Sparsh, Paar, Iqbal போன்ற படங்கள் மூலம் 80'ஸ் காலங்களில் பாலிவுட்டில் புகழ்பெற்ற நடிகரான வளம் வந்தவர் நஸ்ருதீன் ஷா. இவர் நடித்த 'Taj – Divided by Blood' திரைப்படம் 'Zee5' வரும் மார்ச் 3ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
பேரரசர் அக்பரின் மூன்று மகன்கள் தங்கள் தந்தைக்குப் பிறகு முகலாய அரியணைக்கு வருவதற்கு அதிகாரத்திற்கான பெரும் போர் நடத்தப்படுகிறது. இது வரலாற்றில் மிகப் பெரிய போர்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இதுதான் இத்திரைப்படத்தின் கதைக்களம். தர்மேந்திரா, அதிதி ராவ் ஹைதாரி, ஆஷிம் குலாட்டி உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். நஸ்ருதீன் ஷா இதில் அக்பர் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

இதற்கிடையில் நீண்ட காலமாகப் பேரரசர் அக்பர் தனக்கென தனி மதத்தையே உருவாக்க முயற்சித்தார் என்ற விமர்சனத்தை சிலர் முன்வைத்து வந்தனர். இதுபற்றி விளக்கமளித்துப் பேசியுள்ளார் அக்பர் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் நஸ்ருதீன் ஷா.
அண்மையில் நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், "வரலாறு வெற்றியாளர்களால் எழுதப்பட்டது. எப்போதும் வரலாற்றை நீங்கள் வரிகளுக்கு இடையில் படிக்க வேண்டும். நூற்றுக்கணக்கான யானைகள் மற்றும் குதிரைகள் மற்றும் பலவற்றைக் கொண்டு ஒரு பெரிய காட்சியை உருவாக்குவது எளிது. ஆனால், வரலாற்றை மிகச்சரியாக சொல்வது மிகமிகக் கடினம். இருப்பினும், எங்களின் இந்த 'Taj – Divided by Blood' திரைப்படம் யாரையும் புண்படுத்தாது என்று நினைக்கிறேன்.
எனது ஆரம்ப காலங்களில் வரலாற்றைப் பற்றி எனக்கு ஒரு புரிதல் இருந்தது. அப்போது அக்பரின் வரலாறு பற்றிப் படிக்கையில் அக்பர் ஒரு புதிய மதத்தைத் தொடங்க ஆசைப்படுகிறார் என்று எனக்கு சில ஆசிரியர்களால் சொல்லிக் கொடுக்கப்பட்டது. அது முற்றிலும் தவறானது. இதையே நாம் தொடர்ந்து வரலாற்று புத்தகங்களில் படிக்கிறோம், இது முற்றிலும் முட்டாள்தனமானது.
இதைப் பற்றி சரியாகத் தெரிந்துகொள்ள அதிகாரப்பூர்வ வரலாற்றாசிரியர்களை அனுகினேன். அவர்கள் அக்பர் ஒரு புதிய மதத்தைத் தொடங்க முயற்சிக்கவில்லை என்றார்கள். அக்பர் தனிமதம் என 'டின்-இ இலாஹி (Din-e Elahi)' என்ற வார்த்தையைப் பயன்படுத்தியதில்லை. அவர் அதை 'வஹ்தத்-இ இலாஹி(Wahdat-e Elahi)' என்றுதான் அழைத்தார். இறைவன் ஒருவன் என்பதே அதன் அர்த்தம்.

நீங்கள் யாரை வணங்கினாலும், எந்த வடிவத்தில் அவரை வணங்கினாலும் அது பிரச்னையில்லை. நீங்கள் வணங்குவது ஒன்றே ஒன்றுதான், இறைவன் ஒருவன்தான். அதுவே அவருடைய நம்பிக்கையாக இருந்தது. எனவே அவர் தன் பெயரிலும், தனக்கெனவும் ஒரு புதிய மதத்தை உருவாக்க முயற்சிக்கவில்லை. இது நான் அறிந்த உண்மை" என்று கூறினார்.