Published:Updated:

ஶ்ரீதேவி பொண்ணும் குன்ஜன் சக்ஸேனாவும் தடைகளைத்தாண்டி பறந்தார்களா... பறப்பார்களா?! #GunjanSaxena

Gunjan Saxena
Gunjan Saxena

சுஷாந்த் தற்கொலைக்குப் பிறகு, நெப்போட்டிஸத்தை ஊக்குவிப்பதாகக் கரண் ஜோஹரின் மீது குற்றச்சாட்டுகள் பாய்ந்தன. இந்தப் படத்தையும் தயாரித்திருப்பது கரண் ஜோஹர்தான். நாயகி, பாலிவுட்டை ஆளும் கபூர் குடும்பத்தின் வாரிசு.

உதம்பூர் ஏர்பேஸ்... விமானப் படை வீரர்களின் வழக்கமான கேலி, கிண்டல்களுக்கு நடுவே அவர்கள் அந்த அறையில் ஒட்டி வைத்திருக்கும் பெண்களின் ஆபாச போஸ்டர்கள் கிழிக்கப்படுகின்றன. ஃப்ளைட் கமாண்டர், "அனைத்து வீரர்களும் இனி சரியாக உடை அணிய வேண்டும். இனி 'பார்' 9 மணிக்கு மூடப்பட்டுவிடும்" என்று அடுத்தடுத்து அதிரடியான அறிவிப்புகளால் அதிர்ச்சி கொடுக்கிறார்.

காரணம், அன்று உதம்பூர் ஏர்பேஸுக்கு முதன்முதலாக ஒரு பெண், பயிற்சி பெற இணைந்திருக்கிறார். அடுத்தடுத்து அங்கே அவளைச் சுற்றி அரங்கேறும் சம்பவங்கள், முழுக்க முழுக்க ஆண்கள் மட்டுமே பெரும்பான்மையாக இருக்கும் ஒரு துறையில் ஒரு பெண் சந்திக்கும் பாலினப் பாகுபாடு குறித்து காட்சிகளாக விரிகின்றன. இங்கே சர்ச்சைக்கு உட்படுத்தப்படுவது ஏதோ சாதாரண கார்ப்பரேட் நிறுவனமல்ல... நம் தேசத்தைப் பாதுகாக்கும் இந்திய விமானப் படை (Indian Air Force). இப்படியான காட்சியமைப்புகளை எதிர்த்து சென்சார் போர்டுக்கு கடுங்கோபத்துடன் காரசாரமாகக் கடிதம் எழுதியிருக்கிறது இந்திய விமானப் படை.

Gunjan Saxena
Gunjan Saxena
கார்கில் போரின் ஒரே வீராங்கனையும் இந்திய விமானப் படையிலிருந்து போருக்குச் சென்ற முதல் பெண் பைலட்டுமான குன்ஜன் சக்ஸேனாவின் வாழ்க்கையைப் பேசுகிறது நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகியிருக்கும் 'Gunjan Saxena' திரைப்படம். இந்தப் படம் சிக்கித் தவிக்கும் சர்ச்சைகளைப் பார்ப்பதற்கு முன், படமாக 'குன்ஜன் சக்ஸேனா' எப்படி எனப் பார்த்துவிடுவோம்.

சிறுவயது முதலே விமானம் ஓட்ட வேண்டும் என்ற ஆசையில் சுற்றும் சிறுமி குன்ஜனுக்கு அவளின் அப்பா உறுதுணையாக இருக்கிறார். குன்ஜனின் தாய் மற்றும் சகோதரனின் எதிர்ப்பை மீறி, அவளின் மனம் விரும்புவதைச் செய்யச் சொல்லி ஊக்குவிக்கிறார் தந்தை. பல போராட்டங்களுக்குப் பிறகு, இந்திய விமானப் படையில் சேர்ந்து பைலட்டாக முயலும் குன்ஜனுக்கு வில்லனாக வந்து நிற்கிறது அங்கு இருக்கும் பாலினப் பாகுபாடு. அதுவரை பெண்கள் அடியெடுத்து வைக்காத, முழுக்க முழுக்க ஆணாதிக்கம் நிறைந்த ஒரு துறையில் சாதிக்க நினைக்கும் குன்ஜன் தடைகளை மீறி உயரப் பறந்தாரா?

Gunjan Saxena
Gunjan Saxena

மறைந்த நடிகை ஶ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூருக்கு குன்ஜன் சக்ஸேனாவாகப் படம் முழுவதையும் தூக்கிச் சுமக்கும் வேலை. மராட்டிய க்ளாசிக்கான 'சாய்ராட்'டின் பாலிவுட் வெர்ஷன் 'தடக்' படத்தில் அறிமுகமான ஜான்வி பின்னர் நெட்ஃப்ளிக்ஸின் 'கோஸ்ட் ஸ்டோரிஸ்' படத்தின் ஓர் அத்தியாயத்தில் தலையைக் காட்டினாலும் இதுதான் கதாநாயாகியாக இரண்டாவது படம். நிஜ வாழ்வுடன் தொடர்புடைய, வரலாறு படைத்த குன்ஜன் சக்ஸேனா எனும் பவர்ஃபுல் ரோலுக்கு ஏற்ற நடிப்பை வழங்குவதில் பெரிதாகச் சறுக்கியிருக்கிறார் ஜான்வி. விமானப் படை பைலட் விரைப்பாகச் சுற்ற வேண்டும்தான். ஆனால், குழந்தைப் பருவத்திலிருந்தே அப்படி இருக்கும் உடல்மொழியும், எமோஷனல் மனநிலையைச் சரியாகப் பிரதிபலிக்காத முகபாவனைகளும் 'குன்ஜன் சக்ஸேனா' என்ற வெயிட்டான பாத்திரத்துடன் நம்மை ஒன்றவிடாமல் செய்கின்றன.

படத்தின் மிகப்பெரிய பலம் குன்ஜனின் தந்தையாக வரும் பங்கஜ் திரிபாதி. பாலிவுட்டில் 'அக்னிபாத்', 'கேங்க்ஸ் ஆஃப் வாஸேபூர்' உள்ளிட்ட பல படங்கள், தமிழில் 'காலா', ஹாலிவுட்டில் 'எக்ஸ்ட்ராக்ஷன்' எனப் பல படிகளில் ஏறிக்கொண்டிருப்பவர், பிராக்டிகலான அப்பா கதாபாத்திரத்தைத் தெளிவாக உள்வாங்கி திரையில் அப்படியே பிரதிபலித்துள்ளார். ஒவ்வொரு முறையும் தன் மகளுடன் இவர் நடத்தும் உரையாடல் நெகிழ்வை ஏற்படுத்துகிறது. குறிப்பாக, விமானம் ஓட்டுவது மட்டுமே தன் கனவு என்றும், தனக்குத் தேசப்பற்று இல்லையென்றும், தான் செய்வது தவறா என்றும் மகள் குன்ஜன் கேட்பதற்கு இவர் சொல்லும் விளக்கமும்... அந்தத் தெளிவான வசனமும்... டாப் க்ளாஸ்! இப்படியான பார்வைகளைப் படத்தில் இன்னமும் பேசியிருக்கலாமே சாப்? அதற்கான வாய்ப்பும் இப்படியொரு ஸ்க்ரிப்ட்டில் நிறைய இருந்ததே!

Gunjan Saxena
Gunjan Saxena

அதேபோல், 5 லட்சம் காலேஜ் ஃபீஸ் கட்டவே கஷ்டப்படும் நடுத்தரக் குடும்பம் என்று காட்டிவிட்டு, அப்படியொரு பெரிய வீடு, மகள் 10-வது பாஸ் செய்ததற்குச் சொந்தங்கள் அனைத்துக்கும் காஸ்ட்லி பார்ட்டி எனக் கொண்டாடுவதாய் காட்டியிருப்பது என்ன லாஜிக்கோ! எளிமையான குடும்பங்களை, அதன் மனிதர்களை, அப்படியே பிரதிபலிப்பதில் பாலிவுட்டுக்கு என்ன சிக்கல்?!

படத்தின் மற்றொரு பலம், மனுஷ் நந்தனின் ஒளிப்பதிவு. லக்னோவின் தெருக்கள் மற்றும் வீடுகளில் சிரத்தையுடன் நகரும் கேமரா, கார்கில் எல்லை மற்றும் பயிற்சி மையத்தில் ஹெலிகாப்டருடன் பறக்கையில் சிலிர்க்க வைக்கிறது. குறிப்பாகச் சிறுமி குன்ஜன் விமானக் காக்பிட்டிலிருந்து வெளியே பார்த்து ஆச்சர்யப்படும் மேகக் கூட்டங்களின் ஷாட்டும், அவர் முதன்முதலாக ஹெலிகாப்டரை ஓட்டி உயரப் பறக்கும் ஷாட்டும் 'வாவ்' பெயின்ட்டிங்ஸ்!

குன்ஜன் பயிற்சி பெறும் உதம்பூர் பேஸில் பெண்கள் நுழைந்ததில்லை. பெண்களுக்கென தனிக் கழிப்பறையில்லை. சக பைலட்கள் பெண் என்பதால் இவளுக்குப் பயிற்சி கொடுக்க மறுக்கின்றனர். ஊக்குவிக்க வேண்டிய உயரதிகாரியே ஆணாதிக்க மனோபாவத்தில் குன்ஜனை அணுகுகிறார். இப்படியான காட்சியமைப்புகள் பாலினப் பாகுபாட்டைக் கடைப்பிடிக்கும் எந்தவொரு நிறுவனத்துக்கும் பொருந்தும் ஒன்று என்றாலும், இந்திய விமானப் படை இதை முற்றிலும் மறுத்திருக்கிறது. உண்மையை மட்டுமே திரையில் காட்டுவதாக வாக்களித்த கரண் ஜோஹர் தரப்பு, தற்போது படத்தை விற்பதற்காக, ஒரு கதாபாத்திரத்தைப் பெருமைப்படுத்துவதற்காக ஒட்டுமொத்தமாக இல்லாத ஒரு பிரச்னையைச் சொல்லி விமானப் படையைப் பற்றி தவறானதொரு பிம்பத்தைக் கட்டமைத்திருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளது.

Gunjan Saxena
Gunjan Saxena

அது மட்டுமன்றி, அத்தகைய காட்சிகள் ஸ்க்ரிப்ட் மற்றும் டிரெய்லர் வடிவிலிருந்தபோதே அவற்றை நீக்குமாறு தங்கள் தரப்பில் தெரிவித்திருந்ததாகவும் சொல்லியிருக்கிறது விமானப் படை. இப்படியான சர்ச்சைகளை ஆஃப் செய்ய, படத்தில் டிஸ்க்ளைமர்கள் சேர்த்து வெளியிட்டு இருக்கிறார்கள். அதாவது, இது குன்ஜன் சக்ஸேனாவின் வாழ்க்கையைப் பேசினாலும், சினிமாவுக்காக சில விஷயங்கள் திரிக்கப்பட்டிருப்பதாக கார்டு போடுகிறார்கள். அதேப்போல், இந்திய விமானப் படையைப் பெருமைப்படுத்தும் விதமாக சமூக வலைதளங்களில் சில கேம்பெய்ன்களையும் நெட்ஃப்ளிக்ஸ் மற்றும் தயாரிப்புத் தரப்பு நடத்தியுள்ளது. இருந்தும், இது தங்களின் மேல் விழுந்திருக்கும் தவறான பிம்பத்தை மாற்றப்போவதில்லை என சென்சார் போர்டுக்குக் கடுமையாகக் கடிதம் எழுதியிருக்கிறது இந்திய விமானப் படை. இதைத் தாண்டி, நிஜ குன்ஜன் சக்ஸேனாவே படத்தை புரமோட் செய்யும் விளம்பரங்களில் தலையைக் காட்டிக்கொண்டிருக்கிறார் என்பதுதான் இங்கே ஹைலைட்டான விஷயம்!

சுஷாந்த் தற்கொலைக்குப் பிறகு, நெப்போட்டிஸத்தை ஊக்குவிப்பதாகக் கரண் ஜோஹரின் மீது குற்றச்சாட்டுகள் பாய்ந்தன. இந்தப் படத்தையும் தயாரித்திருப்பது கரண் ஜோஹர்தான். நாயகி, பாலிவுட்டை ஆளும் கபூர் குடும்பத்தின் ஒரு வாரிசு. இப்படியான நிலையில், அவரின் நடிப்பு சரியில்லை எனப் பரவலாக வரும் விமர்சனங்கள் இந்த நெப்போட்டிஸ பஞ்சாயத்தை இன்னமும் வீரியமடைய செய்திருக்கின்றன. மற்றொரு குடும்ப வாரிசான அலியா பட்டின் 'சடக் - 2' டிரெய்லர் அங்கே டிஸ்லைக்குகளில் ரெக்கார்டு படைத்துக் கொண்டிருக்கிறது. ஆனால், அலியா பட், ஜான்வியைவிடச் சிறந்த நடிகை என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.

Gunjan Saxena
Gunjan Saxena
#Sadak2dislike இந்தியாவிலேயே அதிகம் வெறுக்கப்படும் சினிமா டிரெய்லர்... ஏன், எதனால், எதற்காக?!

இத்தகைய சர்ச்சைகளில் யார் பக்கம் நியாயம் என்பதற்குள் எல்லாம் போகாமல், இந்த 'குன்ஜன் சக்ஸேனா'வை அணுகினாலும், பாலினப் பாகுபாட்டைத் தாண்டி படம் வேறு எந்தவொரு எல்லைக்கும் பறக்கவில்லை. ஆனால், இரண்டு மணிநேரத்துக்கும் குறைவாக ஓடும் படத்தில் சுவாரஸ்யத்துக்குப் பஞ்சமில்லை என்பதால் 'குன்ஜன் சக்ஸேனா' பெரிய ஏமாற்றமில்லை.

அடுத்த கட்டுரைக்கு