Published:Updated:

மீனாட்சி சுந்தரேஷ்வர்: "ஐயா, ஏ கியா படம் ஹே?!" இதுதான் மதுர தமிழ், மதுர சினிமாவா? ரொம்ப தப்புங்க!

கார்த்தி

மதுரையில் இருக்கும் ஒரு பெரிய பாரம்பரியமான வீட்டில் கதை நிகழ்வதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், படம் முழுக்க வரும் தமிழ் வார்த்தைகள் என்றால் இருபதைத் தாண்டாது.

எதேச்சையாக ஒரு திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. ஆனால், திருக்கல்யாணமாக இருந்தாலும் பிரச்னை இல்லாமல் இருக்காதே. அடுத்து வரும் பிரச்னைகளை எப்படி இருவரும் சமாளிக்கிறார்கள் என்பதுதான் நெட்ஃபிளிக்ஸில் வெளியாகியிருக்கும் 'இந்திப் படம்' மீனாட்சி சுந்தரேஷ்வர்.

BBA படித்திருக்கும் மீனாட்சிக்கு சூப்பர் ஸ்மார்ட் மூளை. எதுவாக இருந்தாலும் ஜாலியாகப் பேசிவிடுவார். எல்லாவற்றுக்கும் மேல் சூப்பர்ஸ்டார் ரசிகை. இன்ஜினியரிங் முடித்து வேலையில்லாமல் இருக்கும் சுந்தரேஷவருக்கோ எதிலும் பெரிய அளவில் நாட்டமில்லை. அப்பாவின் சேலைக் கடையில் அவர்தம் குடைக்குக்கீழ் இருக்கப்பிடிக்காமல் ஐடி பக்கம் வேலை தேடும் இளைஞன். இவர்கள் இருவரும் நிச்சயம் பேச, 'ஓ மணப்பெண்ணே படத்தின் காட்சிகள்' நமக்கு நினைவுக்கு வர, அப்படியெல்லாம் இல்லை என திருமணம் முடித்து வைத்துவிடுகிறார்கள். ஆனால், அதற்கடுத்து புதிய சிக்கல் உருவாகிறது. சுந்தரேஷ்வருக்கு வேலை கிடைக்க; பொய்கள் சூழ; புகுந்த வீட்டுக் கொடுமைகள் சூழ இன்னும் எத்தனை வருஷத்துக்கு இந்த சீரியலே எடுப்பீங்க என்பதாக நீள்கிறது இந்தத் திரைப்படம்.

மீனாட்சி சுந்தரேஷ்வர்
மீனாட்சி சுந்தரேஷ்வர்

மீனாட்சியாக சான்யா மல்ஹோத்ரா. படத்தின் முக்கியமான பிரச்னைக் குறித்த விமர்சனத்திலிருந்து அவரை விடுவிக்கக் காரணமே அவரின் நடிப்புதான். ஒவ்வொரு படத்திலும் 'She is here to stay' என்பதை அழுத்தமாய் நிரூபித்துவருகிறார். இந்த ஆண்டு வெளியான பக்லாய்ட்டிலும் புகுந்த வீட்டுடன் மல்லுக்கு நிற்கும் கதைதான். ஆனால், இதில் வேறோரு பரிமாணத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். சுந்தரேஷ்வராக அபிமன்யூ தஸ்ஸானி. இவரும் குறையொன்றுமில்லை டைப் நடிப்புதான். சரி, படத்தின் முக்கிய பிரச்னைக்கு வருவோம்.

மதுரையில் இருக்கும் ஒரு பெரிய பாரம்பரியமான வீட்டில் கதை நிகழ்வதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், படம் முழுக்க வரும் தமிழ் வார்த்தைகள் என்றால் இருபதைத் தாண்டாது. எல்லா வாக்கியங்களுக்கு முன்பும் வேண்டா வெறுப்பாக 'அப்பா, அக்கா, அண்ணா' என சேர்த்துப் பேசி சோதிக்கிறார்கள். இந்த வார்த்தைளைத்தாண்டி அவர்கள் பேசிய தமிழ் வார்த்தைகள் ஜட்டி, ஜிகர்தண்டா, கறி தோசை.

மதுரையில் தினமும் சாப்பிடும் ஃபேவரைட் டிஷ் என்ன தெரியுமா? கறி தோசை வித் ஜிகர்தண்டா. பஞ்சாப் கல்யாணம், வட கிழக்கு இந்திய திருமணங்கள், ஹிமாச்சால் பழக்க வழக்கங்கள், உத்தரப்பிரதேச திருமணம் என பாலிவுட் தான் நினைத்தைத்தான் இதுவரையில் எல்லா மாநிலங்களுக்குமான பழக்கங்களாகக் காட்டி வந்திருக்கிறது. அந்த வரிசையில் தமிழுக்கு மீனாட்சி சுந்தரேஷ்வரை டிக் அடித்து குதறிவைத்திருக்கிறார்கள்.

மீனாட்சி சுந்தரேஷ்வர்
மீனாட்சி சுந்தரேஷ்வர்

ஆங்காங்கே வந்து விழுகிற தமிழ் வார்த்தைகளும் உதித் நாராயணன் மென்று விழுங்கியதாகத்தான் இருக்கின்றன. அதுவும் பெண் பார்க்கும் படலத்துக்கு பிளேசர் எல்லாம் போட்டுக்கொண்டு வருகிறார் அபிமன்யூ தஸ்ஸானி. கர்த்தரே என புலம்பி முடிக்கலாம் என்றால், அபிமன்யூ அண்ணனின் வசனம் நம் காதில் விழுகிறது. "பஜ்ஜி மஞ்ச வாழைப்பழத்துல போடாதீங்க, சிவப்பு வாழைப்பழத்துல போடுங்க" என்கிறார். வாழைப்பழத்துல போடறது கேரள டிஷ் பழம்பொரி. வாழைக்காய்ல போடறதுதான் பஜ்ஜி. எந்தத் தமிழன் முழு நேரமும் லுங்கி கட்டிக் கொண்டிருக்கிறான் என நினைத்து ஷாருக் கான் லுங்கி டான்ஸ் என ஆடினாரோ, அதைவிட அபத்தமாக தமிழர்களைப் பற்றிய புரிதலுடன் படம் நகர்கிறது. பேருக்குக்கூட தமிழ்நாட்டை இவர்கள் பார்க்கவில்லை என்று தெரிகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Annaatthe விமர்சனம்: சென்னையில் வதம் செய்தால் திருப்பாச்சி, கல்கத்தாவில் காப்பு கட்டினால் அண்ணாத்த!

தமிழ் வளர்த்த மதுரையைத்தான் இப்படிக் குத்திக் குதறி கொத்துப் பரோட்டா போட்டு வைத்திருக்கிறார்கள் என்றால் , சுந்தரேஷ்வர் வேலைக்குச் செல்லும் இடத்தில் நடக்கும் கொடுமைகள் எல்லாம் ஃபேண்டஸி ரகம். அதிலும் இவர்கள் காட்டும் பிரச்னையை எல்லாம் தமிழ் சினிமாக்களே கடந்து சில ஆண்டுகள் ஆகிவிட்டன. உண்மையிலேயே பாலிவுட்டின் பிரச்னைதான் என்ன? ஒட்டுமொத்த இந்தியாவுக்குமான அத்தாரிட்டியாக தன்னை முன்னிறுத்திக்கொண்டு அவர்கள் செய்யும் இப்படியான விஷயங்கள் மன உளைச்சலை உண்டுபண்ணுகிறது. ஷேர்ஷா படத்தைப் பற்றி சில வட இந்திய விமர்சகர்கள் அதிலிருக்கும் ஒலி அழுத்தத் தவறுகள் பற்றி குறிப்பிட்டு எழுதியிருந்தார்கள். இந்தியாவின் பன்முகத் தன்மைதான் அதன் பலம். அதற்காக இப்படி எந்தப் புரிதலும் இல்லாமல் மேம்போக்காக படம் எடுத்து ரசிகர்களைக் கழுவில் ஏற்றாதீர்கள்.

மீனாட்சி சுந்தரேஷ்வர்
மீனாட்சி சுந்தரேஷ்வர்

ஜஸ்டின் பிரபாகரனின் இசையில் பாடல்கள் அனைத்தும் பக்கா. படத்தை எழுதி இயக்கியிருக்கும் விவேக் சோனி அடுத்த முறையாவது வேறொரு மொழியில் படம் இயக்கும்போது, அதைப்பற்றி கிஞ்சித்தேனும் தெரிந்துகொண்டு படம் எடுக்க வேண்டுகிறோம்.

ரஜினியை, பில்டர் காப்பியை, தினமும் பட்டு சட்டை அணியும் முகங்களைக் கடந்து ஒரு தமிழகம் இருக்கிறது. பல ஆண்டுகளாக அப்படித்தான் இருக்கிறது. 'தலைவா தலைவா' என நீங்கள் உச்சி முகர்வதாலேயே ஒரு படம் தமிழ்ப்படமாக மாறிவிடாது. 'மீனாட்சி சுந்தரேஷவர்' எனும் பெயரைத் தவிர படத்தில் எதுவும் தமிழ் இல்லை.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு