பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக்குக்கும் அவருடைய மனைவி ஆலியா சித்திக்குக்கும் இடையே நீண்ட காலமாக விவாகரத்து பிரச்னை இருந்துவருகிறது.
"வீட்டில் எனக்குச் சாப்பாடு கொடுப்பதில்லை, பாத்ரூம் பயன்படுத்த அனுமதிக்கவில்லை, குழந்தைகளுடன் வீட்டின் முன் அறையில்தான் படுத்து உறங்குகிறேன்" என்று ஆலியா சித்திக்கி தொடர்ந்து நவாசுதீன் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து வீடியோக்களை வெளியிட்டுக் கொண்டிருந்தார். ஆலியா சித்திக்கி முன் வைத்த எந்த ஒரு குற்றச்சாட்டிற்கும் இதுவரைக்கும் பதிலளிக்காமல் மௌனம் காத்து வந்த நவாசுதீன் தற்போது அறிக்கை ஒன்றை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதில், “நான் அமைதியாக இருப்பதால் எல்லா இடங்களிலும் கெட்டவன் என்று அழைக்கப்படுகிறேன். நான் அமைதி காத்ததற்குக் காரணம் என் குழந்தைகள் இதை எங்கேயாவது படித்துவிடுவார்கள் என்றுதான். சமூக ஊடகங்கள், பத்திரிகைகள், ஒரு சில மனிதர்கள் எனச் சிலர் வீடியோவைப் பார்த்து எனது நடத்தையை அவதூறாகப் பேசுவதை ரசிக்கிறார்கள். எனவே நான் சிலவற்றை எடுத்துரைத்து தெளிவுபடுத்த விரும்புகிறேன். முதலில் நானும் ஆலியாவும் பல வருடங்கள் ஒன்றாக இருக்கவில்லை.
நாங்கள் ஏற்கெனவே விவாகரத்து பெற்றுவிட்டோம். எங்கள் குழந்தைகளுக்காக மட்டுமே எங்களுக்குள் புரிதல் இருந்தது. யாருக்காவது தெரியுமா ஏன் என் குழந்தைகள் இந்தியாவில் இருக்கிறார்கள் என்று? 45 நாள்களாக அவர்கள் பள்ளிக்குச் செல்லவில்லை. பள்ளியிலிருந்து எனக்குக் கடிதம் வருகிறது. 45 நாள்களாக என் குழந்தைகள் பணையக் கைதிகளாக வைக்கப்பட்டுள்ளதால் துபாயில் அவர்களின் பள்ளிப்படிப்பை இழக்கிறார்கள்.
அவர்களை வைத்து பணம் பெறுவதற்காக இங்கு அழைத்து வந்திருக்கிறார். ஆலியாவின் மூன்று படங்களுக்கு நான் பல கோடி ரூபாய் நிதி அளித்திருக்கிறேன். பள்ளிக் கட்டணம், பயணம், மருத்துவச் செலவுகள் தவிரக் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் மாதத்திற்கு சுமார் 10 லட்சமும், குழந்தைகளுடன் துபாய்க்குச் செல்வதற்கு முன்பு மாதத்திற்கு 5-7 லட்சமும் என்னிடம் ஆலியா பெற்றிருக்கிறார்.

எனது குழந்தைகளுக்காக அவருக்கு ஆடம்பர காரை வாங்கிக் கொடுத்தேன். ஆனால் ஆலியா அவற்றை விற்று அந்தப் பணத்தை அவரே செலவழித்தார். என் குழந்தைகளுக்காகத் துபாயில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பையும் வாங்கிக் கொடுத்தேன். அதில் வசதியாக வசித்து வந்த ஆலியா, பணத்தை மட்டுமே விரும்புகிறார். அதனால்தான் என் மீதும், என் அம்மா மீதும் பல வழக்குகளைப் போட்டிருக்கிறார். அவருடைய கோரிக்கையின்படி பணத்தைக் கொடுத்துவிட்டால் அந்த வழக்குகளை எல்லாம் திரும்பப் பெற்றுக் கொள்கிறார்.
எனது குழந்தைகள் விடுமுறைக்கு இந்தியா வரும்போதெல்லாம் அவர்களது பாட்டியுடன் மட்டுமே தங்குவார்கள். அப்படியிருக்க அவர்களை நான் எப்படி வீட்டை விட்டு வெளியே அனுப்ப முடியும்? என் நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பதற்காக இதையெல்லாம் செய்கிறார்.

இந்த உலகத்தில் உள்ள எந்தவொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளின் படிப்பிற்கும், எதிர்காலத்திற்கும் இடையூறாக இருப்பதை விரும்ப மாட்டார்கள். இன்று நான் சம்பாதிப்பது எனது இரண்டு குழந்தைகளுக்குத்தான். இதுவரைக்கும் நடந்த அனைத்து வழக்குகளிலும் நான் வெற்றி பெற்றிருக்கிறேன். அன்பு என்பது ஒருவரைத் தடுத்து நிறுத்துவது அல்ல, மாறாகச் சரியான திசையில் பறக்க விடுவதுதான்” என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.