Published:Updated:

சல்மான் கான் கார் விபத்து ஏற்படுத்தியதை மையப்படுத்தி உருவான மொபைல் கேமிற்குத் தடை... பின்னணி என்ன?

சல்மான் கான்
சல்மான் கான்

நடிகர் சல்மான் கான் குடிபோதையில் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதை மையமாக வைத்து புதிய வீடியோ கேம் வெளியாகி இருக்கிறது. அதற்கு எதிராக சல்மான் கான் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

நடிகர் சல்மான் கான் கடந்த 2002ம் ஆண்டு குடிபோதையில் அதிகாலையில் கார் ஓட்டி சாலையோரம் உறங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தினார். இதில் ஒருவர் உயிரிழந்தார். பலர் காயம் அடைந்தனர். இந்த வழக்கில் சல்மான்கான் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். தொடர்ந்து, கடந்த 2015-ம் ஆண்டுதான் மும்பை உயர்நீதிமன்றம் இந்த வழக்கிலிருந்து சல்மான் கானை முழுமையாக விடுவித்து உத்தரவிட்டது.

இந்த விபத்தை மையமாக வைத்து புதிதாக வீடியோ கேம் ஒன்று வெளியாகி சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. சல்மான் கான் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்துவது போன்றே வடிவமைக்கப்பட்டுள்ள அந்த வீடியோ கேமிற்கு சல்மான்கான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
செல்மோன் பாய் கேம்
செல்மோன் பாய் கேம்

'செல்மோன் பாய்' என்ற பெயரில் வெளியாகி இருக்கும் அந்த வீடியோ கேமிற்கு தடை விதிக்கவேண்டும் என்று கோரி சல்மான் கான் மும்பை சிவில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு விசாரணையின் போது தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக தனது அனுமதி இல்லாமல் தனது பெயரில் வீடியோ கேம் வெளியாகி இருப்பதாக சல்மான் கான் தெரிவித்தார்.

நானும் நீயுமா - 20: அரசியல் எனும் கிரிக்கெட்டில் ரஜினி டக் அவுட் ஆனது ஏன்?

இதையடுத்து செல்மோன் பாய் வீடியோ கேமிற்கு தடை விதித்த நீதிமன்றம் அதனை கூகுள் பிளேஸ்டோரில் இருந்து அகற்றவேண்டும் என்று வீடியோ கேம் தயாரிப்பாளர்களுக்கு உத்தரவிட்டது. வீடியோ கேமை பார்த்தபோது அதில் உள்ள உருவம் மனுதாரரின் உருவத்தோடு ஒத்துப்போகிறது. இது போன்ற கேம்களை உருவாக்க சம்பந்தப்பட்ட நபர் அனுமதி கொடுக்காத பட்சத்தில் அதனை மீறி வீடியோ கேம் தயாரிப்பது அவரது தனிப்பட்ட உரிமையில் தலையிடுவதாகும். எனவே கூகுள் பிளேஸ்டோர் மட்டுமல்லாது அனைத்து தளத்தில் இருந்தும் செல்மோன் பாய் என்ற வீடியோ கேமை தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள் நீக்கவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

சல்மான் கான்
சல்மான் கான்

இதற்கிடையே நடிகர் சல்மான் கான், அஜய் தேவ்கன், அக்‌ஷய் குமார், அனுபம் கெர் போன்றோர் மீது டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார். 2019ம் ஆண்டு ஐதராபாத்தில் இளம்பெண் ஒருவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்டார். நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை நடிகர்கள் தெரிவித்து இருப்பதாக வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். பாலியல் ரீதியான வழக்குகளில் பாதிக்கப்படும் பெண்ணின் பெயரை வெளியில் சொல்லக்கூடாது என்று சட்டம் சொல்கிறது. மற்றவர்களுக்கு முன் மாதிரியாக இருக்கவேண்டியவர்கள் சட்டத்தை மீறி பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை தெரிவித்து இருப்பது அவர்களின் பொறுப்பற்ற தன்மையை காட்டுவதாக வழக்கறிஞர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு