சினிமா
Published:Updated:

சூப்பர் ஸ்டாருக்கும் மேல!

ரன்பீர் கபூர்
பிரீமியம் ஸ்டோரி
News
ரன்பீர் கபூர்

ஆரம்பக் காலத்தில் மாஸ் மற்றும் க்ளாஸ் என இரட்டைக் குதிரையில் சவாரி செய்த ரன்பீர், தரமான முயற்சிகளையும் எடுக்கத் தவறவில்லை.

“நான் சூப்பர்ஸ்டாராக வேண்டும். ஆனால், அதற்கு முதலில் நான் சூப்பர் நடிகனாக இருக்கவேண்டும். இன்று ஏதோ ஒரு வெள்ளிக்கிழமையில் வெளியாகும் ஒரு படம் ஹிட்டானால்கூட அதன் நடிகரை சூப்பர் ஸ்டார் என்றழைக்கும் வழக்கம் இருக்கிறது. ஆனால், அமிதாப் பச்சனும், கான்களும் பல வருடங்கள் பாடுபட்டிருக்கிறார்கள். அவர்களைப்போல ஒருநாள் நானும் சூப்பர்ஸ்டார் ஆவேன் என்பதைத் திமிருடனே சொல்லிக்கொள்கிறேன். ஆனால், அந்த ஒருநாள் இன்றல்ல என்பதையும் நான் அறிவேன்!”

சூப்பர் ஸ்டாருக்கும் மேல!

அறிமுகமான ஆறாவது வருடத்தில் ரன்பீர் கபூர் உதிர்த்த வார்த்தைகள் இவை. வருடத்திற்கு 2, 3 படங்கள் என ரன்பீரின் பெரும்பாலான படங்கள் ஹிட்டடித்த காலம் அது. இப்போதும் அவர் சூப்பர்ஸ்டாரா என்பதெல்லாம் தெரியாது. ஆனால், சூப்பர் நடிகனாகத் தன்னை நிரூபித்துவிட்டார்.பாலிவுட் காதல் மன்னன் ரிஷி கபூரின் மகன்தான் ரன்பீர். புகழ்பெற்ற இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியிடம் உதவி இயக்குநராக தன் திரைப் பயணத்தை தொடங்கிய ரன்பீர், பின்னர் அவரின் இயக்கத்தில் உருவான ‘சாவரியா’ படத்திலேயே நாயகனாக அறிமுகமானார். படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. ஆனால், ரன்பீர் ஃப்லிம்பேர் விருதைத் தட்டிச் சென்றார். அப்போது தன்னை நிலைநிறுத்திக்கொள்ள கமர்ஷியலாக ஒரு வெற்றி தேவைப்பட, பாலிவுட்டின் சம்பிரதாய ரோலான ப்ளேபாய் கதாபாத்திரத்தில் தீபிகா படுகோன் உட்பட மூன்று நாயகிகளுடன் ‘பச்னா ஏ ஹஸினோ’ படத்தில் தோன்றினார். தன் தந்தையின் பாடலை ரீமிக்ஸ் எல்லாம் செய்து நடனத்தில் அசத்தியவருக்கு இந்தப் படம் பெரிய வெற்றியாக அமைந்தது.

ஆரம்பக் காலத்தில் மாஸ் மற்றும் க்ளாஸ் என இரட்டைக் குதிரையில் சவாரி செய்த ரன்பீர், தரமான முயற்சிகளையும் எடுக்கத் தவறவில்லை. 2009-ல் ‘அஜப் ப்ரேம் கி கஜப் கஹானி’ போன்ற முழு காமெடி என்டர்டெயினரைக் கொடுத்த ரன்பீர்தான் அதே வருடத்தில் ‘வேக் அப் சிட்’ என்ற நெகிழ்ச்சியான டிராமாவையும் கொடுத்தார். இலக்கின்றித் திரியும் பணக்கார கல்லூரி மாணவன் ஒருவன் தன்னுடைய சுயத்தையும் காதலையும் கண்டறியும் கதையில் கொங்கனா சென்னுடன் நடித்திருப்பார். அதே வருடம் கார்ப்பரேட் அரசியலில் கபடி ஆடும் காமெடி டிராமா ‘ராக்கெட் சிங்: சேல்ஸ்மேன் ஆஃப் தி இயர்’ படத்தில் நடித்தவர், இந்த மூன்று படங்களுக்கும் சேர்த்துச் சிறந்த நடிகருக்கான ஜூரியின் ஃப்லிம்பேர் விருதை வென்றார்.வெற்றிகள், ஸ்க்ரிப்ட் தேர்வுகள் என எல்லாவற்றிலும் தேர்ந்தவராகத் தன்னை நிரூபித்துவிட்ட ரன்பீருக்குத் தற்போது தன்னை ஒரு சிறந்த நடிகனாக நிறுவ ஒரு மாபெரும் ப்ரேக் தேவைப்பட்டது. தன் கரியரில் அடுத்த கட்டத்துக்கு நகர இது அவசியம் என்பதை அவருமே உணர்ந்திருந்தார். இயக்குநர் இம்தியாஸ் அலி ‘ராக்ஸ்டார்’ படத்துடன் வந்தார்.

சூப்பர் ஸ்டாருக்கும் மேல!

தன் காதலியை மறக்க முடியாத இசைக் கலைஞனின் வாழ்க்கைப் பயணத்தை எவ்வித சமரசமுமின்றி திரையில் கொண்டு வந்து நிறுத்தினார் ரன்பீர். அவனின் கோபம், விளையாட்டுத் தனம், தவறுகள், காதல் உணர்வு, விரக்தி, தோல்வி, வெறுப்பு, திறமை என அனைத்துமே அத்தனை யதார்த்தமாக வெளிப்பட்டன. திரையில் ரன்பீர் மறைந்து ஜனார்தன் எனும் அந்த ஜோர்டன்தான் தெரிந்தான். இதற்காக ரன்பீர் இரண்டு ஃப்லிம்பேர் விருதுகளை வென்றார். படம் பல ரசிகர்களின் மனதை வென்று க்ளாசிக் அந்தஸ்தைப் பெற்றது. இனி ரன்பீரே நினைத்தாலும் ராக்ஸ்டாரைத் தாண்டவே முடியாது என்றே தோன்றியது. அடுத்த ஆண்டே வெளியான ‘பர்ஃபி’ இந்த எண்ணத்தைப் புரட்டிப் போட்டது. காது கேட்காத, வாய் பேச முடியாத பர்ஃபியாக கசிந்துருகி காதல் செய்த ரன்பீர், ஆட்டிஸக் குறைபாடு கொண்ட ஜில்மில்லாகத் தோன்றிய பிரியங்கா சோப்ராவுக்கு இணையாக இதில் ஸ்கோர் செய்தார். ராக்ஸ்டாரை வெறுத்தவர்கள்கூட ‘பர்ஃபி’ மூலம் ரன்பீரின் பின்னால் நின்றனர். 2012-ம் ஆண்டுக்கான இந்தியாவின் அதிகாரபூர்வ ஆஸ்கர் போட்டிக்கான படமாக இது தேர்ந்தெடுக்கப்பட்டது. ரன்பீரை உலகமே அறிந்துகொண்டது. 2012-ல் சத்தமே இல்லாமல் மீண்டும் காதல், நட்பு, கனவு காணும் இளைஞன் என ஒரு ஜாலியான, அதே சமயம் நெகிழ்வை ஏற்படுத்தும் ரொமான்ஸ் டிராமாவான ‘ஏ ஜாவனி ஹை தீவானி’ படத்தில் நடித்தார். பண்ணி எனும் கபிராக அட்டகாசம் செய்திருப்பார் ரன்பீர். குறிப்பாக அவரின் நடனமும் தீபிகாவுடன் அவருக்கு இருந்த கெமிஸ்ட்ரியும் பெரியளவில் பேசப்பட்டது. ஆனால் இதன் பிறகுதான் ரன்பீரின் சரிவு தொடங்கியது. தன்னை ஒரு மாஸ் ஹீரோவாக நிலைநிறுத்த, தந்தை ரிஷி கபூருடன் ‘பேஷாராம்’ படத்தில் நடித்தார். படத்துக்கு மிகப்பெரிய ஓப்பனிங் கிடைத்தும் படுதோல்வியடைந்தது. அதேபோல் அனுராக் காஷ்யப் இயக்கத்தில் அதிக பொருட்செலவில் உருவான ‘பாம்பே வெல்வெட்’ படமும் பெரிய தோல்வியைச் சந்தித்தது. ‘ராக்ஸ்டார்’ இம்தியாஸ் அலியுடன் மீண்டும் ‘தமாஷா’ படத்துக்காக இணைந்தார். படத்தின் கதையும், ரஹ்மானின் இசையும் பேசப்பட்டாலும் அதுவும் தோல்வியே அடைந்தது.உடனடியாக ஒரு பெரிய வெற்றி தேவைப்பட்ட நிலையில் கரண் ஜோஹர் இயக்கத்தில் உருவானது ‘ஏ தில் ஹே முஷ்கில்’. அனுஷ்கா ஷர்மா, ஐஸ்வர்யா ராயுடன் கைகோத்து மீண்டும் ஓர் இசைக் கலைஞனின் காதல் கதையைச் சொன்னார் ரன்பீர். அதே சமயம், ‘பர்ஃபி’ இயக்குநருடன் மீண்டும் கைகோத்த ‘ஜக்கா ஜஸூஸ்’ எனும் பரீட்சார்த்த முயற்சி தோல்வியடைய, வெற்றியை நோக்கி ஓடுவதை நிறுத்தினார் ரன்பீர். சர்ச்சை நடிகர் சஞ்சய் தத்தின் வாழ்க்கை வரலாறான ‘சஞ்சு’ படத்தில் சஞ்சய் தத்தாகவே வந்து நின்றார். உடல்மொழி, உடல்வாகு, கண் அசைவு என எல்லாவற்றிலும் சஞ்சய் தத்தான் தெரிந்தார். ‘3 இடியட்ஸ்’ புகழ் ராஜ்குமார் ஹிராணி இயக்கிய இந்தப் படம் மாபெரும் வசூல் சாதனை படைத்தது.தொடர் தோல்விகள் கற்றுத் தந்த பாடத்தினாலோ என்னவோ, இப்போது சற்று நிதானமாகவே செயல்படுகிறார் ரன்பீர். 2018-ல் வெளியான ‘சஞ்சு’வுக்குப் பிறகு ரன்பீரின் படம் எதுவுமே வெளியாகவில்லை. அவரின் கரியரிலேயே படங்கள் வெளியாகாத ஆண்டாக 2019-20 அமைந்துவிட்டது. அடுத்து ‘ஷம்ஷேரா’ என்ற பீரியட் படமும், ‘பிரம்மாஸ்த்ரா’ என்ற ஃபேன்டஸி படமும் பெரிய பட்ஜெட்டில் தயாராகி வருகின்றன.

சூப்பர் ஸ்டாருக்கும் மேல!

“எனக்கென்று எந்த ஃபார்முலாவும் இல்லை. முழுமனதோடு கடினமாக உழைக்கிறேன், அவ்வளவே! எனக்கென்று ஒரு இமேஜைக் கட்டமைக்க வேண்டும் என்றெல்லாம் நான் முயற்சி செய்யவில்லை. நான் படங்களை விற்க முயலும் ஒரு நடிகன் மட்டுமே” என்கிறார் ரன்பீர். சாக்லெட் பாய் இமேஜுக்காக பலரும் பாலிவுட்டில் இன்றுவரை உழைத்துக்கொண்டிருக்க, கிடைத்த அந்த அரியாசனத்தையும் உதறிவிட்டு தனித்துவமிக்க நடிகராக ரன்பீர் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார். என்றோ அவர் உதிர்த்த சூப்பர் ஸ்டார் லட்சியம் இன்று அவர் மனதில் இருப்பதாக தெரியவில்லை. அவரின் தேடல் இப்போது வேறு! சமுத்திரம் சிறியது என வானை அளக்க முற்படும் கலைஞனின் கனவு அது. முன்பே சொன்னதுபோல ரன்பீர் சூப்பர் ஸ்டார் அல்ல, சூப்பர் நடிகன். ஏனென்றால் அது அதற்குமே மேலானது!