைக் கொடுக்காமல், அதன் வாழும் சாட்சியாக இன்று சில ப்ரைம் நியூஸ் சேனல்களின் செயல்கள் மாறியிருக்கின்றன.

மீடியா பசிக்கு இரையா ரியா?

“சுஷாந்தை ஏன் கொன்றீர்கள் ரியா?” என்ற கேள்வியை மட்டும்தான் இன்னும் வெளிப்படையாகக் கேட்கவில்லை. ஆனால், தீர்ப்பை எழுதியாயிற்று. சுஷாந்தின் ஆத்மா சாந்தியடைந்ததாய் ஆனந்தப்பட்டும் முடித்தாயிற்று. சுஷாந்த் வழக்கு தொடர்பான விவாதம் ஒன்றில், ஜிடிபி பற்றி ஏன் கேள்வி எழுப்பவில்லை எனக் கேட்ட ஒருவரிடம், அந்த நிகழ்ச்சியை நடத்தும் நெறியாளர், ‘முக்கியமான பிரச்னையிலிருந்து மக்களைத் திசை திருப்பாதீர்கள்’ எனப் பதில் சொல்கிறார். ‘எது இங்கே முக்கியம்?’ என ஒரு நிமிடம் தலைசுற்றவே செய்தது.

ரியா சக்ரபோர்த்தி நிரபராதி என்பது இங்கே வாதமல்ல. காரணம், அதைச் சொல்லவும் இங்கே நமக்கு எந்த முகாந்திரமும் இல்லை. சுஷாந்த்தின் பணத்தைக் கையாடல் செய்து அவரைத் தன் கட்டுக்குள் வைத்துகொண்டதாக ரியாவின் மீது சுஷாந்தின் குடும்பம் வழக்கு தொடர, ரியா - சுஷாந்த்தின் பழைய வாட்ஸப் மெசேஜ்கள் இது தொடர்பான விசாரணையில் வெளியே வந்திருக்கின்றன. அதில்தான் சுஷாந்துக்கு ரியா போதைப்பொருள் சப்ளை செய்ததற்கு ஆதாரமான விஷயங்கள் சிக்கியிருக்கின்றன. இதைத் தொடர்ந்து போலீஸ் மற்றும் அமலாக்கத்துறையிடம் இருந்த வழக்கு போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரிடம் மாறியது. மூன்று நாள் விசாரணைக்கு ரியா வந்தபோதுதான் எண்ணற்ற மைக்குகள் அவரைத் துளைத்தெடுத்தன. சமூக இடைவெளி விதிமுறைகள் காற்றில் பறந்தன. 24 மணி நேரமும் கேமராக்கள் அந்த ஏரியாவிலேயே கூடாரம் அமைத்தன. ரியாவிடம் ஒரு வார்த்தையையாவது வாங்கிவிட்டால் ஒரு வாரம் கன்டென்ட் என்கிற ரீதியில்தான் மீடியாக்கள் அன்று வேலை பார்த்தன எனப் பலரும் கண்டனம் தெரிவித்தனர். கூடவே, சஞ்சய் தத், சல்மான் கான் போன்றவர்கள் குற்றம்சாட்டப்பட்டு அழைத்து வரப்பட்டபோது அவர்களை இதே மீடியாக்கள் எப்படி நடத்தின என்பதை ஒப்பிட்டு மீம்களும் பகிரப்பட்டன.

அதே சமயம், இதற்கெல்லாம் மிக முக்கியக் காரணம் மீடியாக்கள் மட்டும்தான் எனச் சொல்லிவிட்டு நாம் ஒதுங்கிவிட முடியாது. ‘மக்கள் விரும்புகிறார்கள்’ என டிவி சேனல்கள் சொல்லும் ‘நியாய’ங்களிலும் உண்மை இருக்கவே செய்கிறது. இங்கே ஒரு தனிப்பட்ட குடும்பப் பிரச்னை தொடர்பான க்ரைம் செய்திக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் பொருளாதாரம் தொடர்பான செய்திகளுக்கோ, புலம்பெயர் தொழிலாளர் துயரங்களுக்கோ கிடைப்பதில்லை. பிரபல வட இந்திய ஊடகம் ஒன்று, அவர்கள் சார்பாக சுஷாந்த் - ரியா வழக்கில் 86 நாள்கள் மிகுந்த சிரமத்துக்கிடையே ரிப்போர்ட்டிங் செய்ததாகவும், போதைப்பொருள் தொடர்பாக 45 மெசேஜ்களை வெளியே கொண்டுவந்ததாகவும், இது தொடர்பாக 36 ஸ்டிங் ஆபரேஷன்களைச் செய்து 15 பேரை சாட்சியாக நிறுத்தியதாகவும் மார்தட்டுகிறது. 2,000 மணி நேரம் சுஷாந்த் வழக்கு தொடர்பான செய்தியை ஒளிப்பரப்பியதாகவும் பெருமைப்பட்டுக் கொள்கிறது. இதை எப்படி எடுத்துக்கொள்வது என்பதை நீங்களே முடிவுசெய்துகொள்ளலாம்.

மீடியா பசிக்கு இரையா ரியா?

மூன்று நாள் விசாரணை முடிந்து வெளியே வந்த ரியா, முதல் நாள் தன்னை நெருக்கித் தள்ளிக் குற்றம் சாட்டிய கேமராக்களுக்குத் தன் கையை அசைத்துக் காட்டினார். அவரின் டி-ஷர்ட்டில் ‘Smash Patriarchy’ என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது. ‘ஆணாதிக்கத்தை உடைக்கவேண்டும்’ என்பதே அதன் பொருள். ரியாவைத் துளைத்தெடுத்த மீடியாக்களில், லைவ் டிவி ஷோக்களில் பெண்களும் இருந்தார்களே என்ற கேள்வி எழலாம். ஆணாதிக்கம் என்பது இங்கே ஆண்களுக்கு மட்டும் சொந்தமானது அல்லவே! ஒரு பெண்ணிடமிருந்தும் மற்றொரு பெண்ணின்மீது அது நிச்சயம் வெளிப்படலாம். எந்தப் பாலினம் அதைப் பெண்களின் மீது வெளிப்படுத்தினாலும், பாலினப் பாகுபாடு காட்டினாலும் அது ஆணாதிக்கமே!. ரியா எதிர்பார்ப்பது பெண் என்கிற போர்வையில் சலுகை அல்ல, #TreatWomenFair என்பது மட்டுமே.

சுஷாந்த்தின் எதிர்பாராத மரணம் வருத்தமளிக்கும் ஒன்றுதான். ஆனால், நீதி என்பது உடனடியாகக் கிடைக்கும் ஒன்றல்ல. மக்களின் தீர்ப்பை மகேசன் (நீதிமன்றத்தின்) தீர்ப்பு என ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. ‘மாப் ஜஸ்டிஸ்’ என்பது ‘ஜஸ்டிஸ்’ இல்லை. அது பலதரப்பட்ட காரணங்களுக்காக உணர்ச்சிவசப்படுவதால் எடுக்கப்படும் ஒரு முன்முடிவு (சரியாகவே இருந்தாலும்). சுஷாந்தின் மரணத்துக்கு ரியாவே காரணமாக இருக்கலாம். அந்த உண்மைகள் பின்னாளில் விசாரணையில் வெளிவரலாம். அப்படி இல்லாமலும் போகலாம். அதுவரை நம் பேனாக்களை நாம் ஒளித்துவைக்க வேண்டும். தீர்ப்பை எழுதவேண்டிய பேனா நீதிபதியுடையது மட்டும்தான். இன்னொன்றையும் இங்கே குறிப்பிட்டே ஆகவேண்டும். சுஷாந்த் தற்போது உயிரோடிருந்திருந்தால், போதைப் பொருள் பயன்படுத்தியதற்காக அவரையும் போலீஸ் விசாரணைக்குக் கட்டாயம் அழைத்திருக்கும். அப்போது அவர் மீடியாவால் எப்படி நடத்தப்பட்டிருப்பார் என்பதை உங்களின் கற்பனைக்கே விட்டுவிடுகிறேன்.

போராளியா கங்கனா ரணாவத்?

நெப்போட்டிஸம் என ஆரம்பித்த சுஷாந்த்தின் மரணப் புதிர்களின் பக்கம்நின்று பேசியவர்களில் முக்கியமானவர் கங்கனா. அரசை எதிர்க்கும் துணிச்சல், பின்னால் திரளும் ரசிகர் கூட்டம், வருகைக்காக கேமராவோடு காத்திருக்கும் தேசிய ஊடகங்கள், ட்விட்டரில் எந்நேரமும் டிரெண்டாகும் பெயர் - ஹீரோக்களுக்கு சினிமாவில் மட்டுமே சாத்தியமாகும் இவை அத்தனையும் கங்கனா ரணாவத்துக்கு நிஜத்திலும் சாத்தியமாகியிருக்கிறது. இந்த அத்தனை வெளிச்சத்துக்கும் தகுதியுடையவர்தானா கங்கனா?

வெளியாளின் வெற்றி!

16 வயதில் பெற்றோருடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டு டெல்லிக்கு வந்த கங்கனாவை வரவேற்றது மாடலிங் உலகம். அங்கிருந்து நாடகங்களுக்கு நகர்ந்தவர் தனக்குக் கிடைத்த வரவேற்பினால் பாலிவுட் கனவுகளை வளர்த்துக்கொண்டார். ஆனால் அக்கனவுகளை அடைவது எளிதானதில்லை என்பது உள்ளே நுழைந்த சில ஆண்டுகளுக்குப் பின்தான் அவருக்குப் புரிந்தது.

மீடியா பசிக்கு இரையா ரியா?

‘என்னை பாலிவுட் முதலிலிருந்தே வெளியாளாகத்தான் பார்த்தது. அந்தக் கூட்டத்தில் இணைந்துவிட வேண்டுமென்று முடியை ஸ்ட்ரெய்ட்னிங் செய்துகொண்டேன். நீச்சலுடையில் நடித்தேன். பக்கா கமர்ஷியல் படங்களைத் தேர்வு செய்தேன். ஆனாலும் அவர்கள் என்னை பி-கிரேடு நடிகையாகத்தான் பார்த்தார்கள்’ - கங்கனாவின் வார்த்தைகள் இவை.

முதல் படமே ஹிட். நல்ல எதிர்காலமிருக்கிறது என்கிற பெயர். ஆனாலும் கங்கனாவால் அவர் விரும்பிய எலைட் வட்டத்திற்குள் நுழையமுடியவில்லை. சினிமாவில் நுழைந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பின் 2008-ல் கிடைத்தது முதல் அங்கீகாரம். ‘ஃபேஷன்’ படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருது. அதன்பின்னும் தொடர்ந்து கமர்ஷியல் படங்களில் நடித்தார். ம்ஹூம்! அவரைத் தள்ளி வைத்தே பார்த்தது பாலிவுட். 2014-ல் ‘குயின்’ கொடுத்த வெற்றி அவரைத் தனியொரு ராணியாக மாற்றியது. சிறந்த நடிகைக்கான தேசிய விருது. அடுத்த ஆண்டும் தேசிய விருது. இப்போது கங்கனா பாலிவுட்டின் தவிர்க்கமுடியாத அடையாளம்.

வலியும் வேதனையும் மட்டுமே கங்கனாவின் சினிமா வாழ்க்கை அல்ல. ஈகோ மோதல்களும்தான். ‘ஷக்கலக்க பூம் பூம்’, ‘கைட்ஸ்’, ‘க்ரிஷ் 3’, ‘ரங்கூன்’, ‘குயின்’ என அவர் நடித்த பல படங்களில் சண்டை சச்சரவுதான்.

பர்சனல் வாழ்க்கையும் கங்கனாவிற்கு உவப்பானதாக இருந்ததில்லை. ஆனால் அது அவரின் பர்சனல். நாம் சொல்வதற்கு எதுவுமில்லை.

போராளியா கங்கனா?

மேல்பார்வைக்கு கங்கனாவின் கருத்துகளும் துணிச்சலும் அவரை அதிகாரத்திற்கு அஞ்சாத போராளியாக, பெண்களுக்காகக் குரல்கொடுக்கும் பெண்ணியவாதியாக முன்னிறுத்துகின்றன. ஆனால் கொஞ்சம் ஆராய்ந்தால்?

‘தகுதியுடையவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்படவேண்டும்’ என கங்கனா சொல்வதில் நியாயம் இருக்கிறதுதான். ஆனால் அவர் சினிமாவையும் சமூகத்தையும் ஒரே கோணத்தில் பார்ப்பதுதான் பெரிய பிரச்னை. ‘இங்கே பலர் மருத்துவர்களாகவும் பொறியாளர்களாகவும் பைலட்களாகவும் ஆகமுடியாமல் போவதற்கு முக்கியக் காரணம் இட ஒதுக்கீடுதான். இதனால்தான் பலர் அமெரிக்காவிற்குச் செல்கிறார்கள். நெப்போட்டிஸமும் இட ஒதுக்கீடும் ஒன்றுதான். இட ஒதுக்கீடே இனி வேண்டாமே’ எனச் சில வாரங்களுக்கு முன் சொன்னார் கங்கனா.

அதற்கு எதிர்வினைகள் பலமாக வர, ‘சாதியப் படிநிலையை இப்போது யாரும் கடைப்பிடிப்பதே இல்லை. இந்திய நகரங்களும் கிராமங்களும் சாதியிடமிருந்து விலகிவிட்டன. சட்டத்தில் மட்டும்தான் சாதி இருக்கிறது இட ஒதுக்கீட்டின் வழியே’ என்றார். அதன்பின்னும் சளைக்காமல், ‘சாதி அவரவரின் குணத்தைப் பிரதிபலிக்கிறது; அடையாளத்தை அல்ல. என் போர்க்குணம் என் ஷத்திரிய ரத்தத்திலிருந்து வந்தது’ எனவும் சொன்னார்.

சரி, இவை அனைத்தையும் விட்டுவிடலாம். ஒரு பெண்ணாக, சக பெண்களுக்குக் குரல்கொடுக்கிறாரா கங்கனா? குற்றம் சாட்டப்படுபவர் தீர்ப்பு வரும்வரை நிரபராதிதான். ஆனால் அதற்கு முன்பே இந்தியாவின் மூலைமுடுக்கு எங்கும் ரியா சக்ரபோர்த்தியைக் குற்றவாளியாக நிறுவிவிட்டார் கங்கனா. ரியாவை விளிக்க அவர் பயன்படுத்தும் சொற்கள் முகம்சுளிக்க வைக்கின்றன. அது தவறு எனச் சுட்டிக்காட்டும் தாப்ஸி பன்னு, ஸ்வரா பாஸ்கர் போன்றவர்களை ‘பி-கிரேடு நடிகைகள்’ என முத்திரை குத்துகிறார். ‘தாப்ஸிக்கு சினிமா கரியர் என ஒன்று இல்லவே இல்லை’ என நக்கலாக வந்து விழுகிறது ஒரு ட்வீட் கங்கனாவின் ஐடியிலிருந்து. ‘நான் கடுமையான மன அழுத்தத்தில் இருந்தேன்’ என தீபிகா படுகோன் தன் வலியைப் பகிர்ந்துகொண்டால், ‘அதற்கென்ன சாட்சி இருக்கிறது? இப்படியெல்லாம் சொல்லித் தப்பிக்கப் பார்க்கிறார்கள்’ எனக் குற்றம் சுமத்துகிறார். ஒருகாலத்தில் கங்கனாவைப் புண்படுத்திய அதே வார்த்தைகள் இப்போது கங்கனா வாயிலிருந்தே மற்றவர்களை நோக்கி வருகின்றன.

கங்கனா வெளியாள் என்பதால் ஓரங்கட்டப்பட்டார் என்பதிலோ, பெண் என்பதால் புறக்கணிக்கப்பட்டார் என்பதிலோ யாருக்கும் எந்த மாற்றுக்கருத்துமில்லை. அதைத் தாண்டி அவர் தனக்கான உயரத்தையும் அடைந்துவிட்டார். ஆனால், ‘அசுரன்’ படத்தின் இறுதியில், ‘அவங்க நமக்குப் பண்ணுனத நீ எவனுக்கும் பண்ணாம இரு’ என்பாரே சிவசாமி. அந்த வார்த்தைகளின் அர்த்தத்தை கங்கனா அறிந்துகொள்ளுதல் அவசியம்.