தமிழ் மட்டுமில்லாமல் ஹிந்தி மொழி படங்களிலும் கலக்கி வரும் நடிகர் மாதவன், கடந்த வருடம் நெட்ஃபிளிக்ஸ் தயாரிப்பில் ‘Decoupled’ எனும் வெப்சீரியஸ் ஒன்றில் நடித்திருந்தார். இந்த வெப்சீரியஸ் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இதில் விவாகரத்து பெற விரும்பும் ஒரு ஜோடி, தங்கள் 12 வயது மகளுக்கு தங்கள் விவாகரத்து குறித்து, எப்படிச் சொல்லி புரிய வைப்பது என்று தெரியாமல் தவிப்பதுதான் கதை. இந்தத் தொடரில் பாலின சமத்துவம் பற்றியும் பேசப்பட்டிருக்கும்.

இதையொட்டி அண்மையில் பேசிய மாதவன் பாலின சமத்துவம் குறித்தான தன் கருத்துக்களை பகிர்ந்துள்ளார். பாலின சமத்துவம் என்பது ஒன்றும் புதிதல்ல என்றும் தற்போது வளர்ந்து வரும் இந்தச் சமூக சூழலில் அவசியமானது என்றும் கூறியுள்ளார். மேலும், "நீங்கள் எதை அகற்றினாலும் அகற்றாவிட்டாலும், ஆண்களுக்கான வேலை, பெண்களுக்கான வேலை என்று வரையறுக்கும் இந்த விதிகளை அகற்றுங்கள். இதில் ஆண்களை குறைசொல்ல முடியாது அவர்கள் வளர்க்கப்பட்ட விதம் அப்படி. அந்தக் காலத்தில் இருந்தவர்கள் வீட்டில் அப்படித்தான் இருந்தார்கள் அதை அவர்கள் தவறாகக் கருதவில்லை. அப்படி இருக்கும் குடும்பம் கட்டுப்பாடான குடும்பம் என்று அழைக்கப்பட்டது. ஆனால், அது பெண்களுக்கு பொருத்தமில்லாததாக இருந்தது" என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
மேலும், "ஆண்கள் ஒன்றைப் புரிந்து கொள்ளவேண்டும், ஆண்களை விடவும் பெண்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் வலிமை வாய்ந்தவர்கள். ஆண்களின் கடைசி காலங்களில் பெண்கள்தான் ஆண்களை பார்த்துக் கொள்கிறார்கள். இந்த உண்மையை ஆண்கள் ஏற்றுக் கொள்வது கடினம் என்றாலும் இதுதான் நிஜம். உதாரணமாக எங்கள் வீட்டில் என் பாட்டி உட்பட பல வலிமையான பெண்கள் உள்ளார்கள். அவர்கள்தான் குடும்பத்தைத் தலைமை தாங்கி நடத்தினார்கள். மகிழ்ச்சியாக அவர்கள் ஆண்கள் விரும்பியதைச் செய்ய அனுமதித்தார்கள்.

பெரும்பாலான வீடுகளில் நீங்கள் கவனித்துப் பார்த்தால் தெரியும் உங்களின் தாத்தாவை விடவும் பாட்டி நிறைய காலம் கடைசிவரை வாழ்வார். அவர்கள்தான் நம்மை கடைசி காலங்களில் பார்த்துக் கொள்வார்கள். எனவே நீங்கள் பெண்களைப் புரிந்து கொண்டு அவர்களின் எதிர்காலம் குறித்து கவனம் செலுத்துங்கள். மேலும் உங்கள் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்த ஆண்கள் இன்னும் தீவிரமாக பாலின சமத்துவம் குறித்த விவாதத்தில் ஈடுபட வேண்டும்" என்றும் மாதவன் பேசியிருக்கிறார்.