Published:Updated:

"வாழ்க்கையின் அர்த்தம் வாழ்தலே!"- தேசிய விருது வென்ற `சிச்சோரே' பேசும் நுழைவுத்தேர்வு அரசியல்!

சிச்சோரே

2019-ம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், சிறந்த இந்தித் திரைப்படத்திற்கான விருது சுஷாந்த் சிங் நடித்த 'சிச்சோரே' படத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

"வாழ்க்கையின் அர்த்தம் வாழ்தலே!"- தேசிய விருது வென்ற `சிச்சோரே' பேசும் நுழைவுத்தேர்வு அரசியல்!

2019-ம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், சிறந்த இந்தித் திரைப்படத்திற்கான விருது சுஷாந்த் சிங் நடித்த 'சிச்சோரே' படத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

Published:Updated:
சிச்சோரே

மறைந்த நடிகரான சுஷாந்த் சிங் நடித்து, 'தங்கல்' படத்தின் இயக்குநரான நிதேஷ் திவாரி இயக்கியிருந்த படம் 'சிச்சோரே.' சுஷாந்த் சிங் உயிரோடு இருந்தபோது வெளியான அவரின் கடைசித் திரைப்படம் 'சிச்சோரே'தான். சுஷாந்த் சிங் இறந்தபோதே, அவரின் ரசிகர்கள் இந்த 'சிச்சோரே' படத்தைக் குறிப்பிட்டு தேசிய விருது வழங்க வேண்டும் என இணையதளங்களில் வலுவாகக் கோரிக்கை வைத்திருந்தனர். இப்போது 'சிச்சோரே' படத்திற்குச் சிறந்த இந்திப் படத்திற்கான தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது. ரசிகர்களின் கோரிக்கைக்காகவோ, சுஷாந்த் மீதான அனுதாபத்திற்காகவோ இந்த விருது கொடுக்கப்பட்டிருக்கிறது என எடுத்துக்கொள்ள முடியாது. இந்தப் படம் பேசியிருக்கும் விஷயம் மிகக் கனமானது.

இன்றைய இந்தியாவில் நுழைத்தேர்வுகள் என்பது மிகப்பெரிய பேசுபொருளாகவும் பிரச்னையாகவும் உருவெடுத்துள்ளது. மருத்துவப்படிப்பு தொடங்கி பொறியியல், கலை அறிவியல் படிப்புகள் வரைக்குமேகூட நுழைத்தேர்வுகள் அமல்படுத்தப்பட உள்ளன. இன்னும் ஒன்றிரண்டு ஆண்டுகளில், பள்ளிப்படிப்பை முடிக்கும் எந்த ஒரு மாணவனும் நுழைவுத்தேர்வை எதிர்கொள்ளாமல் கல்லூரிக்குள் காலடி எடுத்து வைக்க முடியாது என்கிற நிலை உருவாகவிருக்கிறது.

சிச்சோரே
சிச்சோரே

தகுதியும் திறமையும் வாய்ந்தவர்களை சலித்து எடுப்பதற்காகவே இந்தத் தேர்வுகள் நடத்தப்படுவதாகச் சொல்லப்பட்டாலும் அரசாங்கங்கள், மாணவர்கள் மத்தியில் இந்தத் நுழைத்தேர்வுகள் ஏற்படுத்தும் எதிர்த் தாக்கத்தை உணர்வதில்லை. ஒரு தேர்வில் தேர்ச்சி பெறுவது என்பதை இந்தியச் சமூகம் இன்னமும் ஒரு கௌரவமான விஷயமாகவே பார்க்கிறது. தேர்வில் தோல்வியடைவதாலேயே ஒரு மாணவன் திறமையற்றவனாக, வாழ்வை இழந்தவனாக பாவிக்கப்படுகிறான். இந்த அற்பமான இந்திய மனநிலையையும், நுழைவுத்தேர்வுகளை மையப்படுத்தி மாணவர்கள்மீது உண்டாக்கப்படும் சமூக அழுத்தங்களையும் கேள்வி கேட்பதுதான் 'சிச்சோரே.'

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

JEE நுழைவுத்தேர்வை எழுதும் சுஷாந்த் சிங்கின் மகன் ராகவ், அந்தத் தேர்வில் தோல்வியுறுகிறான். அந்தத் தோல்வி கொடுக்கும் சமூக அழுத்தமும் விரக்தியும் அவனைத் தற்கொலைக்குத் தூண்ட, மாடியிலிருந்து கீழே குதித்து உயிருக்குப் போராடும் நிலைக்குச் செல்கிறான். மருத்துவர்கள் எவ்வளவோ முயன்றும் மருந்துகளையும் சிகிச்சைகளையும் ராகவின் உடல் ஏற்க மறுக்கிறது. 'உயிருக்குப் போராடுகிற நோயாளிகளுக்கு இந்த உலகத்தில் வாழ வேண்டும் என ஆசை இருக்கும். அந்த ஆசை அவர்களை வேகமாக குணப்படுத்தும். ஆனால், உங்கள் மகனுக்கு வாழ்வதற்கே ஆசையிருப்பதாகத் தெரியவில்லை. அதனால் சிகிச்சைகளுக்கும் அவனின் உடல் ஒத்துழைக்க மறுக்கிறது' என மருத்துவர், ராகவின் நிலையை எடுத்துக் கூறுவார்.

நுழைவுத்தேர்வில் தோற்றதால் தன்னை இந்த உலகம் இனிமேல் ஒரு தோற்றவனாக மட்டுமே அடையாளப்படுத்தும் என்கிற ஒரு பயம் ராகவின் மனதிற்குள் ஓடிக்கொண்டே இருக்கும். படுக்கையில் இருக்கும் ராகவின் இந்த மனவோட்டத்தை மாற்ற சுஷாந்த் அவருடைய கல்லூரிப் பருவத்தில் நடந்த ஒரு ஸ்போர்ட்ஸ் மீட் கதையைச் சொல்ல ஆரம்பிப்பார்.

சிச்சோரே
சிச்சோரே
காலம் காலமாக 'losers' எனப் பட்டம் கட்டப்பட்ட ஹாஸ்டலின் ஒரு ப்ளாக்கைச் சேர்ந்த சுஷாந்த் மற்றும் அவரின் நண்பர்கள் இந்த ஸ்போர்ட்ஸ் மீட் மூலம் அந்த loser டேக்கிலிருந்து எப்படி மீண்டார்கள் என்பதுதான் கதை.

விளையாட்டில் மட்டும்தான் எப்போதும் தோல்வி ஒரு உத்வேகத்தை மட்டுமே பரிசாக அளிக்கும். இன்னும் உழைக்க வேண்டும்... இன்னும் முயல வேண்டும் என்கிற நேர்மறையான எண்ணங்களை விளையாட்டுகள் மட்டுமே ஒவ்வொரு முறையும் தவறாமல் ஏற்படுத்தும். பலருடைய வாழ்க்கைப்பாதையையே விளையாட்டுகள் மாற்றியிருக்கிறது. இந்தப் பின்னணியிலிருந்து, தோற்றுப்போன மன அழுத்தத்தில் உழன்றுகொண்டிருக்கும் மகனுக்கு சுஷாந்த் ஏன் ஸ்போர்ட்ஸை மையப்படுத்திய ஒரு கதையைக் கூறுகிறார் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தன் மகனின் looser மனநிலையைப் போக்க, சுஷாந்த் தன்னுடைய கதையைச் சொன்னால் கடைசியில் அந்தக் கதையில் சுஷாந்த் எப்படியும் ஜெயித்திருக்கத்தானே வேண்டும்?! இங்கே க்ளைமாக்ஸில் சுஷாந்த் தோற்றுப்போவார். சுஷாந்த் மற்றும் அவரின் நண்பர்களை looser எனக் கிண்டல் செய்த எதிரணிதான் சாம்பியனாகும். அதுதான் 'சிச்சோரே' படத்தின் ஹைலைட்டே. இது வெற்றியாளர்களைக் கொண்டாடுவதற்காகவும், வெற்றி பெறுவதற்கான உத்வேகத்தை அளிப்பதற்காகவும் எடுக்கப்பட்ட படம் அல்ல. இது தோற்பது அவமானமல்ல என்பதை உணர்த்துவதற்காக எடுக்கப்பட்ட படம். தன் மகனுக்கு சுஷாந்தும் அதையே உணர்த்த விரும்பினார். வெற்றியின் மீதான புனிதத்தன்மையை ஒன்றுமே இல்லாமல் செய்வதற்காகத்தான், தான் தோற்றுப்போன கதையை மகனிடம் கூறினார் சுஷாந்த்.

சிச்சோரே
சிச்சோரே

''அவ்ளோ போராடியும் நீங்க கடைசில தோத்துட்டீங்கனா உங்களுக்குச் சாகணும்னு தோணலையா?’' – என்ற மகனின் கேள்விக்கு, ''முடிவுகளை வைத்து மட்டுமே உன்னை வெற்றி பெற்றவனாகவும் தோல்வியாளனாகவும் தீர்மானிக்க முடியாது. உன்னால் இயன்றதை முழு முயற்சியோடு செய்தாய் என்றால் அதுவே போதும்'' என சுஷாந்த் பதில் கூற, ராகவுக்கும் வெற்றி தோல்விகளின் மீதான ஒரு புதிய புரிதல் உருவாகத் தொடங்கி அவரது உடலும் சிகிச்சைக்கு ஒத்துழைக்கத் தொடங்கும்.

'வாழ்வில் வெற்றி தோல்வியெல்லாம் ஒரு விஷயமே இல்லை. நாம்தான் அவற்றை நினைத்துப் பெரிதாகக் குழப்பிக் கொள்கிறோம். வாழ்க்கையின் மிக முக்கியமான விஷயம் வாழ்தலே' என்கிற புரிதல் ராகவுக்கு ஏற்படுவதோடு படம் முடியும்.

'Life is a race...' என நண்பன் பட வைரஸ் பாணியில் எந்த ஒரு காரியத்தை எடுத்தாலும், வெற்றி தோல்வி என ஒரு எல்லையை நிர்ணயித்துக்கொண்டு, அதன்வழி உண்டாகும் சமூக அழுத்தங்களால் பதற்றத்துக்குள்ளாகும் அத்தனை பேருக்குமான படம்தான் இந்த 'சிச்சோரே.' நுழைவுத்தேர்வு எழுதும் மாணவனை மையமாக வைத்து எடுத்திருப்பதால் அந்த விஷயங்கள் கூடுதல் கவனம் பெறுகின்றன.

''எல்லார்கிட்டையும் ஜெயிச்சதுக்குப் பிறகு என்ன செய்யணும்னு ஒரு ப்ளான் இருக்கு. ஆனா, ஒருவேளை தோத்துட்டா என்ன செய்யணும், அந்தத் தோல்விய எப்படிக் கையாளணும்னு யாருமே சொல்லிக் கொடுக்குறதில்ல. 10 லட்சம் பேர் எழுதுற பரீட்சைல வெறும் பத்தாயிரம் பேர்தான் செலக்ட் ஆகுறாங்க. மீதம் இருக்குற 9,90,000 பேருக்கும், அவங்க தேர்வுல மட்டும்தான் தோத்திருக்காங்க; வாழ்க்கையில தோற்கலைங்றதை யார் சொல்லிக் கொடுப்பா!?'' என சுஷாந்த் ஒரு வசனம் பேசியிருப்பார். ஒட்டுமொத்த இந்திய மனநிலைக்கும் எதிராகப் பேசப்பட்ட வசனமாகவே இது இருக்கும்.

சிச்சோரே
சிச்சோரே

எதற்கெடுத்தாலும் நுழைவுத்தேர்வு என இறங்கினால் மாணவர்கள் உளவியல்ரீதியாக எவ்வளவு பெரிய தாக்குதலுக்கு உள்ளாவார்கள் என்கிற அச்சத்தையும் சிச்சோரே பல இடங்களில் ஏற்படுத்தும். இத்தனைக்கும் படத்தில் சுஷாந்த் ஒரு பெரும் செல்வந்தராக மெட்ரோ சிட்டியில் வாழ்பவராகத்தான் இருப்பார். எல்லா வசதி வாய்ப்புகளும் வாய்க்கப்பெற்ற சூழலில் இருக்கும் அவரின் பையனுக்கே நுழைவுத்தேர்வுகள் அப்படிப்பட்ட பதற்றத்தைக் கொடுக்கின்றன எனில், சாதாரண ஏழைக்குடும்பத்து மாணவர்களின் மீது நுழைவுத்தேர்வுகள் எவ்வளவு பெரிய வன்முறையாக இருக்கும் என்பதை சிச்சோரே உணர்த்துகிறது.

இதை அப்படியே வெளிப்படையாகப் பேசியிருந்தால் 'சிச்சோரே' இந்த தேசிய விருதுப் பட்டியலிலேயே இருந்திருக்காது. வெளிப்படையாக நுழைவுத்தேர்வுகளுக்கு எதிராகப் பேசாமல், அந்தத் தேர்வுகள் ஏற்படுத்தும் உளவியல் தாக்குதலுக்கு எதிராக மட்டுமே வீரியமாகப் பேசியதால்தான் விருது கொடுக்கப்பட்டிருக்கிறது.

சிச்சோரே
சிச்சோரே

இவ்வளவு சீரியசான விஷயங்களைப் பேசுவதால் படம் பொழுதுபோக்கு அம்சங்களற்ற விருதுப்படமாக ரம்பம் போடும் என யாரும் நினைத்துவிட வேண்டும். இது '3 இடியட்ஸ்', 'PK' போன்ற ராஜ்குமார் ஹிரானி பாணியிலான படம். ஆரம்பம் முதல் முடிவு வரை காமெடியில் கதகளி ஆடியிருப்பார்கள். சுஷாந்தின் நண்பர்களாக சமீபத்திய வைரல்களான வருண் ஷர்மா, நவீன் பொலிஷெட்டி போன்றவர்கள் நடித்திருப்பார்கள். இந்த ஒவ்வொரு கேரக்டருமே நம்முடைய கல்லூரிக் கால கலாட்டா நண்பர்களை அப்படியே ஞாபகப்படுத்திவிடும். ஹீரோயினான ஷ்ரத்தா கபூருக்கு பெரிய வேலை இல்லாதது மட்டுமே படத்தின் ஒரே குறையாக இருக்கும். மற்றபடி, இந்தியப் பெற்றோர்களும் மாணவர்கள் ஒருசேரக் கொண்டாட வேண்டிய படம் இந்த 'சிச்சோரே.'

'வாழ்க்கையின் மிக முக்கியமான விஷயம் வாழ்தல்' எனத் தற்கொலைக்கு எதிரான படத்தில் கடைசியாக நடித்துவிட்டு, சுஷாந்த் சிங் தற்கொலை செய்துகொண்டதுதான் பெரும் சோகம். சுஷாந்த் ரசிகர்களுக்கு இந்த விருது பெரிய ஆறுதலாக இருக்கும்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism