கில்லி, ஆறு, கந்தசாமி, உத்தமபுத்திரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து புகழ்பெற்றவர், ஆஷிஷ் வித்யார்த்தி. மேலும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட 11 மொழிகளில் 300- க்கும் மேற்பட்ட இந்திய திரைப்படங்களில் நடித்துள்ளார்.
60 வயதான இவர், ரூபாலி பருவா என்ற பெண்ணை நேற்று திருமணம் செய்திருக்கிறார். இது இவரின் 2-வது திருமணம். தமிழில் பல படங்களில் குணச்சித்திர நடிகராகவும், வில்லனாகவும் நடித்து புகழ் பெற்றவர், ஆஷிஷ் வித்யார்த்தி. இவர் 1962 ஆம் ஆண்டு, ஜூன் மாதம் 19 ஆம் தேதியில் அன்று டெல்லியில் பிறந்தார். மேலும், 1986 ஆம் ஆண்டு முதல் இந்திய சினிமாவில் பல மொழிகளில் நடித்து வருகின்றார். 1994 ஆம் ஆண்டில் வெளிவந்த 'த்ரோகால்' (Drohkaal) என்ற ஹிந்தி திரைப்படத்தில் துணை நடிகராக நடித்திருந்தார். இந்த படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றார். மேலும், ஃபிலிம் ஃபேர் உள்ளிட்ட பல விருதுகளையும் வென்றுள்ளார். இவர், AVID MINER என்ற ஒரு நிறுவனத்தையும் நடத்தி வருகின்றார்.
இதில் மோட்டிவேஷனல் ஸ்பீச், கார்ப்பரேட் வொர்க் ஷாப், பாட்கேஸ்ட் மற்றும் கலந்துரையாடல் எனப் பல நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் பல முன்னணி தொழிலதிபர்கள் மற்றும் பல விஐபிகளும் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசுகின்றனர்.

மேலும், இவர் `Ashish Vidyarthi actor vlogs' என்ற யூ ட்யூப் சேனல் ஒன்றையும் வைத்துள்ளார். இதில் 1.4 மில்லியன் சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர். இந்த சேனலில் தொடர்ந்து வீடியோக்களை பதிவிட்டு வருகின்றார். தற்போது இவர், ஹிந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து வருகின்றார். சில படங்கள் வெளியாவதற்கு தாயாராக உள்ளன.ஆஷிஷ் வித்யார்த்தி ஏற்கனவே ஒரு திருமணம் செய்து கொண்டுள்ளார். நடிகை சகுந்தலா பருவாவின் மகளான ராஜோஷி பருவாவை முதலாவதாக திருமணம் செய்து கொண்டார். நடிகர், பாடகர் மற்றும் எழுத்தாளர் என பல துறைகளில் புகழ்பெற்ற கலைஞர், ராஜோஷி பருவா. இத்தம்பதியினருக்கு 23 வயதுடைய ஆர்த் வித்யார்த்தி என்ற ஒரு மகனும் உள்ளார். இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, இருவருமே பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று, அஸ்ஸாம் மாநிலத்தி்ன் கவுஹாத்தியை சேர்ந்த தொழில் முனைவோரான ரூபாலி பருவா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். 50 வயதான இவர், கொல்கத்தாவில் உள்ள 'NAMEG' என்ற ஹேன்ட் மேட் பேஷன் டிசைனிங் கடையை நடத்தி வருகின்றார். இத்திருமணம் குறித்து ஆஷிஷ் வித்யார்த்தி பேசிய போது, "நாங்கள் இருவரும் சந்தித்துக் கொண்டது, ஒரு நீண்ட கதை. அதைப்பற்றி பிறகு சொல்கிறேன். எனது வாழ்கையின் இந்த கட்டத்தில், ரூபாலியை திருமணம் செய்திருப்பது சிறந்த உணர்வைத் தருகிறது. காலையில் நாங்கள் பதிவுத் திருமணம் செய்து கொண்டோம். அதனைத் தொடர்ந்து, மாலையில் எங்கள் குடும்பத்தினருடன் விருந்து நிகழ்வு நடைபெற்றது.” என்று தெரிவித்தார்.

மேலும் இது குறித்து பேசிய ரூபாலி பருவா, "நாங்கள் சில காலத்திற்கு முன்பு சந்தித்துக் கொண்டோம். மேலும், இந்த உறவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல முடிவு செய்தோம். எங்கள் திருமணம் ஒரு குடும்ப நிகழ்வாக இருக்க வேண்டும் என்று நாங்கள் இருவருமே விரும்பினோம்," என தெரிவித்துள்ளார்.தற்போது இவரின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மற்றும் பலரும் இவருக்கு வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.