‘வாரிசு’ என்ற ஒற்றைச் சொல்லை வைத்துக்கொண்டு பாலிவுட்டில் பெரும்பாலான நடிகர்களும், நடிகைகளும் இயங்கிக் கொண்டிருக்கின்றனர் என்று தொடர்ந்து கூறப்பட்டுவருகிறது.
அதுமட்டுமன்றி சினிமாப் பின்புலம் இல்லாமல் நடிப்பின் மீது ஆர்வம் கொண்டவர்கள் பாலிவுட் திரையுலகில் நுழைந்தாலும் நீண்ட காலம் நடிக்க முடியாது என்ற குற்றச்சாட்டும் தொடர்ந்து முன்வைக்கப்பட்டுவருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் நடிகை பிரியங்கா சோப்ரா அளித்த பேட்டி ஒன்றில், “பாலிவுட் திரையுலகில் என்னை ஒரு மூலையில் ஒதுக்கினார்கள். சிலர் என்னை நடிக்க வைக்க மறுத்தனர். அங்குள்ளவர்களுடன் எனக்குப் பிரச்னை இருந்தது. அங்கு நடக்கும் அரசியலிலிருந்து எனக்கு ஓய்வு தேவைப்பட்டது. அதனால்தான் ஹாலிவுட்டிற்குச் சென்றேன்” என்று கூறியிருந்தார்.
இவை பரவலாகப் பேசப்பட்டுவந்த நிலையில் பிரியங்கா சோப்ராவின் கருத்துக்கு கங்கனா ரணாவத், மீரா சோப்ரா, விவேக் அக்னிஹோத்ரி, சேகர் சுமன் உள்ளிட்ட பலரும் ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில் ’யாவரும் நலம்’, ’தீராத விளையாட்டுப் பிள்ளை’, ’ஆதிபகவன்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள இந்தி நடிகை நீது சந்திராவும் இதுதொடர்பாகத் தனது ஆதங்கத்தை வெளிபடுத்தியிருக்கிறார்.

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், “நானும் இதுபோன்ற பிரச்னைகளையெல்லாம் சந்தித்திருக்கிறேன். நான் மட்டுமல்ல, நிறைய பேர் இதுபோன்ற பிரச்னைகளைப் பாலிவுட்டில் சந்திக்கின்றனர். நீங்கள் திரைப்படக் குடும்பத்திலிருந்து வரவில்லை என்றால் பாலிவுட் துறையில் பட வாய்ப்புக்காகப் போராட வேண்டும். அதையும் மீறி வாய்ப்பு கிடைத்தால் அது நீண்ட காலத்திற்குப் பிறகே கிடைக்கும். இதனை பிரியங்கா உட்பட பலரும் உணர்ந்திருப்பார்கள். ஆனால் இதுபற்றிப் பேச யாரும் முன்வருவது இல்லை என்பதுதான் விஷயம்” என்று கூறியிருக்கிறார்.