Published:Updated:

பாலிவுட்டின் முதல் ‘கான்!’

திலீப்குமார்
பிரீமியம் ஸ்டோரி
திலீப்குமார்

முகமது யூசுப் கான் என்னும் அந்த நடிகர் அதை ஆமோதிக்கிறார். திலீப்குமார் என்னும் பெயருடன் அவரின் முதல் படமான ‘ஜுவார் பட்டா’ (Jwar Bhata) 1944-ல் வெளியாகிறது.

பாலிவுட்டின் முதல் ‘கான்!’

முகமது யூசுப் கான் என்னும் அந்த நடிகர் அதை ஆமோதிக்கிறார். திலீப்குமார் என்னும் பெயருடன் அவரின் முதல் படமான ‘ஜுவார் பட்டா’ (Jwar Bhata) 1944-ல் வெளியாகிறது.

Published:Updated:
திலீப்குமார்
பிரீமியம் ஸ்டோரி
திலீப்குமார்

‘கான்’களின் கைகளில் தற்போதைய பாலிவுட் என்பதுதான் 90ஸ் கிட்ஸ்களுக்கும் 2K கிட்ஸ்களுக்கும் தெரிந்த கதை. ஆனால், வரலாற்றில் ஒரு முக்கியச் சம்பவம் மட்டும் நடக்காது இருந்திருந்தால், அந்தத் தயாரிப்பாளர், அந்த இளம் நடிகருடன் அப்படியொரு விவாதத்தை மட்டும் நடத்தாமல் இருந்திருந்தால், பாலிவுட்டின் முதல் ‘கான்’ சூப்பர்ஸ்டார் இந்தியா சுதந்திரம் அடைந்தபோதே கிடைத்திருப்பார்.

தன் முதல் பட ரிலீஸுக்குத் தயாராகிக் கொண்டிருந்த அந்த இளம் நடிகரிடம், தயாரிப்பாளர் தேவிகா ராணி இப்படிச் சொல்கிறார். “நீ விரைவில் நடிகனாகத் திரையில் தோன்றவிருக்கிறாய். உனக்கென ஒரு திரைப் பெயர் இருந்தால் நன்றாக இருக்கும். உன் பெயர் நீ எப்படிப்பட்ட நடிகன் என்பதை மக்களுக்குத் தெளிவாக உணர்த்த வேண்டும். ஒரு ரொமான்டிக் நாயகனாக நீ வரவேண்டும் என்பதால் அதைப் பிரதிபலிக்கும் பெயரை உனக்காக யோசித்திருக்கிறேன். ‘திலீப்குமார்’ - இது எப்படி இருக்கிறது?”

பாலிவுட்டின் முதல் ‘கான்!’

முகமது யூசுப் கான் என்னும் அந்த நடிகர் அதை ஆமோதிக்கிறார். திலீப்குமார் என்னும் பெயருடன் அவரின் முதல் படமான ‘ஜுவார் பட்டா’ (Jwar Bhata) 1944-ல் வெளியாகிறது. 50 ஆண்டுகளுக்கும் மேலாகத் திரையுலகை ஆண்ட அவருக்கு அந்தப் பெயரே அடையாளமாகிப்போகிறது. இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை, அப்போது பரவலாக முஸ்லிம் மக்கள் மீதிருந்த வெறுப்புணர்வு போன்றவை கலையுலகிலும் பிரதிபலித்ததால் இந்தப் பெயர் மாற்றம் ஏற்பட்டதாக பரவலான கருத்து இருந்தாலும், சினிமாவே பிடிக்காத தன் அப்பாவிற்கு பயந்துதான் தன் பெயரை மாற்றிக்கொண்டதாக பின்னொரு பேட்டியில் சொல்லியிருக்கிறார் திலீப்குமார். தற்போதைய பாகிஸ்தானில் இருக்கும் பெஷாவரில் பிறந்த யூசுப் கான், பம்பாயின் பாலிவுட் பாட்ஷா திலீப்குமாராக மாறியது இப்படித்தான்.

பாலிவுட்டின் முதல் ‘கான்!’

பெரும்பாலான நடிகர்களைப் போலவே தோல்வி முகத்துடன் தொடங்கியது அவரின் திரைப்பயணம். ஆனால், மூன்றே வருடங்களில் தன் சிறுவயது நண்பரான ராஜ் கபூருடன் போட்டி போட்டு அதிக படங்கள் நடிக்கும் ஸ்டாராக வலுவானதொரு இடத்தைப் பிடித்தார். இந்தியா சுதந்திரம் அடைந்த அதே வருடத்தின் மே மாதம் இவரின் ‘ஜுக்னு’ படம் வெளியாகி இந்தியர்களைக் காதலில் விழச் செய்தது. அந்தக் காலகட்டத்தில் 50 லட்சம் ரூபாய் வரை வசூல் செய்து மகத்தான சாதனை புரிந்தது அந்தப் படம். தற்போதைய நிலவரப்படி அது ரூ.400 கோடிக்குச் சமமானதொரு தொகை. தொடர் வெற்றிகளால், ஒரே வருடத்தில் நான்கைந்து படங்கள் வரை நடிக்கும் உச்ச நட்சத்திரமாகத் தன்னை வளர்த்துக்கொண்டார் திலீப்குமார்.

தற்போது வேண்டுமானால் ஷாருக்கான் ஒரு மாஸ் ஹீரோவாக இருக்கலாம். ஆனால், அவர் காதல் படங்கள் செய்துகொண்டிருந்த 90, 2000-களில், அவரின் கதாபாத்திரம் மரணிக்கும்படியான க்ளைமாக்ஸ் இருந்தால் படம் வெற்றி என்ற ஒரு மாயை இருந்தது. இத்தகைய நம்பிக்கைகளின் தொடக்கப்புள்ளி திலீப்குமார்தான். அவரின் பெரும்பாலான ஹிட் படங்களில், அவரின் விருதுகள் குவித்த பாத்திரங்கள் அனைத்துமே பெரும் துயரத்தைச் சுமக்கும் ஒன்றாகவே இருக்கும். அதிலும் மெத்தட் ஆக்டராக, (அதாவது வெறும் சைகைகளாலும் செயல்களாலும் நடிக்கும் முறையை விடுத்து, ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்தின் எமோஷன்களோடு ஒன்றிப் போய் நடிக்கும் முறை) இருந்த திலீப்குமாருக்கு இத்தகைய துயர் மிகுந்த கதைகள் ஒருவித மன அழுத்தம் கொடுத்தன. குறிப்பாக ‘தேவ்தாஸ்’ படத்தில் நடித்த பின்னர் மன அழுத்தத்துக்கான சிகிச்சைகளை எடுத்துக்கொண்டார். மருத்துவரின் ஆலோசனைப்படி, சிறிது காலம் ‘கோஹினூர்’ போன்ற ஜனரஞ்சகமான படங்களில் நடித்தார்.

பாலிவுட்டின் முதல் ‘கான்!’
பாலிவுட்டின் முதல் ‘கான்!’
பாலிவுட்டின் முதல் ‘கான்!’

தமிழ்நாட்டுடன், குறிப்பாக சென்னையோடு அவருக்கு நெருங்கிய உறவு இருந்தது. தமிழ் சினிமாவின் பிரபல திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்களான ஜெமினி, ஏ.வி.எம் போன்றவற்றுடன் நெருங்கிய நட்பு இருந்தது. தி.நகரில் என்.எஸ்.கிருஷ்ணன் சிலை திறக்கப்பட்டபோது, அறிஞர் அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர், எஸ்.எஸ்.வாசன் போன்ற தமிழகத்தின் முக்கியத் தலைவர்கள் மற்றும் திரைப் பிரமுகர்களுடன் திலீப்குமாரும் கலந்துகொண்டார். அறிஞர் அண்ணா மறைந்தபோது அவருக்கு அரசால் நடத்தப்பட்ட நினைவஞ்சலி நிகழ்வில் திலீப்குமாரும் உரையாற்றினார். அவரின் நிறைய படங்கள் தமிழகத்திலும் படமாக்கப்பட்டிருக்கின்றன.1998-ல் தான் அவரின் கடைசிப் படம் வெளியானது. அதேபோல், அவரின் ‘ஆக் கா டரியா’ மற்றும் ‘கலிங்கா’ படங்கள் முழுமையாக முடிந்த பின்னரும் இன்னமும் வெளியாகவில்லை. திலீப்குமாரின் ஆகச்சிறந்த படங்களில் அவருக்கு மாற்றாக வேறு யாரையும் நம்மால் யோசிக்கவே முடியாது. மேலா, அந்தாஸ், தேவ்தாஸ், ஆசாத், கோஹினூர், கங்கா ஜமுனா, முகல்-இ-அசாம், ராம் அவுர் ஷ்யாம் என 1960-கள் வரை பல முக்கியமான படங்களைக் கொடுத்திருக்கிறார். குறிப்பாக, 1960-ல் வெளியான முகல்-இ-அசாமின் வசூல் சாதனையை 2008 வரை யாராலும் முறியடிக்க முடியவில்லை. 50 வருடங்களைத் திரைத்துறையில் கடந்தபோது தாதா சாகேப் விருதால் கௌரவிக்கப்பட்டவர், மொத்தம் 8 பிலிம்பேர் விருதுகளை வென்றிருக்கிறார். 65 படங்களுக்கும் மேல் நடித்த திலீப்குமார் எனும் பாலிவுட்டின் முதல் ‘கான்’, இன்றைய பல மூத்த நடிகர்களுக்கும் ரோல்மாடல். 98 வயதில் வயோதிகத்தால் நம்மை விட்டுப் பிரிந்திருக்கும் இவர், சுதந்திர இந்தியாவின் சிறு குழந்தையான பாலிவுட் சினிமாவுக்கு முகவரி கொடுத்த கலைஞர்களில் முக்கியமான ஒருவர். சுருங்கச் சொன்னால், சினிமாவால் அவர் புகழடையவில்லை, சினிமாதான் அவரால் புகழடைந்தது. துயரங்களின் கலைஞனுக்குப் புகழஞ்சலி!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism